உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டது எனவும், வெறும் சட்டமூலத்தால் மாத்திரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார்.
” நல்லிணக்கம் என்பது மனங்களில் இருந்து எழ வேண்டும். சர்வதேச அழுத்தங்களை சமாளிக்கவே இப்படியான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என எமக்கு தோன்றுகின்றது. இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டுமெனில் பல்லினத்தன்மை ஏற்கப்பட வேண்டும். அத்துடன், நல்லிணக்க விடயத்தில் இதய சுத்தியுடன் நடவடிக்கை அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த முயற்சியும் மந்திரத்தால் மாங்காய் வீழ்த்தும் கதையாகவே அமையும்.” – எனவும் அவர் கூறினார்.
” நாட்டில் அரசமைப்பை முறையாக அமுல்படுத்துங்கள், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துங்கள். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு தேவையற்றது.
ஜனாதிபதி அண்மையில் வடக்குக்கு சென்றார், மத நல்லிணக்கம்மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்றார். மத நல்லிணக்கம் என்பதைவிட இன நல்லிணக்கமே முக்கியம். இந்த ஆணைக்குழு 5 வருடங்களுக்கானது எனக் கூறப்படுவதால் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமாகவே இதனை பார்க்கின்றேன்.
நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கு பதிலாக பெரும்பான்மையின மக்களின் மனங்களில் அரசியல் தலைவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
வடக்க, கிழக்கில் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலை நடத்த முற்படுபவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முற்படவில்ல. ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தலுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். “- எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் குறிப்பிட்டார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!