ஆறா வடுவை ஏற்படுத்திய 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அத்தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான மூன்றாவது வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் கடந்த 22ஆம் திகதியன்று வழங்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டி புனித செபஸ்தியர் தேவாலையம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்களில் 263 பேர் கொல்லப்பட்டதுடன் 526 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதிகள் சுஜீவ நிசங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய அமர்வு, சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக 547 நாட்கள் நாளாந்த அடிப்படையில் 2,300க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கு விசாரணைகளின் போது ஒரு பிரதிவாதி விளக்கமறியலில் மரணமடைந்த நிலையில், எஞ்சிய 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு அவர்களுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டது.

குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படாததால் 9 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டனர்.

நௌஃபர் மௌலவி, கஃபூர் மாமா, மில்ஹான், சாதிக் அப்துல்லா போன்ற பிரதான எதிரிகளுக்கு வழங்கப்பட்ட இத்தண்டனை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலை அளித்திருந்தாலும், இதனுடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டப் போராட்டமும் நீதிக்கான தேடலும் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது.

ஏனெனில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது வெறும் 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுடன் மட்டும் முடிந்துவிட்ட சம்பவமல்ல. இது பல கிளை சம்பவங்களையும், நூற்றுக்கணக்கான வழக்குகளையும் கொண்ட பரந்த பின்னணியைக் கொண்டதாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, இத்தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதிலும் 40க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும், 280க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தீர்ப்பு என்பது தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி புரிந்த ஒரு பகுதியினருக்கான தண்டனை மட்டுமே தவிர, இத்தாக்குதலின் பின்னணியிலிருந்த முழுமையான சதித்திட்டம் மற்றும் அதன் உண்மையான சூத்திரதாரிகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, இத்தாக்குதல் வெறுமனே ஒரு தீவிரவாதக் குழுவினால் மட்டும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக அக்குழுவைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் மூலோபாயச் சதித்திட்டம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே தற்போதைய விசாரணைகள் நகர்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பகுதியினர் இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில், இத்தாக்குதலின் பின்னணியிலிருந்த அரசியல் ரீதியான சதித்திட்டம் தொடர்பான விசாரணைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகளில் அவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் கத்தோலிக்க திருச்சபையால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்த்தன தலா 75 மில்லியன் ரூபாவையும் இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனவே, தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்ற பிரதிவாதிகளுக்கான வழக்கு முடிவுக்கு வந்திருந்தாலும், அரசியல் மற்றும் அதிகார மையங்களை மையமாகக் கொண்ட ஏனைய வழக்குகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே நிலுவையில் உள்ளன.

இவ்வாறான நிலுவையில் உள்ள வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அரச மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அலட்சியங்களும் கவனயீனங்களும் இத்தாக்குதல் நடப்பதற்குச் சாதகமாக அமைந்திருந்தாலும், இச்சதித்திட்டத்தில் இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் அப்படியே நீடிக்கின்றன.

பிரதான சூத்திரதாரியாக இருந்து காய்களை நகர்த்தியவர் யார் என்பதைக் கண்டறிவதே ஒட்டுமொத்த விசாரணைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்.

இருப்பினும், உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதற்கான விசாரணைகள் எந்தளவுக்கு நேர்மையாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்கப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் மத்தியிலும் இன்னமும் நீடிக்கிறது.

ஏனெனில், இந்த விசாரணை வளையத்திற்குள் அதிகாரம் படைத்த அரசியல் தரப்புகளும், சக்திவாய்ந்த படைத்துறை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர். இவ்வாறான பின்னணியில், உண்மைகள் வெளிவருவதைத் தடுக்க முற்படும் சுயநலச் சக்திகளின் தடைகளைத் தாண்டி, முழுமையான புலனாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுமா என்பது பெரிய வினாக்குறியாகவே உள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தின் கருத்துப்படி, நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு திருப்தியளித்தாலும், இதன்பின்னணியில் இருந்து சூழ்ச்சி செய்த பிரதான சூத்திரதாரிகள், மைத்திரிபால சிறிசேன, நிலந்த ஜயவர்த்தன, சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீதான விசாரணைகள் நேர்மையாக நிறைவு செய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்படும்போதே முழுமையான நீதி கிடைக்கும்.

அதுவரை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை அறிந்து கொள்வதற்கான நாட்டு மக்களின் தேடலும், நீதிக்கான நியாயமான எதிர்பார்ப்பும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

குறித்த விசாரணைகளை மேற்படி வழக்குப்போன்று தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தி முடிவுறுத்தும் 'அரசியல் இயலுமை' அநுர அரசுக்கு உள்ளதா என்பது தான் தற்போதுள்ள கேள்வி. ஏனென்றால் பாதுகாப்பு படைகளை பாதுகாப்பதில் அவர்கள் கொண்டிருக்கின்ற விசேட கரிசனைகளுக்கு செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு சான்றுபகிர்கின்றமை குறிப்பிடத்தக்கது.