ஒரு மனிதனின் அடையாளம், அவனது வாழ்வாதாரம், பண்பாடு மற்றும் உரிமைகள் அனைத்தும் அவன் பிறந்து வளர்ந்த மண்ணோடு பிணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் 'இடப்பெயர்வு' என்பது வெறும் தற்காலிக தங்குமிடம் மாற்றலாக இல்லாமல், தலைமுறைகளைக் கடந்து தொடரும் பெருங்கனவாகவும் மாறாத வடுக்களாகவும் மாறியுள்ளது.

இதற்கு மிகச்சிறந்த, அதேநேரம் மிகக் கொடுமையானதொரு சான்றாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிராந்திய மக்களின் வாழ்வு அமைந்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி, உள்நாட்டு யுத்தத்தின் கோரத்தாண்டவம் காரணமாகத் தமது சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்ட வலி. வடக்கு மக்கள், கடந்த 2026 ஜூன் 15 ஒட்டுமொத்தமாக 36 ஆண்டுகளை அகதிகளாகவும், வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் கழித்து முடித்துள்ளனர்.

முப்பத்தாறு வருடங்கள் என்பது மனித ஆயுளின் பாதி காலம். இத்தனை நீண்ட காலமாய், முட்கம்பி வேலிக்கு அப்பால் இருக்கும் தங்களின் சொந்த நிலத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடும் இந்த மக்களின் அவலமும், அவர்களின் தொடர் போராட்டங்களும் உலக மனச்சாட்சியை உலுக்க வேண்டிய ஒன்றாகும்.

வலிகாமம் வடக்கு பிராந்தியம் என்பது யாழ்ப்பாண குடாநாட்டின் மிக வளமான விவசாய நிலங்களையும், கட்டுக்கடங்காத மீன்வளத்தைக் கொண்ட கடற்பரப்பையும் கொண்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, தையிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வசுவிளான் உள்ளிட்ட பல கிராமங்கள் இப்பிரதேசத்திற்குள் அடங்குகின்றன. 1980களின் பிற்பகுதியில் தீவிரமடைந்த உள்நாட்டுப் போர், 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் ஈழப்போர் என்ற வடிவத்தை எடுத்தது.

1990 ஜூன் மாத தொடக்கத்தில், பலாலி இராணுவ முகாம் மற்றும் காங்கேசன்துறை கடற்படை முகாம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்யவும், பாதுகாப்புப் பலப்படுத்தல்களை மேற்கொள்ளவும் இலங்கை ஆயுதப் படைகள் தீர்மானித்தன.

இதன் விளைவாக, 1990 ஜூன் 15ஆம் திகதி, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி, தங்களின் உடமைகளைக்கூடப் பேணி எடுக்க முடியாத அவசர நிலையில், சொந்த வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். உடுத்திய துணியோடும், கையில் கிடைத்த சில ஆவணங்களோடும் வீதிக்கு வந்த மக்கள், அன்று முதல் 'உள்நாட்டு அகதிகள்' என்ற அவலப் பட்டத்தைச் சுமக்கத் தொடங்கினர். அன்று தொடங்கிய இவர்களின் நாடோடி வாழ்க்கை, பல தசாப்தங்களைக் கடந்தும் தொடருகின்றமை தான் காலத்தின் பெருங்கொடுமை.

மக்களை வெளியேற்றியதைத் தொடர்ந்து, வலி. வடக்கு பிரதேசத்தின் பெரும்பகுதி 'உயர் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை மையப்படுத்தி, இராணுவத்தின் கேந்திரியப் பாதுகாப்புக்காக மக்களின் பூர்வீக நிலங்கள் அனைத்தும் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டன.

விவசாயத்தையே நம்பி வாழ்ந்த கட்டுவன், குரும்பசிட்டி மக்களின் செம்பாட்டு நிலங்களும், மீன்பிடியையே மூலதனமாகக் கொண்ட மயிலிட்டி மக்களின் ஆழ்கடல் பகுதிகளும் இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த மக்களின் வீடுகள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், பலநூறு ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் என்று அனைத்தும் காலப்போக்கில் இராணுவப் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன.

சொந்த நிலத்தில் விவசாயம் செய்து, கடலுக்குச் சென்று தற்சார்புப் பொருளாதாரத்துடன் கம்பீரமாக வாழ்ந்த சமூகம், அரசாங்கத்தின் நிவாரணக் கையேந்தல்களுக்கும், கூலி வேலைகளுக்கும் பழக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவிட்டதாகவும் சர்வதேச அரங்கில் பிரகடனப்படுத்தப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து தற்போது 17 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன.

சாதாரண ஜனநாயகச் சூழலில், யுத்தம் முடிந்தவுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும், அவர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் உலகளாவிய நீதியாகும்.

ஆனால், வலி. வடக்கில் நிலைமை தலைகீழாகவே உள்ளது. போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், அப்பகுதி மக்களின் கணிசமான காணிகளில் இன்னமும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முற்றாக நீங்கிய சூழலிலும், மக்களின் விவசாய நிலங்களிலும், கடற்கரைகளிலும் இராணுவத்தினர் உல்லாச விடுதிகளையும், பண்ணைகளையும், உணவகங்களையும் அமைத்து வணிக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த நிலத்தின் உரிமையாளன் வீதியில் நிற்க, அந்நிய சக்திகள் அந்த நிலத்தின் வளங்களை அள்ளிக்கொண்டிருக்கும் அவலம் இங்கு தொடர்கிறது.

தமது பூர்வீக நிலத்தை மீட்கக் கோரி வலி. வடக்கு மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் வெளியேற்றப்பட்ட 36ஆவது ஆண்டு நிறைவு நாளில் யாழ்ப்பாணத்தில் இரு வேறு வலிமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும், மற்றுமொரு பிரதான பகுதியான பலாலி சந்திக்கு அருகிலும் மக்கள் ஒன்று திரண்டனர். 'எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்', 'இராணுவமே எங்களை வாழ விடு, 'எங்கள் பூர்வீக மண்ணை விட்டு வெளியேறு', '17 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அகதி வாழ்வு எப்போது முடியும்?' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முதியவர்கள், பெண்கள், தங்களின் இளமைக் காலத்தை அகதி முகாம்களிலேயே தொலைத்த இளைஞர்கள் எனப் பலரும் கண்ணீருடனும் ஆக்ரோஷத்துடனும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மட்டுமன்றி, தமிழ் அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டமாக இது வடிவெடுத்திருந்தது. மாவட்ட செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தங்களின் அவல நிலையை விளக்கியும், நிலங்களை விடுவிக்கக் கோரியும் அதிகாரிகளிடம் மனுக்களைக் கையளித்தனர்.

வலி. வடக்கு மக்கள் தங்களின் சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் இருப்பதனால், பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பிரதான பொருளாதாரத் தூண்களாக விளங்கிய மீன்பிடியும் விவசாயமும் இப்பகுதியில் முடக்கப்பட்டதால், நாட்டின் தேசிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் தனிநபர் வருமானமும் பூச்சிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் சிதறி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் சமூகக் கட்டமைப்பு மற்றும் உறவுமுறைகள் சிதைந்துவிட்டன.

இப்பகுதியில் இருந்த புகழ்பெற்ற பாரம்பரியப் பாடசாலைகள் மூடப்பட்டதால், பல தலைமுறை மாணவர்கள் தங்களின் கல்வி உரிமையை தகுந்த சூழலில் பெற முடியாமல் போயுள்ளது.

 

சொந்த ஊர், பூர்வீகம் என்ற அடையாளங்களை இழந்து, அடுத்த தலைமுறையினர் தங்களின் பூர்வீக நிலம் எத்தகையது என்றே தெரியாத ஒரு வரலாற்றுத் துண்டிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாட்டின் குடிமகன், நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழ்வதற்கும், தனது சொந்தச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் சட்ட ரீதியான உரிமை கொண்டவன் ஆவான். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் உள்நாட்டு இடப்பெயர்வு தொடர்பான வழிகாட்டும் தத்துவங்களின்படி, போர்க் காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை எவ்விதப் பாகுபாடுமின்றி அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பான முறையில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும்.

ஆனால்,  மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வலி.வடக்கு நில விடுவிப்பு விவகாரத்தில் ஆமை வேகத்திலான தந்திரோபாயப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

சர்வதேச சமூகத்திற்கு முகம்கொடுப்பதற்காகச் சில நூறு ஏக்கர் நிலங்களை ஆங்காங்கே விடுவித்தாலும், மயிலிட்டி மற்றும் பலாலியின் முக்கிய பகுதிகள் இன்னமும் இராணுவக் பிடியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தேசியப் பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் காட்டி, மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுப்பது சர்வதேச மனித உரிமை மீறலாகும்.

வலி. வடக்கு மக்களின் 36 ஆண்டு கால இடப்பெயர்வு என்பது வெறும் நிலம் சார்ந்த பிரச்சினை அல்ல. அது மனித நேயம் மற்றும் நீதி சார்ந்த பிரச்சினையாகும்.

ஒரு போரின் வடுக்களை ஆற்றுவது என்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உரிமைகளை முழுமையாக வழங்குவதில் தான் தங்கியுள்ளது. துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்து 17 ஆண்டுகள் ஆகியும், இராணுவம் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் நிலைகொண்டிருப்பது நல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

இலங்கை அரசு இனியும் காலத்தைக் கடத்தாமல், வலி. வடக்கு மக்களின் ஒட்டுமொத்தக் காணிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டு, சிவில் நிர்வாகமும் மக்களின் இயல்பு வாழ்வும் நிலைநாட்டப்பட வேண்டும்.

அத்துடன், சிதைந்து போயுள்ள உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்து, மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான நிதி மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.

சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், இந்த மக்களின் பூர்வீக நில உரிமைக்காக இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

முப்பத்தாறு வருடங்கள் கண்ணீரிலும் ஏமாற்றத்திலும் கழிந்த இந்த மக்களின் வாழ்வு, அவர்களின் சொந்த மண்ணில், சொந்த வீட்டின் முற்றத்தில் நிம்மதியாகக் கழியும் நாளே உண்மையான அமைதிக்கான நாளாக அமையும்.