இலங்கையின் கல்வித்துறை என்பது ஆணித்தரமான சமூக மேம்பாட்டிற்கும், சமத்துவ
வாய்ப்புகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.
கல்வி என்பது ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்குமான அடிப்படை உரிமை என்றும், அது
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ததே 20ஆம் நூற்றாண்டின்
நடுப்பகுதியில் முக்கியமான அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது என்பது வரலாறு.
இந்த மாற்றத்துக்குச் செங்கோலாக இருந்தவர் தான் அமைச்சர் டபிள்யூ.டி.கன்னங்கரா.
அவரது வழிகாட்டலில் 1945ஆம் ஆண்டு அறிமுகமான இலவசக் கல்வி கொள்கை,
இலங்கையின் கல்வித் துறையில் புரட்சியைக் ஏற்படுத்தியது, ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது.
கன்னங்கராவின் இலவசக் கல்வி கொள்கை, வர்த்தகமயமாகியிருந்த கல்வியை,
பொதுமக்கள் அனைவருக்கும் உரிய ஒரு அடிப்படைச் சேவையாக மாற்றியது.
அக்காலத்தில் கல்வி பெரும்பாலும் உயர்வர்க்கத்தினருக்கே உரியதாக இருந்து வந்தது.
ஆனால், இலவசக் கல்வி கொள்கை மூலம், சமூகத்தில் ஏழ்மை, பின்தங்கியமை போன்ற
தடைகள் உடைக்கப்பட்டன.
மாணவர்கள் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கல்வி
இலவசமாக வழங்கப்பட்டதோடு, கல்லூரி கட்டணங்களும், பாடப்புத்தகங்களும்
இலவசமாகக் கிடைத்தன.
இக்கொள்கையின் பலனாகவே, கடந்த பல தசாப்தங்களில் இலங்கை, கல்வித்துறையில்
பல சாதனைகளைப் புரிந்து தெற்காசிய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக வலம்
வந்துகொண்டிருக்கிறது.
எனினும், கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள்
மற்றும் கொள்கைத் தடுமாற்றங்களால், இக்கல்வி கட்டமைப்பு பல்வேறு சவால்களை
எதிர்கொண்டது.
இலவசக் கல்வி என்பது கோட்பாடு ரீதியான வழிகாட்டியாக இருந்தாலும், நடைமுறை
அமுல்படுத்தலில் பெரிய இடைவெளிகள் உருவாகின. இது இன,மத முரண்பாடுகளுக்கு
வழிவகுத்தன.
ஆசிரியர் தட்டுப்பாடு, பாடசலைக் கட்டடங்களின் பழமை, தொழில்நுட்ப வசதிகளில்
பின்தங்கியமை, மற்றும் மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் ஆகியவை கல்வியின்
தரத்தில் பின்வாங்கல்களை உருவாக்கின.
இத்தகைய சிக்கல்களை சரிசெய்து, கல்வித் துறையை நவீன உலகத்திற்கேற்ப மாற்றும்
நோக்குடன், 2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் பதவி ஏற்ற
ஹரிணி அமரசூரிய, கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார்.
அவரது முயற்சிகள், புதிய கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை
அடிப்படையாகக் கொண்டதாகும். ஆதனால் அவரது முயற்சிகளில் சில வரவேற்பைப்
பெற்றாலும் மிகக் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
அந்த வகையில் பிரதமர் ஹரிணியின் முக்கிய முயற்சிகளில் ஒன்று – பாடத்திட்டப்
புதுப்பிப்பு. பழைய கல்வி முறைகள், மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும்
அளவுக்கு வலுவாக இல்லை எனும் விமர்சனங்களுக்கு பதிலாக, தொழில்நுட்பம்,
சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், தொழில்முனைவோர் திறன்கள், மற்றும் சமூக நலத்தின்
அடிப்படையிலான பாடங்கள் புதிய பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது
மாணவர்களை நவீன உலகத்திற்கு தயார்ப்படுத்தலை நோக்கமாகக் கொண்டது.
இதேபோல, டிஜிட்டல் கல்வி மற்றும் தொலைக்கல்வி வசதிகளும் விரிவாக்கப்படுகின்றன.
‘ LearnLanka ‘ போன்ற இணையவழி கல்வித் தளங்கள் மற்றும் பாடவீடியோக்கள்
அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்க முயற்சி
மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சி, குறிப்பாக கொரோனா-19 தாக்கத்தால் ஏற்பட்ட
கற்றல் இடைவெளிகளை ஈடு செய்யும் வகையில், நேர்த்தியானதாக உள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தற்காலத்திற்கு ஏற்றவாறு
மிகவும் அபிவிருத்தியடைந்த நவீன முறைகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு
பாடத்திட்டங்கள் மறுசீரமைப்புக்கு அமைய மதிப்பீட்டு நடவடிக்கைகளிலும்
மறுசீரமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
எழுத்து மூல பரீட்சை மற்றும் பரீட்சைகளால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் மாணவர்களை
மீட்பதுடன், அவர்களை அபிவிருத்தியடைந்த உலகத்திற்கு அமைய உருவாக்கும்
வகையில் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான உரையாடல்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வகுப்பறையொன்றில் 25-30மாணவர்களை மட்டும் பேணுவதற்கும், பாடசாலை
நேரத்தினை 30நிமிடங்களால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, இதனை ஆராய்வதற்கான குழுவொன்றும்
நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச மதிய உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், மாணவர்களின்
பாடசாலைவருகையை அதிகரிக்கவும், ஏழை குடும்பங்களை ஊக்கப்படுத்தவும் ஒரு
முக்கிய சமூகநலத் திட்டமாக செயற்படுகிறது. இதற்கொப்பமாக, தமிழ் மற்றும் சிங்கள
மாணவர்களுக்கு சம உரிமையை வழங்கும் நோக்கில் மொழி வழிக்கல்வி சமத்துவம் மீதும்
கவனம் செலுத்தப்படுகிறது. பாடப்புத்தகங்கள், பரீட்சை முறைமைகள் இரு
மொழிகளிலும் ஒரேதரத்தில் அமையப்பட வேண்டும் என்ற அடிப்படையில்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் நல்ல நோக்கங்களுடன் தொடங்கப்பட்ட மாற்றங்களாக இருந்தாலும்,
சில சீரான விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இச்சீர்திருத்தங்களை சில முக்கியமான
அம்சங்களில் குறைகள் காணப்படுவதாக கூறியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, கல்வி என்பது ஒரு மக்கள் பங்குதேடிய செயலாக இருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய மாற்றங்களில் ஆசிரியர்களின் பங்களிப்பு
புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமான குற்றச்சாட்டாகவுள்ளது. கல்வி
என்றால், கற்றல் மட்டுமல்ல, கற்பித்தலும் அதற்கேற்ப தயார் செய்யப்பட
வேண்டியமைப்பும் என்பது அவரது வாதமாகும்.
மேலும், தொழில்நுட்ப வசதிகள் பற்றிய விமர்சனமும் முக்கியத்துவம் பெறுகிறது.
‘LearnLanka’ போன்ற திட்டங்கள், நகர்ப்புற மாணவர்களுக்கு சாத்தியமானதாக
இருந்தாலும், பல கிராமப்புற மாணவர்கள் இன்னும் இணைய வசதியின்றி கல்வியில்
பின்தங்கியுள்ளனர். இது கல்வி சமத்துவத்திற்கு எதிரான ஒரு புதிய பிரச்சினையாக
மாறக்கூடுமென எச்சரிக்கப்படுகிறது.
பாடத்திட்ட மாற்றங்கள், முழுமையாக ஆசிரியர்களுக்கு விளக்கப்படாத நிலையிலும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமையின் காரணமாக
குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. மேலும், மாணவர்களின் உளவியல்
நலத்துக்கும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் ஜோசப் ஸ்டாலின் கருத்து
வெளியிட்டுள்ளார்.
இந்த சவால்களைச் சமாளித்து, கல்வி சீர்திருத்தங்களை தொடர்வதற்கான அடுத்த கட்ட
நடவடிக்கைகள் அவசியமாகின்றன:
•முதலாவதாக, கல்விச் சீர்திருத்தங்கள் தரப்புகள் கலந்த ஆலோசனைகளால் உருவாக
வேண்டியதாய் இருக்க வேண்டும். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,
பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவை அனைத்தும் சீர்திருத்த
நெறிப்படுத்தல்களில் பங்குபெற வேண்டும்.
•இரண்டாவதாக, ஆசிரியர் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய
பாடத்திட்டங்களை கையாளுவதற்கும், டிஜிட்டல் சாதனங்களை பயனுள்ளதாகக் கற்றுத்
தருவதற்கும் ஆசிரியர்கள் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
•மூன்றாவதாக, கல்வித் துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
கல்வியை ஒரு முதலீடாக கருதி, தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள்,
மற்றும் மனித வளம் ஆகியவற்றுக்கான நிதி ஆதரவு உறுதியாக வேண்டும்.
•நான்காவதாக, மாணவர் உளவியல் நலனை கவனத்தில் கொண்டு, பள்ளி மட்டங்களில்
உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் மன
அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாக அமையும்.
•ஐந்தாவதாக, தொழில்முனைவோர் கல்வி மற்றும் வாழ்வுத்திறன் வளர்ச்சி ஆகியவை
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும்
தன்னம்பிக்கையுடன் கூடிய எதிர்காலம் நோக்கி நகர வேண்டுமானால், இது தவிர்க்க
முடியாத விடயமாகும்.
இவ்வாறு, இலங்கை கல்வித் துறையின் நீண்ட வரலாறு, அதன் சீர்திருத்தங்களும், புதிய
முயற்சிகளும், எதிர்காலத்திற்கு முக்கியமான பாதை வகுக்கின்றன. ஹரிணி
அமரசூரியவின் கல்விச் சீர்திருத்தங்கள், நவீன சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களைத்
தயார்படுத்தும் நியாயமான முயற்சியாக இருக்கலாம்.
ஆனால், அது நிலைபேறான மற்றும் பயனுள்ள மாற்றமாக அமைய வேண்டுமானால்,
அனைத்துத் தரப்புகளும் பங்கேற்று செயற்படும், நியாயமானதொரு திட்டமிடல்
அவசியமாகிறது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!