கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை - நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 26 வயதான அனோஜன் சிவராசா என்ற இளைஞனுக்கு, சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பும், அவரை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச மற்றும் இராஜதந்திர முயற்சிகளும் தற்பொழுது ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி பிறந்த அனோஜன், தனது குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்குவதற்காகவும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் 2025 செப்டம்பர் 4ஆம் திகதி சவூதி அரேபியாவிற்குத் தொழில் நிமித்தம் சென்றடைந்தார்.
அங்கு வெனிஸ் அரேபியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த சூழலில், சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட கருத்துக்கள் அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி அமைக்கும் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
அனோஜன் சிவராசா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மத ரீதியான உணர்வுபூர்வமான பதிவொன்று, சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள சைபர் குற்றவியல் சட்டத்தை மீறியதுடன், மத நிந்தனைக் குற்றச்சாட்டாகவும் பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக நிறுவன மட்டத்தில் எழுந்த நெருக்கடிகளைத் தொடர்ந்து, அவரை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் 2026 ஜூலை முதலாம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சின் வழிகாட்டலில் ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், ஜூலை 2ஆம் திகதி சவூதி பொலிஸாரால் அனோஜன் கைது செய்யப்பட்டார்.
ரியாத் நகரிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஜூலை 26ஆம் திகதி இணையவழித் தொழில்நுட்பத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
அத்துடன் அவரிடமிருந்த இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்பட்டு, கணக்கும் முடக்கப்பட்டது. ஆரம்ப நீதிமன்ற விசாரணைகளின் போது, அனோஜன் தான் செய்த தவறை உணர்ந்து, மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு வாக்குமூலமளித்திருந்தார்.
ஆரம்ப நீதிமன்ற நீதிபதிகள் சவூதி அரச வழக்கறிஞரின் 'ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை நிராகரித்து, சைபர் குற்றவியல் சட்டத்தின் கீழேயே தண்டனை வழங்கியிருந்தனர்.
இத்தீர்ப்பை எதிர்த்து, ஜூலை 30ஆம் திகதி தூதரகத்தின் தலையீட்டுடன் மேன்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அதேவேளையில் சவூதி அரச வழக்கறிஞர் தரப்பும் தண்டனையை அதிகரிக்கக் கோரி மேன்முறையீடு செய்திருந்தது.
செப்டம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில், இலங்கைத் தரப்பின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு, அரச வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி, அனோஜனின் செயல் முஹம்மத் நபியை அவமதிக்கும் கடுமையான மத நிந்தனைக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டு, ஷரீஆ சட்டத்தின் கீழ் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.
இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம், பாராளுமன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து அனோஜனைப் பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத், இந்த விடயத்தில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் இராஜதந்திர மற்றும் சட்ட வழிகளில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்த தொழிலாளி என்பதால், அவருக்கான அனைத்துச் சட்டச் செலவுகளையும் அரசாங்கமே பொறுப்பேற்றுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் சவூதி உயர் நீதிமன்றத்தில் இறுதி மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளதால், அதற்குத் தேவையான சவூதி மற்றும் இலங்கைச் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
இச்சட்டப் போராட்டங்களுக்கு அப்பால், மிக உயர்மட்ட இராஜதந்திர மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பொதுமன்னிப்புக் கோரும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்துக்கு அனுப்பப்படவுள்ள விசேட பொதுமன்னிப்புக் கோரிக்கைக்கான கடிதத்தை நேரில் கையளிப்பதற்காக, பிரதி சபாநாயகர் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மதப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட பிரதிநிதிகள் குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் செல்லவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றும் தனியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடரின்போது சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது.
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரபெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட சட்டக் குழுவொன்று, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாகச் சொந்தச் செலவில் சவூதி அரேபியாவுக்குச் சென்று, அங்குள்ள சட்டத்தரணிகளுடன் இணைந்து மேன்முறையீட்டு சாத்தியக்கூறுகள் மற்றும் மன்னரின் மன்னிப்பைப் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.
இம்முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் அவர்களின் உதவியையும் இலங்கைத் தரப்பு நாடியுள்ளது. சவூதி அரச குடும்பத்துடன் அவர் கொண்டுள்ள நல்லுறவைப் பயன்படுத்தி இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்போராட்டத்தில் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் அம்சமாக, இலங்கையின் முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் காட்டிவரும் மனிதாபிமான ஒருமைப்பாடு அமைந்துள்ளது. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர்களான முனீர் முளப்பர், அர்கம் இல்யாஸ் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சவூதி மன்னருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், அனோஜன் தனது அறியாமையினால் செய்த தவறுக்காக மனப்பூர்வமாக வருந்துவதையும், நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாமிய மத உணர்வுகளுக்கு அவர் வைத்துள்ள ஆழ்ந்த மரியாதையையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அனோஜனின் குடும்பத்தின் கடும் வறுமை நிலை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்திற் கொண்டு, இறைவனின் கருணையைக் கொண்டு அவருக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு அல்லது தண்டனையைக் குறைக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று, இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை, இலங்கை தேசிய சூரா கவுன்சில் மற்றும் முஸ்லிம் கவுன்சில் போன்ற முன்னணி இஸ்லாமிய அமைப்புகளும் சவூதி மன்னருக்குக் கருணை மனுக்களை அனுப்பியுள்ளன. இந்த சகோதரத்துவப் போக்கினை அனோஜனின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளனர்.
அனோஜனின் சகோதரன் ஹம்சின்தன் சிவராசா தெரிவிக்கையில், 'எனது சகோதரனின் விடுதலைக்காக முஸ்லிம் சமூகம் காட்டிவரும் ஆதரவும் ஒருமைப்பாடும் மிகுந்த நெகிழ்ச்சியளிக்கிறது; ஒருசில தனிநபர்களின் வெறுப்புணர்வை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் மதிப்பிட முடியாது என்பதை இது உணர்த்துகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிடம்;இராஜதந்திர அழுத்தங்களை விரைவுபடுத்துமாறு கோரியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை சவூதி செல்லும் தூதுக்குழுவில் பெயரிட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சர்வதேச அளவில் மனித உரிமை மற்றும் இராஜதந்திர வழிகளில் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
அதேநேரம், சவூதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு முழுமையான மதிப்பை அளிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு மற்றும் பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை ஒரு உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகவே அணுகுகின்றனர்.
எனவே, இந்த உணர்வுபூர்வமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேவையற்ற இன, மத முரண்பாடுகளைத் தவிர்த்து, இராஜதந்திர செயற்பாடுகளுக்குப் பாதகமில்லாத வகையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அநுர அரசாங்கம் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அறியாமையால் ஒரு இளைஞன் செய்த தவறினால் அவரது முழு குடும்பமும், தேசமும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இலங்கை அரசு முன்னெடுக்கும் தீவிர இராஜதந்திர முயற்சிகளும், முஸ்லிம் சமூகத்தின் மனிதாபிமானக் கோரிக்கைகளும் சவூதி மன்னரின் கருணைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கின்றது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!