இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் குறித்த ஆழமான உரையாடல்கள், அண்மையில் கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் 'இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை' எனும் நூல் குறித்த கருத்தாய்வு நிகழ்வில் முன்வைக்கப்பட்டன.

'வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வ்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஷிரால் லக்திலக் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், வட-கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் பிரிவினைக் கோரிக்கைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அரசியல் ஆய்வாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதில் குறிப்பாக கலாநிதி தயான் ஜயதிலக்க முன்வைத்த அவதானிப்புகள் தென்னிலங்கை அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய கலாநிதி தயான் ஜயதிலக்க, அண்மைய சுதந்திர தினத்தின்போது வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட 'கரிநாள்' போராட்டங்கள் குறித்துத் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார்.

கிளிநொச்சி, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் ஏந்தப்பட்டிருந்த பதாகைகள், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போக்கின் சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

'சுதந்திர தினப் போராட்டங்களின்போது ஏந்தப்பட்ட பதாகைகளில் வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலுவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிரிவினைவாதத்தின் ஆரம்பத் தோற்றமாகும். தமிழ் இளைஞர்களின் மனநிலை மீண்டும் பிரிவினை நோக்கித் திரும்புவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்குள்ள ஒரே தெரிவு மாகாண சபைத்தேர்தலை நடத்துவதே ஆகும்' என்று தயான் ஜயதிலக்க வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 'கடந்த கால சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கு பேராசிரியர் பீரிஸ் காரணமல்ல என்றும், தெற்கின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளால் அந்த வாய்ப்பைத் தவறவிட்டன' என்றும் தெரிவித்தார்.

'இந்த இரு கட்சிகளும் இழைத்த தவறின் காரணமாகவே மீண்டும் நாட்டை ஒன்றுபடுத்துவது இன்று பெரும் சவால்கள் நிறைந்த ஒரு விடயமாக உருவெடுத்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு மோசமான பதிவை இட்டுச் சென்றுள்ளது' என்று அவர் கவலை வெளியிட்டார்.

தயான் ஜயதிலக்க தனது உரையில் சீன வரலாற்று அறிஞர் 'சன்சூ'வின் கருத்தை மேற்கோள் காட்டி, இராஜதந்திரத்தில் தன்னை அறிவதைப் போலவே எதிராளியை அறிவதும் முக்கியம் என்றார். அரசாங்கம் விடுதலைப் புலிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவர் கடுமையாக விமர்சித்தார்.

பிரபாகரனுடன் அதிகநேரம் செலவிட்ட ஒரேயொரு இராஜதந்திரி ஹர்தீப் பூரி மட்டுமே என்றும், ஆனால் அரசாங்கத் தரப்பு அவரிடம் பிரபாகரன் பற்றிய பார்வைகளைத் தெரிந்து கொள்ள முயலவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, நோர்வேயின் நடுநிலைமை குறித்து அப்போதே லக்ஷ்மன் கதிர்காமரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் நிருபம் சென் கேள்விகளை எழுப்பியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

எரிக் சொல்ஹெய்ம் புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது தெற்கு சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. 'அமெரிக்காவில் காணப்படும் வாசகத்திற்கு ஏற்ப, குரங்குடன் பேச முடியாது; அதனை ஆட்டுவிப்பவருடன் தான் பேச வேண்டும். அந்த வகையில் பாலசிங்கத்துடன் பேசுவதை விட, பொட்டு அம்மான், சூசை போன்ற ஒருவரை பேச்சுவார்த்தைக்கு அனுப்புமாறு அரசாங்கம் கேட்டிருக்க வேண்டும்' என்று தயான் ஜயதிலக்க இராஜதந்திர நுணுக்கங்களை விளக்கினார்.

அரசாங்கத் தரப்பில் நிலவிய மிகப்பெரிய குறைபாடு, விடுதலைப் புலிகளின் அடிப்படைவாதத் தன்மையைப் புரிந்துகொள்ளாததாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன வழங்க முன்வந்த இடைக்கால நிர்வாக சபையைக் கூட பிரபாகரன் நிராகரித்ததைச் சுட்டிக்காட்டிய தயான், இலக்கை அடையும் வரை சமரசங்களுக்கு இடமளிக்காத ஒரு தரப்புடன் எத்தகைய இராஜதந்திரத்தைக் கையாண்டிருக்க வேண்டும் என்பதைத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் உணரத் தவறினர் என்றார்.

மாத்தையாவைப் பயன்படுத்தி பிரேமதாசவையும், கிட்டுவைப் பயன்படுத்தி இந்தியாவையும் பிரபாகரன் கையாண்ட விதம் ஒரு மிகப்பெரிய அரசியல் சதுரங்கம் என்றும், அதனை எதிர்கொள்ளத் தேவையான ஆழமான புரிதல் கொழும்பு அரசியல் தரப்பிடம் இருக்கவில்லை என்பதும் அவரது வாதமாக இருந்தது.

இந்நிலையில், தனது நூல் கருத்தாய்வு நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் பொருளாதார ரீதியாக மாத்திரம் அணுக முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிந்தவுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் போதும் என்ற எண்ணம் தவறானது என்பது காலப்போக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

'தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு தவறானது. அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஒருபோதும் நாடு முன்னேற்றமடைய முடியாது' என்று பீரிஸ் தனது உரையில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் காட்டும் மந்தகதியை அவர் விமர்சித்தார்.

'குறைந்தபட்சம் ஒரு கருத்தாடல் கூட இன்னும் இடம்பெறவில்லை' என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியா முன்வைத்த 13ஆவது திருத்தத்தின் முக்கியத்துவத்தையும், அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையான தன்மையுடன் செயற்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, புதிய அரசியலமைப்பு என்ற நீண்டகாலச் செயன்முறையை விட, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே சாலச் சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தார்.

'13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும். அதைத் தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடல்களை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமையே மீண்டும் உருவாகும்' என்று சரத் அமுனுகம தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் இறுக்கமான நிலைப்பாட்டிற்கு ஈற்றில் அந்த நிலைப்பாட்டின் பிரகாரமே பதிலளிக்கப்பட்டது இயற்கையானது என்று குறிப்பிட்ட அவர், இன முரண்பாடுகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், நடைமுறையில் சாத்தியமான அதிகாரப் பகிர்வை மாகாண சபைகள் ஊடாக முன்னெடுப்பதே புத்திசாலித்தனம் என்றார்.

ஒற்றையாட்சியை நீக்குதல் போன்ற உணர்ச்சிகரமான கோசங்கள் தெற்கில் மீண்டும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்பதால், சட்டத்திலுள்ள தீர்வை நோக்கி நகர்வதே சிறந்தது என்றும் அதற்குரிய அர்ப்பணிப்பான முன்னகர்வுகள் அவசியம் என்றும் சரத் அமுணுகம குறிப்பிட்டார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் 'இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு' எனும் இந்த நூல், 'நாம் என்ன செய்யக்கூடாது' என்பதை விளக்கும் ஒரு வரலாற்றுப் பாடமாக அமைந்துள்ளது. வட-கிழக்கில் தற்போது வெளிப்பட்டு வரும் பிரிவினைக் கோரிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரே சனநாயக வழி, மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதமின்றி நடத்துவதே என்று ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

தமிழ் இளைஞர்களின் அதிருப்தியைத் தீர்க்கத் தவறினால், வரலாறு மீண்டும் கசப்பான பக்கங்களைத் திறக்கக்கூடும். புதிய யாப்பு என்ற மாயைக்குப் பின்னால் ஓடாமல், ஏற்கனவே சட்டத்தில் இருக்கும் 13ஆவது திருத்தத்தை முறையாகச் செயல்படுத்துவதே தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வலுசேர்க்கும்.

மாகாண சபைகள் ஊடாக நடுநிலை சக்திகள் அதிகாரத்திற்கு வரும்போது மட்டுமே, உண்மையான பேச்சுவார்த்தை மேசைக்கான சமிக்ஞைகள் தோன்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதே ஒட்டுமொத்த அவதானமாகவும் உள்ளது.