உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் இதயமாகவும், சர்வதேச வர்த்தகப் பாதைகளின் மூலோபாய மையமாகவும் விளங்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம், சமகாலப் பூகோள அரசியலின் மிக முக்கிய போர்க்களமாக மாறியுள்ளது.
இப்பிராந்தியத்தின் மையப்புள்ளியில் அமைந்துள்ள இலங்கைத் தீவு, தனது புவியியல் அமைவிடத்தின் காரணமாக வரலாற்று ரீதியாகவே வல்லரசுகளின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவு என்பது வெறும் இருதரப்பு வர்த்தகம் அல்லது உதவித் திட்டங்கள் என்ற எல்லையைக் கடந்து, ஆழமான பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் நகர்வுகளின் பின்னணியிலேயே உற்றுநோக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூரின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயம், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அதனோடு பின்னிப்பிணைந்துள்ள இராஜதந்திர முரண்பாடுகளை சர்வதேச அரங்கில் மீளவும் விவாதப் பொருளாக்கியுள்ளது.
உலகில் மிக பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் இலங்கையை அண்மித்தே காணப்படுகின்றன. இப்பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சர்வதேச வர்த்தகத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமானதாகும். இந்த பின்னணியில், கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கைக் கடற்படையின் 'எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு' கப்பலில் வைத்து அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் வெளியிட்ட அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகளாவிய கடல்சார் இணைப்பைப் பலப்படுத்தும் நோக்கில், இலங்கைக் கடற்படைக்கு 'ப்ளீட் ப்ரோட்பான்ட்' (குடநநவடீசழயனடியனெ) செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது.
இந்த அதிநவீன தொழில்நுட்பமானது, சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும், பிராந்திய பேரனர்த்த சூழ்நிலைகளைக் கையாள்வதற்கும் இலங்கைக் கடற்படையின் செயற்திறனை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்ச்சன பனாகொட ஆகியோருடனான சந்திப்பின் போது, இந்தத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலோபாயப் பங்கு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
பாதுகாப்புத்துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினருக்கு கப்பல்களையும், வான்வழி செயற்திறனைப் பெருமளவுக்கு மேம்படுத்துவதற்காக விமானப்படையினருக்கு விமானங்களையும் அமெரிக்கா அண்மைக் காலத்தில் வழங்கியுள்ளது. இந்த இராணுவ உதவிகள் அனைத்தும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது செல்வாக்கையும் கண்காணிப்பையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான பூகோள அரசியல் நகர்வுகளின் ஒரு அங்கமேயாகும்.
இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, நாட்டின் வெளியுறவுக் கொள்கை எத்தகைய திசையை நோக்கி நகரப் போகிறது என்ற கேள்வி சர்வதேச சமூகத்தில் எழுந்தது.
இச்சூழலில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திற்கும் அமெரிக்க இராஜதந்திரியான போல் கபூருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் வெளியுறவு நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைந்தது.
உலகளாவிய விவகாரங்களில் இலங்கை எப்போதும் நடுநிலையானதும், சர்வதேச ரீதியில் இணக்கமானதுமான, அணிசேராக் கொள்கையைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே இலங்கை தொடர்ந்து செயற்படும் என்று அவர் உறுதியளித்தார்.
நெருக்கடியான காலப்பகுதிகளிலும், வெளியகப் பொருளாதார அழுத்தங்களைக் கையாள்வதிலும் அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவிற்கு இலங்கை தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக உருவான உலகளாவிய ஸ்திரமற்ற தன்மையின் போது, இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை தடையின்றிப் பேணுவதற்கு வொஷிங்டன் வழங்கிய ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் நன்றியோடு நினைவு கூர்ந்தது.
அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு என்பது வெறும் பாதுகாப்பு சார்ந்தது மட்டுமல்ல, அது நாட்டின் பொருளாதார வாழ்வாதாரத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதிப் பங்கில், ஒரு தனி நாடாகப் பார்க்கும் போது மிகப் பெரிய பங்கைக் கொண்டிருப்பது அமெரிக்காவே ஆகும். எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேலும் பலப்படுத்துவது இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாதது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கலாநிதி போல் கபூருக்கும் இடையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பணிகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவு செய்ய இரு தரப்பும் உடன்பட்டன.
மேலும், இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த பாதுகாப்பான சூழ்நிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையின் முக்கிய துறைகளில் உள்ள வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய வேண்டும் என அமைச்சர் விஜித்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச மயப்படுத்துவதற்கும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் புதிய அரசாங்கம் முயல்வது தெளிவாகிறது.
இலங்கை இராஜதந்திர ரீதியில் சமநிலையைப் பேண முயன்றாலும், நடைமுறையில் உலக வல்லரசுகளின் நேரடி மோதல்களுக்கு மத்தியில் சிக்குண்டு தவிப்பதையே அண்மைக்கால இராஜதந்திரச் சம்பவங்கள் காட்டுகின்றன. மத்திய கிழக்கின் பதற்றமான சூழலும், உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மையப்படுத்தி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் புவிசார் அரசியல் சதுரங்கமும் இலங்கையின் இராஜதந்திர முதிர்ச்சியைச் சோதிப்பதாக அமைந்தன.
ஈரானால் ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதை அடுத்து, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவர அமெரிக்கா ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களின் 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தித் தோற்கடித்தன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா இத்தீர்மானத்தை ஐநா பொதுச்சபைக்குக் கொண்டு சென்று உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட முயன்றது. இத்தீர்மான உடன்படிக்கையில் தெற்காசியாவின் பிரதான சக்தியான இந்தியா முதன்மையாகக் கையெழுத்திட்டதுடன், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கின. பாகிஸ்தான் தனக்கேயுரிய இராஜதந்திரப் பின்புலத்துடன் இதிலிருந்து விலகிய நிலையில், இலங்கை இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் வொஷிங்டனின் கடுமையான கோபத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் ஐநாவின் நினைவூட்டல்களுக்கு மௌனம் காத்த இலங்கை அரசாங்கம், இறுதியில் 'ஈரான் தரப்பு உள்ளடக்கப்படாமல் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதில் கையெழுத்திட முடியாது' என்று திட்டவட்டமாக அறிவித்தது.
எவ்வித பலமான சர்வதேச அரசியல் பின்புலமும் இன்றி, ஈரானுக்காக வாதாடி அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக்கொண்டமையானது ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையிலுள்ள மூலோபாயத் தடுமாற்றத்தையும், சர்வதேச அரசியலைக் கையாள்வதில் உள்ள முதிர்ச்சியீனத்தையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திர ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கையின் இந்த இராஜதந்திர நிலைப்பாட்டின் விளைவுகள் உடனடி எதிர்வினைகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோரின் திடீர் இலங்கை விஜயமும், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் வெறும் தற்செயலானவை அல்ல.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களை உற்றுநோக்கிய செர்ஜியோ கோர், அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய கடலோர காவற்படைக் கப்பல் ஒப்படைப்பு விழாவில் கலந்துகொள்வதாக இருந்த போதிலும், இறுதி நேரத்தில் அதனை முற்றாகப் புறக்கணித்தார்.
அமெரிக்கா வழங்கிய கப்பல் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பெற்றுக்கொள்ளும் பிரம்மாண்ட விழாவில், அக்கொடையின் பின்னணியில் இருந்த சிறப்புத் தூதுவரே வராமல் தவித்தமையானது, புதிய அரசாங்கத்திற்கு வொஷிங்டன் விடுத்த பகிரங்கமான இராஜதந்திர எச்சரிக்கையாகும்.
இந்த இராஜதந்திரக் கோபத்தின் அடுத்த கட்டமாக, இலங்கையின் பொருளாதார முதுகெலும்பைத் தாக்கும் நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. 'கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலக சந்தைக்கு வருவதைத் தடுக்கத் தவறியமை' என்ற குற்றச்சாட்டின் கீழ், இலங்கை உள்ளிட்ட 45 நாடுகள் மீது மேலும் 12.5 சதவீதம் கூடுதல் சுங்கவரியை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
இது அமெரிக்காவை எதிர்த்தமைக்காக இலங்கையின் ஏற்றுமதித் துறையை இலக்கு வைத்து நடத்தப்படும் ஒரு மறைமுகப் பழிவாங்கல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலகளாவிய அரங்கில் இலங்கை தனது மனிதாபிமானக் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூருடனான சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை விரைவில் நிலையான அமைதியை நோக்கி நகரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் மனிதாபிமானப் பாதுகாப்பிற்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
வல்லரசுகளின் இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியிலும், உலக அமைதிக்கான தனது பங்கை நடுநிலையாக வழங்க இலங்கை விரும்புவதையே ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி காட்டுகின்றது.
எவ்வாறாயினும், அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் அதிருப்திக்கும், பொருளாதார தடைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய சவாலும் இலங்கைக்கு எழுந்துள்ளது. வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒரு பகடைக்காயாக மாறிவிடாமல், தனது தேசிய நலன்களையும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் இலங்கை மிகவும் முதிர்ச்சியடைந்த, தெளிவான மற்றும் மூலோபாய ரீதியான வெளியுறவுக் கொள்கையைக் கையாள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!