இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சி மாற்றங்கள் என்பன வெறும் முக மாற்றங்களாகவே இருந்து வந்துள்ளன என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனுபவபூர்வமாகக் கண்டுணர்ந்துள்ளனர்.

சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் கருத்துச்சுதந்திரம் ஆகிய உன்னத கோஷங்களை முன்வைத்து, மாற்றத்திற்கான தாரக மந்திரத்தோடு ஆட்சிப்பீடமேறிய ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவின் புதிய அரசாங்கமும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்குவதில் முந்தைய ஆட்சியாளர்களின் அதே அடக்குமுறைப் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழர் தாயகத்தில் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், ஈர்க்கப்பட்ட வாக்குகளும் தற்போது அதிகாரத்தின் நிழலில் கரைந்து போயுள்ளன. குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான பாய்ச்சல் தமிழ் இளையோர், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கும் பிரதான ஆயுதமாக மீளவும் பிரயோகிக்கப்படத் தொடங்கியுள்ளது.

சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனின் கைது, உரும்பிராயில் பாடல்களைப் பாடியதற்காகப் பெருங்கலைஞர் சாந்தனின் பிள்ளைகள் இருவர் தடுத்து வைக்கப்பட்டமை, மற்றும் எழுத்தாளர் தீபச்செல்வனின் இரு நூல்கள் விநியோகிக்கப்படாது முடக்கப்பட்டமை போன்ற அடுத்தடுத்த சம்பவங்கள், அநுரகுமாரவின் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் ஆடவும், பாடவும், எழுதவும் கூட சுதந்திரமற்ற திறந்தவெளிச் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்ற கசப்பான யதார்த்தத்தையே பறைசாற்றுகின்றன.

இத்தகைய அடக்குமுறையானது, தமிழ் மக்களின் கருத்துரிமைச் சவாலைத் தீவிரப்படுத்தியிருப்பதுடன், உலக அரங்கில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச தலையீட்டின் அவசியத்தையும், தமிழ் அரசியல்-சமூகச் சூழலில் நிலவும் கட்டமைப்புசார் பலவீனங்களையும் ஒரே நேரத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி, உதயநகர் மேற்கை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதன், அண்மையில் நடைபெற்ற கலைவிழா ஒன்றில் தனது இனத்தின் வரலாற்று வலிகளையும், ஆழமான இழப்புகளையும், தமிழ் மக்களின் கூட்டு மன உணர்வுகளையும் இசை வடிவிலும் பாடல் வரிகள் மூலமும் வெளிப்படுத்தியமைக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கலைப் படைப்பையோ அல்லது பாடலையோ குற்றமாகக் கருதி, ஓர் இளைஞனின் எதிர்காலக் கல்வி, தொழில், சமூக வாழ்வு மற்றும் கலைப் பயணத்தைச் சீரழிக்கும் வகையில் இந்தத் தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது போல, தேர்தல் காலங்களில் இதேதேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றுக் குறியீடுகளையும், நினைவுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வாக்குக் கேட்டுவிட்டு, இன்று அதேநினைவுகளைப் பாடிய இளைஞனைப் பயங்கரவாதியாகச் சித்திரரிப்பது சட்டத்தின் பயன்பாட்டில் உள்ள பாரிய முரண்பாட்டையும் அரசாங்கத்தின் போலித்தனத்தையும் காட்டுகிறது.

சங்கீதனின் கைது மட்டுமன்றி, உரும்பிராய் ஆலயத்தில் தாயக உணர்வுப் பாடல்களைப் பாடியதற்காக மறைந்த பெருங்கலைஞர் சாந்தனின் இரு பிள்ளைகள் கைது செய்யப்பட்டமையும், தமிழினத்தின் கலைத்துவப் பாரம்பரியத்தையும் வரலாற்று நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட கலாசார ஒடுக்குமுறையாகவே பார்க்கப்பட வேண்டும்.

தேசத்தின் ஆன்மா அதன் கலை மற்றும் இலக்கியங்களில்தான் வாழ்கிறது. அந்த ஆன்மாவை நசுக்குவதன் மூலம், தமிழர்களின் கூட்டு நினைவாண்மையை அழித்துவிடலாம் எனப் பேரினவாத அரசு கணக்குப்போடுகிறது.

மறுபுறம், படைப்புச் சுதந்திரத்தின் மீதான இக்கோரப் பாய்ச்சல் இலக்கியத் துறையிலும் கைவைத்துள்ளது. தாயகத்தின் முக்கிய எழுத்தாளரான தீபச்செல்வனின் இரு நூல்கள் 'இரு தேசம்' என்ற உண்மையை எழுதியதற்காகவும், தமிழர்களின் அரசியல் நியாயங்களைப் பேசியதற்காகவும் அதிகார வர்க்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, விநியோகிக்க முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்றுப் பின்னணியை உற்று நோக்கினால், 'இரு தேசம்' என்பது தமிழர்கள் புதிதாகக் கண்டுபிடித்த ஒன்றல்ல. 1799ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவ அரசின் இலங்கைக்கான முதல் செயலாளராகப் பதவியேற்ற சேர். கியூ கிளேகோன், இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசில் இருந்து இலங்கையையும் தமிழகத்தையும் ஆட்சி செய்த காலத்திலேயே, 'இலங்கைத் தீவில் இரு வேறுபட்ட தேசங்கள் பூர்வீகமாக வாழ்கின்றன' என்று தனது புகழ்பெற்ற 'கிளேகோன் நிமிட குறிப்பில்' ஆவணப்படுத்தியுள்ளார்.

அதேபோல், 1857ஆம் ஆண்டில் வரையப்பட்ட 'ஜோன் அரோசிமித்' வரைபடத்திலும், இலங்கைத் தீவானது வட-கிழக்குத் தமிழர்களின் தேசமாகவும், தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகள் சிங்களவர்களின் தேசமாகவும் மிகத் தெளிவான எல்லைப் பாகுபாட்டுடன் வரையப்பட்டுள்ளது.

 இவ்வாறான வரலாற்று உண்மைகளையும், சர்வதேச அங்கீகாரங்களையும் கொண்டுள்ள ஒரு தேசத்தின் சமகால இலக்கியப் படைப்பான தீபச்செல்வனின் நூல்களைத் தடை செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித நியாயமான தார்மீக உரிமையும் கிடையாது.

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுப் பல நாட்களாகியும், பாராளுமன்றத்திலோ அல்லது நீதிமன்றங்களிலோ அதற்காக வாதாடவோ, படைப்புச் சுதந்திரத்தை மீட்டெடுக்கவோ தமிழ் அரசியல்வாதிகளோ, சட்டத்தரணிகளோ எவ்வித ஆக்கபூர்வமான அக்கறையும் காட்டாமல் இருப்பது அபாண்டமானது.

தங்களின் சுயநல அரசியல் பிழைப்புக்காகவும், பதவிகளுக்காகவும் வாழும் தமிழ் அரசியல்வாதிகளின் இத்தகைய மௌனமும் அலட்சியமுமே, சிறிலங்கா அரசாங்கம் தான் நினைத்தபடியெல்லாம் தமிழ் மக்களை நடத்தலாம் என்ற துணிச்சலை ஊட்டியுள்ளது.

அதேநேரம், உலகத் தமிழர்களும் தீபச்செல்வனின் இந்த இழப்பை ஈடுசெய்யக்கூடிய அளவிலான காத்திரமான உதவிகளையோ, செயற்திட்டங்களையோ ஒருங்கிணைக்கத் தவறியுள்ளமை உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழர்களின் செயற்திறனற்ற தேக்க நிலையையே வெளிப்படுத்துகிறது.

இதற்கு இணையாக, தற்போதைய தமிழர்களின் சமூக ஊடகங்களும், வலைத்தளங்களும் தங்களின் பொறுப்பை முற்றாக மறந்து செயற்படுவது பெரும் வேதனையளிக்கிறது.

மக்களின் உண்மையான பிரச்சினைகள், கைதுகள், வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் கலை-இலக்கிய ஒடுக்குமுறைகளுக்குக் குரல் கொடுத்து, அவற்றை உலக அரங்கில் காட்சிப்படுத்துவதை விடுத்து, பொறுப்பற்ற முறையில் ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் திட்டித் தீர்ப்பதன் மூலமும், அவதூறுகளைப் பரப்புவதன் மூலமும் வெறும் பணத்தையும், புகழையும் தேடுவதையே தமது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

விமர்சனம் என்ற பெயரில் ஒழுங்காகச் செயற்படும் சமூக நிறுவனங்களையும், நல்ல படைப்பாளிகளையும் முறிவடைய வைக்கும் கைங்கரியத்தில் இந்தச் சமூகப் பொறுப்பற்ற ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

தமிழர்கள் 'அரசற்ற ஒரு தேச இனம்' என்பதால், தங்களின் மீள்புத்துயிர்ப்பைத் தாங்களே தங்களின் 'மக்கள் இறைமை' மூலம் முன்னெடுக்க வேண்டிய கடினமான சூழலில் உள்ளனர். இதற்கு 'தேசிய ஒருமைப்பாடு' மிக அவசியமான நிபந்தனையாகும். ஆனால், தமிழர்களோ செயற்திட்டங்கள் இன்றி வெற்றுப் பேச்சுக்களால் தங்களுக்குள் மோதி, தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைத்து வருவது துரதிர்ஷ்டவசமானது.

இன்றைய நவீன உலகம், பனிப்போர் காலத்து இருதுருவ அல்லது ஒருதுருவ முனைவாக்கத்தில் இருந்து மாறி, ஒரு பன்துருவ முனைவாக்கம் நோக்கி நகர்ந்துள்ளது. தீவிரப் பொருளாதார தேசியவாதம், உலகமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றம் என்பன இன்றைய உலக அரசியல் ஒழுங்கைத் தீர்மானிக்கும் பிரதான சக்திகளாக மாறியுள்ளன. ஒவ்வொரு நாடும் தனது 'பொருளாதார பாதுகாப்பியலை' மையமாக வைத்தே மக்களைக் கவரும் கொள்கைகளையும், தேசியவாதக் கொள்கைகளையும் உருவாக்கி வருகின்றன.

இறக்குமதிப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதும், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதுமாக 'தாயகப் பொருளாதாரத்தை மீளமைத்தல்' என்ற நோக்கியே உலக வர்த்தகம் நகர்கிறது. இத்தகைய சிக்கலான உலக அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களை தமிழர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இளையவர்களின் அடிப்படை மனித உரிமைகளும், கருத்துச் சுதந்திரமும் மறுக்கப்படும் போது, அது இயல்பாகவே அவர்களின் மத்தியில் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இந்த எதிர்வினைகளைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் அவர்களைப் புதிய 'பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்து, அவர்களின் எதிர்காலத்தை முற்றாகச் சீரழிக்கும் அபாயம் அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே, தமிழர்களின் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்கவும், அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை அச்சமின்றித் தாங்களே தீர்மானிக்கும் வரை அவர்களைப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களின் கீழ் 'ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புப் பிரதிநிதியை' உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே அழுத்தமான கோரிக்கையாகும்.

சொல்லிசைக்கலைஞர் சங்கீதனின் விடுதலையும், தீபச்செல்வனின் நூல்களின் மீட்பும் வெறும் தனிநபர் சார்ந்த பிரச்சினைகள் அல்ல. அவை தமிழ்த் தேசியத்தின் கூட்டுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடையாளப் போராட்டங்களாகும்.