இலங்கை அரசியல் வரலாற்றில் 2024 செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மரபுவழி அரசியல் குடும்பங்கள் மற்றும் பாரம்பரியக் கட்சிகளின் ஆதிக்கத்தை நிராகரித்து, 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து, ஊழலற்ற நிர்வாகம், பொருளாதார மறுசீரமைப்பு, சமூக நீதி மற்றும் அரசியல் முறைமை மாற்றம் ஆகிய பிரதான வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

தற்போது அவரது ஆட்சிக்காலம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய தேர்தல் கொள்கைப் பிரகடனத்தின் வாக்குறுதிகள் எவ்வாறான நடைமுறைப்பயன்பாட்டைப் பெற்றுள்ளன, அடைந்துள்ள வெற்றிகள் என்ன, மற்றும் சந்திக்கின்ற சவால்கள் என்ன என்பது குறித்து விரிவாக ஆராய வேண்டியது அவசியமாகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த பிரதான வாக்குறுதிகளில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதாகும். குறிப்பாக, சாதாரண பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரிகளைக் குறைத்தல், தனிநபர் வருமான வரியை சீரமைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துதல் என்பன அவற்றில் அடங்கும்.

ஆட்சியைப் கைப்பற்றியதும், நடைமுறைப் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை முற்றாக நிராகரிக்காமல் அதனுடன் தொடர்ந்து பயணிக்க அநுர அரசு தீர்மானித்தது. இது சர்வதேச நிதிச் சந்தையில் இலங்கையின் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவிய போதிலும், தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவாறு சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளில் பாரிய மாற்றங்களைச் செய்ய முடியவில்லை.

வருமான வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அமைப்பில் சில குறிப்பிட்ட தளர்வுகளைக் கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்ததுடன், பணவீக்கம் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஓரளவு ஸ்திரத்தன்மை பேணப்பட்டது. வெளிநாட்டு கையிருப்பு சீரான நிலைக்கு உயர்ந்ததன் மூலமும், சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம் அதிகரித்ததன் மூலமும் இலங்கை ரூபாவின் மதிப்பு உறுதியடைந்தது.

இருப்பினும், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடன் சுமையிலிருந்து மீள்வதில் இன்னமும் தாமதம் நிலவுகின்றது. அரசாங்கம் பேரியல் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்திய போதிலும், அடிமட்ட மக்களின் கொள்வனவு சக்தி முழுமையாக மீட்சியடையவில்லை என்பது ஒரு பிரதான சவாலாகும்.

அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றியைத்தீர்மானித்த மிக முக்கியமான காரணி 'ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்' என்ற வாக்குறுதியாகும். கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள், திருடப்பட்ட அரசுச் சொத்துக்களை மீட்டெடுத்தல் மற்றும் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்தல் ஆகியவை அவரது பிரசாரத்தின் மையப் புள்ளிகளாக இருந்தன.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும், கிடப்பில் போடப்பட்டிருந்த பல உயர்மட்ட ஊழல் வழக்குகள் மற்றும் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்கள் குறித்து சட்ட அமுலாக்க கட்டமைப்புக்கள் மூலம் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிக அதிகாரங்களுடன் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்யப்பட்டது.

அரசியல் கலாசார மாற்றத்தின் ஒரு பகுதியாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான தேவையற்ற சலுகைகள், வாகன அணிவகுப்புகள், மற்றும் ஆடம்பரச் செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது நேர்மறையான பிம்பத்தை உருவாக்கியது.

மேலும், திறமையான மற்றும் தொழில்சார் நிபுணர்களை அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கும் முறைமை கொண்டுவரப்பட்டது. இருப்பினும், கடந்த கால ஊழல்களில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதில் நிலவும் சட்ட மற்றும் நீதித்துறை சார்ந்த காலதாமதங்கள், பொதுமக்கள் மத்தியில் ஒருவித மந்தமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் குரல், மலையக மக்களின் உரிமைகள் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஆகியவை தேர்தல் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தன. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தெளிவான சமிக்ஞைகளை வழங்கியிருந்தது.

நடைமுறையில், வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த சில தனியார் மற்றும் அரச காணிகள் விடுவிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுப்பிலிருந்த சில அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேர்மறையான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பல வருடங்களாகப் பிற்போடப்பட்டிருந்த மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்ட போதிலும், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தச் செயல்பாடுகளுடன் அதனை இணைத்து கையாள்வதில் தாமதங்கள் நிலவுகின்றன.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் உள்ள அரசியல் சிக்கல்கள் மற்றும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளின் எதிர்ப்பு என்பன அரசாங்கத்திற்கு இன்னமும் ஒரு நுட்பமான சவாலாகவே விளங்குகின்றன.

இலங்கை வரலாற்று ரீதியாக எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் - இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய வல்லரசுகளுக்கு இடையிலான பூகோள அரசியல் போட்டியைச் சமாளிப்பதாகும்.

தனது தேர்தல் கொள்கையில் 'சபக்கச்சார்பற்ற, நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கை' பின்பற்றப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. பதவியேற்ற பிறகு, அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை மதித்து நடப்பதில் மிகுந்த முதிர்ச்சியைக் காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விஜயங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் சுமூகமாக நீடித்தன. அதேவேளை, சீனாவின் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டங்கள் தொடர்பான நிதி மறுசீரமைப்புகளில் நடுநிலையான அணுகுமுறையைக் கையாண்டார்.

அதேநேரம், மேற்கத்திய நாடுகளுடனான வர்த்தக உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. அரசாங்கம் அணிசேராப் போக்கை வெற்றிகரமாகக் கையாண்ட போதிலும், பிராந்திய மூலோபாயத் திட்டங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும்போது ஏற்படும் தேசிய இறையாண்மை சார்ந்த விவாதங்கள் தொடரவே செய்கின்றன.

கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகரிப்பது, 'அஸ்வசும' சமூக நலன்புரித் திட்டத்தை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியானவர்களுக்கு மட்டுமே சென்று சேர்வதை உறுதிசெய்வது போன்றவை பிரதான வாக்குறுதிகளாக இருந்தன. 'அஸ்வசும' திட்டத்தில் இருந்த அரசியல் தலையீடுகள் நீக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உண்மையான ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டது.

தொழில்சார் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு, வரிக் கொள்கைகளில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டின் கல்வி அமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும் அறிவாற்றல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதிலும் நீண்டகாலத் திட்டமிடல் இன்னமும் தொடக்கக் கட்டத்திலேயே உள்ளது.

அநுரகுமார திசாநாயக்கவின் இரண்டு ஆண்டு ஆட்சிக் காலம் என்பது, 'அரசியல் அமைப்பில் தீவிர மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், நடைமுறைச் சாத்தியமான பொருளாதார யதார்த்தத்தைச் சமாளிப்பற்கும் இடையிலான ஒரு சமநிலைப் பயணம்' எனக் கூறலாம்.

ஊழலற்ற ஆட்சிக்கான வலுவான அடித்தளம், அரசியல் பிரமுகர்களின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தியமை, பொருளாதாரத்தில் ஓரளவிலான ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தமை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் நம்பகத்தன்மையை உயர்த்தியமை ஆகியவை பிரதான வெற்றிகளாகும்.

அதேநேரம், தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டவாறு அமைக்கப்பட்ட தீவிர வரி நிவாரணங்களை வழங்க முடியாமை, நீதித்துறை விசாரணைகளின் மெதுவான போக்கு, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் உள்ள தாமதம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதார நிலையை முழுமையாக உயர்த்த முடியாமை என்பன எஞ்சியுள்ள சவால்களாகும்.

ஒட்டுமொத்தத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அநுர அரசு ஒரு நிலையான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. எனினும், எஞ்சியுள்ள மூவாண்டு பதவிக்காலத்தில், பொதுமக்கள் எதிர்பார்க்கும் ஆழமான 'முறைமை மாற்றத்தை' வெறும் நிர்வாக சீர்திருத்தமாக மட்டுமன்றி, மக்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான பூரண தீர்வாக மாற்றுவதிலேயே இந்த அரசாங்கத்தின் வரலாற்று வெற்றி தங்கியுள்ளது.