ஜனநாயக நாட்டின் இருப்புக்கும், அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியே பிரதான அடித்தளமாகும். அந்தச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் உச்சகட்டப் பொறுப்பு எவ்வித அரசியல் மற்றும் நிர்வாகத்துறையின் தலையீடுகளுமற்ற பாரபட்சமற்ற, சுதந்திரமான நீதித்துறையிடமே காணப்படுகிறது. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் கட்டாய ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்த முயற்சிகள், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிகத் தீவிரமான விவாதங்களையும் கவலைகளையும் தோற்றுவித்துள்ளன.
கொள்கை ரீதியாக இந்த வயதெல்லை அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இலங்கையில் அது கொண்டுவரப்படும் முறைமை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் உள்நோக்கங்கள் ஆகியவை நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகின்றன.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கம் ஆகிய முதன்மைச் சட்ட அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளும், எச்சரிக்கைகளும் இந்த விவகாரத்தின் பாரதூரமான தன்மையை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பின்படி, குறிப்பாக அரசியலமைப்பின் 107(5) ஆம் பிரிவின் கீழ், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது 65 ஆண்டுகளாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆண்டுகளாகவும் திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசாங்கம் இந்த வயதெல்லையை 68 அல்லது 70 ஆக அதிகரிப்பதற்கான தற்காலிக அரசியலமைப்புத் திருத்த யோசனை ஒன்றை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க முயல்வதே தற்போதைய சர்ச்சையின் மையப்புள்ளியாகும்.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த முன்மொழிவின் உண்மையான ஆபத்து என்பது 68 அல்லது 70 என்ற எண்களின் மதிப்பில் இல்லை. மாறாக, இந்தச் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் கால நேரம், அது கையாளப்படும் விதம், தற்போதைய அரசியலாக்கப்பட்ட சூழல் மற்றும் குறிப்பிட்ட சில தனிநபர்களை இலக்காகக் கொண்டு இது பயன்படுத்தப்படும் தனித்துவமான முறை ஆகியவற்றில் தான் பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது.
உலகெங்கிலும் மாறிவரும் மக்கள் தொகை யதார்த்தங்கள், மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள் மற்றும் மனித ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றின் காரணமாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்த நியாயமான விவாதங்கள் பல நாடுகளில் எழுந்துள்ளன. மூத்த நீதிபதிகள் தங்களின் 65 அல்லது 66 வயதில் அறிவுசார் மற்றும் தொழில்முறைத் திறன்களின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பல முதிர்ந்த ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதற்கான நேர்மறையானதொரு உதாரணத்தை ஐக்கிய இராச்சியத்தில் காண முடியும். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐக்கிய இராச்சியத்தின் நீதி அமைச்சு அனைத்து நீதிபதிகளினதும் கட்டாய ஓய்வுபெறும் வயதை 70 லிருந்து 75ஆக உயர்த்தியது. ஆனால், இந்த மாற்றம் குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைப்பதற்காகவோ அல்லது நிலுவையிலுள்ள தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்துவதற்காகவோ அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி அல்ல.
இதற்கு முன்னதாக, நீதித்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றிலிருந்து 1,000இக்கும் மேற்பட்ட விரிவான ஆலோசனைகளைப் பெற்று, ஒரு பரந்த பொதுக் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பின்னரே இச்சீர்திருத்தம் எதிர்கால நோக்குடன், கட்சிச்சார்பற்ற முறையில் கொண்டுவரப்பட்டது. இதனால் அங்கு நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை 84சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து உயர்வாகவே பேணப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, தற்காலிக மற்றும் தனிநபர் சார்ந்த திருத்தங்கள் எவ்வாறு நீதித்துறையின் நற்பெயரைக் குலைக்கும் என்பதற்கு 2021 இல் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற நிகழ்வு ஒரு கசப்பான உதாரணமாகும். அங்கு நிர்வாகத்துறைக்கு சாதகமானவராகப் பார்க்கப்பட்ட அன்றைய பிரதம நீதியரசர் தனது 70 வது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக சிம்பாப்வே அரசியலமைப்பின் 186 ஆவது பிரிவு மிக அவசரமாகத் திருத்தப்பட்டது.
அர்த்தமுள்ள பொதுக் கலந்தாலோசனைகள் எதுவுமின்றி கொண்டுவரப்பட்ட இத்திருத்தத்தை அந்நாட்டு சட்ட சமூகம் கடுமையாக எதிர்த்ததுடன், உயர் நீதிமன்றமும் இந்த பதவி நீடிப்பு செல்லுபடியாகாது எனத்தீர்ப்பளித்தது.
பின்னர், அரசியலமைப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பைத் தலைகீழாக மாற்றி பிரதம நீதியரசரைப் பாதுகாத்த போதிலும், இந்த அரசியல் தலையீடு அந்நாட்டு நீதித்துறையின் நம்பகத்தன்மையை முற்றாகச் சிதைத்து, அதன் நற்பெயரைக் கடுமையாகப் பாதித்தது. இலங்கை தற்போது இதேபோன்றதொரு சட்டபூர்வத்தன்மை சார்ந்த நெருக்கடியை நோக்கியே பயணிப்பதாக சர்வதேச சட்ட அமைப்புகள் எச்சரிக்கின்றன.
பொதுச் சட்டத்தின் நன்கு நிறுவப்பட்ட அடிப்படைத் தத்துவத்தின்படி, பொதுமக்களின் நம்பிக்கை தான் நீதித்துறையின் இறுதி நாணயமாகும். நீதிமன்றங்களின் சட்டபூர்வத்தன்மை என்பது மக்களின் நம்பிக்கையின் மீதே தங்கியுள்ளது.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கத்தின் தலைவர் டி.எல்.யாப் ஆகியோர் வலியுறுத்துவது போல, தற்போதைய உணர்திறன் மிக்க அரசியல் சூழலில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை தன்னிச்சையாக மாற்றுவது நீதிக்கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும்.
நீதித்துறை என்பது உண்மையில் சுதந்திரமாக இயங்குவது மட்டுமல்லாமல், அது சுதந்திரமாக இயங்குவது போல வெளிப்படையாகவும் மக்களுக்குத் தெரிய வேண்டும்.
நிர்வாகத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே நிலவும் சலுகை அல்லது முறையற்ற பரஸ்பர உறவு ஆகியவற்றின் சிறிய நிழல் கூட சட்டத்தின் ஆட்சியின் அடித்தளத்தையே அரித்துவிடும். தற்போதைய சூழலில் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது என்பது, நீதிமன்றத்தின் இயல்பான சுழற்சி மற்றும் சுதந்திரத்தில் தலையிடுவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவே பொதுமக்களால் தவிர்க்க முடியாமல் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.
இது கடந்த கால நீதித்துறை இணக்கத்திற்கான வெகுமதியாக, அல்லது எதிர்கால நிறுவன இணக்கத்திற்கானவொரு தூண்டுதலா என்ற ஆபத்தான கேள்விகளை மக்களின் மனதில் தோற்றுவிக்கும்.
இத்தகைய தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத திருத்தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறை வரிசைமுறையையும் பாதிக்கும் தன்மையைக் கொண்டவை. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தன்னிச்சையாக நீடிக்கப்படும் போது, அது இளம் நீதித்துறை உறுப்பினர்களின் இயல்பான தொழில்முறை முன்னேற்றத்தையும் பதவி உயர்வுகளையும் தடுத்து நிறுத்துகிறது.
புதிய நீதித்துறை திறமைகளைச் சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் உள்வாங்குவதை இது தடுப்பதுடன், இளம் நீதிபதிகளின் மன உறுதியையும் கடுமையாகக் குலைக்கும். கட்டமைப்புக் கொள்கை சார்ந்தவொரு விவகாரமானது, தனிநபர் சார்ந்த தலையீடாக மாறும் போது, அது நிறுவன ஸ்திரத்தன்மையை முற்றாகச் சிதைத்துவிடும்.
அரசாங்கத்தின் மூன்று பிரிவுகள் குறித்த 'பொதுநலவாய (லெட்டிமர் ஹவுஸ்) கோட்பாடுகள்' 1997ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட 'நீதித்துறை சுதந்திரம் தொடர்பான பீஜிங் பிரகடனம்' ஆகிய சர்வதேச ஆவணங்கள், நீதித்துறையின் பதவிக்காலம் மற்றும் நிறைவேற்றுத்துறையுடனான உறவுகள் குறித்த கடுமையான எல்லைகளை வரையறுக்கின்றன.
லெட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளின்படி, நீதிபதிகள் ஒருபோதும் நிர்வாகத்துறையின் விருப்பத்திற்கு ஏற்ப பணியாற்றுபவர்களாக இருக்கக் கூடாது அல்லது பாராளுமன்ற பெரும்பான்மையின் மாற்றங்களால் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கக் கூடாது. லுக்சம்பர்க் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டபடி, சுதந்திரமான சட்டத் தொழில்முறை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணாகும். இலங்கை அரசாங்கம் இந்த சர்வதேச நெறிமுறைகளை மீறி தன்னிச்சையாகச் செயல்படுவது சர்வதேச அரங்கில் நாட்டின் சட்டக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும்.
சுதந்திரமான நீதித்துறை என்பது ஸ்திரமான காலங்களுக்கான ஆடம்பரம் அல்ல, அது எல்லா நேரங்களிலும், குறிப்பாக சர்ச்சைக்குரிய அரசியல் தருணங்களில் சமூகப் பாதுகாப்பிற்கான முழுமையான தேவையாகும்.
எனவே, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்ட அமைப்புகளின் ஒருமித்த குரலின் அடிப்படையில் பின்வரும் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்:
முதலாவதாக, அரசியலமைப்புத் திருத்தங்களைத் தவிர்த்தலாம். அதன்படி தற்போதைய சூழலில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அவசர அரசியலமைப்புத் திருத்தங்களை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்.
இரண்டாவதாக பங்குதாரர்களுடனான முறையான கலந்தாலோசனையகும். தன்படி, நீதித்துறையில் ஏதேனும் பரந்த கட்டமைப்புச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், பொதுமக்கள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூக பங்குதாரர்களுடன் திறந்த, வெளிப்படையான மற்றும் விரிவான கலந்தாலோசனை செயல்முறைக்கு அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.
மூன்றாவதாக, தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதாகும். அதன்படி உயர் நீதிமன்றங்களின் இறுதிச் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் அபாயத்தைக் கொண்ட எந்தவொரு தற்காலிக மற்றும் தன்னிச்சையான சட்டமன்ற நடவடிக்கைகளையும் எடுப்பதிலிருந்து அரசாங்கம் முற்றிலும் விலகியிருக்க வேண்டும்.
நான்காவதாக, நீதித்துறை சுதந்திரத்தை நமது கூட்டு விருப்பம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தளராத விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டு பாதுகாப்பது தற்காலத்தின் அவசியமான தேவையாகும் என்பதை ஏற்றுக்கொள்வதாகும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!