இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்மாதம் செப்டெம்பர் 8 முதல் 10 வரை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொண்ட மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

1988ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த்தின் வருகைக்குப் பிறகு, அதாவது சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் செய்தது இதுவே முதன்முறையாகும்.

புதுடில்லியின் 'அண்டை நாட்டிற்கு முதலிடம்' கொள்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கூட்டுப் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் வலியுறுத்தும் 'மகாசாகர்' தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் இந்த உயர்மட்ட விஜயம் முன்னெடுக்கப்பட்டது.

தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பாதுகாப்பு மாற்றங்கள் மற்றும் பல்தரப்புப் போட்டிகளுக்கு மத்தியில், இந்த விஜயம் வெறும் நட்புறவு விஜயமாக மட்டுமன்றி, பிராந்திய அமைதியை நிலைநிறுத்தும் முக்கிய நகர்வாகக் பார்க்கப்படுகிறது.

கொழும்புக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் சார்பில் சிறப்பான இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொந்த உள்ளிட்ட இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், கொழும்பு கங்காராம விகாரைக்குச் சென்று ஆசி பெற்ற அவர், இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்திலும் உரையாற்றினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளின் போதும், 2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் போது இந்தியா 'ஒபரேஷன் சாகர் பந்து' மூலம் நிவாரணங்களை வழங்கியதையும் சுட்டிக்காட்டிய அவர், 'இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் நம்பிக்கையான தோழனாக துணைநிற்கும்' என்பதை வலியுறுத்தினார்.

வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இரு நாடுகளும் பிணைக்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த அவர், இருதரப்பு உறவுகள் என்பது வெறுமனே அரசாங்க மட்டத்திலான ராஜதந்திரத்துடன் நின்றுவிடாமல், இரு நாட்டு மக்களிடையேயான ஆழமான சமூக உறவாக நிலைபெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த விஜயத்தில் கடல்சார் பாதுகாப்பும் எல்லைக் கண்காணிப்பும் பிரதான விவாதப் பொருளாக அமைந்தன. இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் இலங்கை அமைந்திருப்பதால், சர்வதேச வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு, கடல்சார் எல்லைக் கண்காணிப்பு, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, மனிதக் கடத்தல் ஒழிப்பு மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படைக்கு இடையிலான கூட்டுப் பயிற்சிகளை மேலும் விரிவுபடுத்தவும், நவீன ரடார்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை இலங்கைக்கு வழங்கி திறன் விருத்தியை ஏற்படுத்தவும் இந்தியா உறுதியளித்தது.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எட்டப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமலாக்கம் குறித்தும் இந்த சந்திப்புகளில் திறம்பட மதிப்பாய்வு செய்யப்பட்டது. இலங்கை வான்படையின் எல்-70 ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் உடன்பாடுகளும் இந்த விஜயத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராணுவத் தொழில்சார் கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை இந்த விஜயத்தில் புதிய பரிமாணத்தைப் பெற்றன. இலங்கை ஆயுதப் படைகளின் அதிகாரிகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயர்மட்டப் பயிற்சிகளை மேலும் அதிகரிக்க இந்தியத் தரப்பு ஒப்புக்கொண்டது.

குறிப்பாக, தகவல் அறியும் பரிமாற்றம், இணைய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு களப்பயிற்சிகள் ஆகிய துறைகளில் இலங்கைப் படைகளின் ஆற்றலை விரிவுபடுத்த இந்தியா ஆதரவளிக்கும். இலங்கை ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதிலும், உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரண பராமரிப்பு வசதிகளை உருவாக்குவதிலும் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறை பங்களிக்கவுள்ளது.

இது இலங்கையின் பாதுகாப்புச் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதுடன், தொழில்நுட்ப ரீதியாக தற்சார்பை அடைவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீன உளவுக்கப்பல்கள் மற்றும் கடல்சார் நகர்வுகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் பூகோள அரசியல் ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதை உணர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு கவலைகளை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை இந்த விஜயம் கோடிட்டுக் காட்டியுள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேண வேண்டுமாயின், எந்தவொரு வெளிச்சக்தியும் இந்தியப் பெருங்கடலை இராணுவப் போட்டித்தளமாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் இரு தரப்பும் ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டுள்ளன.

இலங்கை தனது தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பேணும் அதேவேளையில், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு உணர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதை இந்த சந்திப்புகள் பிரதிபலித்தன. பிராந்திய சர்வதேச கூட்டமைப்புகளான 'கொழும்பு பாதுகாப்பு முனையம்' போன்ற அமைப்புகளின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

கடல்சார் தகவல் பரிமாற்ற மையங்களின் மூலம் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, கடல் சூழல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பேரிடர் நிர்வாகத்தில் இணைந்து செயல்படுவது ஆகியவை இந்த கூட்டமைப்பின் முக்கிய கூறுகளாகும். இத்தகைய கூட்டு முயற்சிகள், இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கும் பெரும் தூணாக அமைகின்றன.

சமூக மற்றும் கலாசாரத் தளத்திலும் இந்த விஜயம் முக்கிய தடம் பதித்துள்ளது. இலங்கையின் மத மற்றும் இன நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஆதரவை ராஜ்நாத் சிங் மீண்டும் உறுதிப்படுத்தினார். நாட்டின் அனைத்து சமூக மக்களும் சம உரிமையுடனும் அமைதியுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதில் இந்தியா என்றும் துணையாக இருக்கும் எனக்குறிப்பிட்ட அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் மீள்வாழ்வுத் திட்டங்களுக்கு இந்தியாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடரும் எனவும் தெரிவித்தார். இது பாதுகாப்பு சார்ந்த விவாதங்களுக்கு அப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த உதவியது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், பாதுகாப்பு மற்றும் கடல்சார் துறைகளில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையையும் ஏற்படுத்தியுள்ளது. எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் உடன்பாடுகள், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்வதற்குப் பெரிதும் துணைபுரியும்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை புதிய காலத்தின் சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு, பரஸ்பர நம்பிக்கையுடனும் கூட்டுப் பொறுப்புடனும் முன்னோக்கிச் செல்வதற்கான வலுவான அடித்தளத்தை இந்த விஜயம் அமைத்துக் கொடுத்துள்ளது.

பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் புதிய சவால்கள் தோன்றி வரும் இக்காலக்கட்டத்தில், இலங்கை-இந்திய பாதுகாப்பு கூட்டுறவு என்பது இரு நாடுகளின் வளமான எதிர்காலத்திற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பு அரணுக்கும் இன்றியமையாததாகும்.