இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வைக் காண்பதற்கு முன்னேற்பாடாக குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தி, உரியகாலத்தில் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் இழுத்தடிப்பது குறித்து பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான குழு நிலை விவாதம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய குரல்கள், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அரசியல் நாடகத்தை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளன
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இதயசுத்தியுடன் இல்லை என்பதையே தற்போதைய நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ்-முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களின் அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கைக்குச் செவிசாய்ப்பதாகத் தெரிவித்துவிட்டு, தற்போது அதன் உண்மை முகத்தைக் காட்ட முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆளும் ஜே.வி.பி.தலைமையிலான அரசு, 1989ஆம் ஆண்டு மாகாணசபைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது. அந்த ஜே.வி.பி. தற்போதும் நிலைப்பாட்டிலிருந்து மாறாது கனகச்சிதமாக தனது மாகாண சபைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு செல்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்வைத்திருந்த தனிநபர் பிரேரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன சபையில் அறிக்கை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கையில், 'மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஆராய விரைவில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, மிகவும் பொருத்தமான முறையொன்றினைத் தயாரிப்போம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் வெளிப்படுத்தலானது, தேர்தலை மேலும் இழுத்தடிப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார். 'தேர்தலை நடத்த முறையான சட்டம் இல்லை, சட்டம் ஒன்றை அமைத்து தாருங்கள்' என்று ஜனாதிபதி தெரிவிப்பதானது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 'தேர்தலும் இல்லை, பணமும் இல்லை' என்று கூறியதை விடவும் மோசமானது. தற்போதைய ஜனாதிபதியும் தேர்தலுக்கு அஞ்சி 'சட்டம் இல்லை' என்று கூறிநழுவுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
அத்துடன் அவர் கோபத்தின் உச்சத்தில் அரசாங்கத்தின் அறிக்கையைச் சபையில் கிழித்தெறிந்தார். ஏனெனில், அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான உந்துதல் கூட ஜனாதிபதியிடம் இருக்கவில்லை என்பது இந்த நகர்வுகளில் தெளிவாகிறது என்றும் நிஸாம் காரியப்பர் வெளிப்படுத்தினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது என்பதையும், மீண்டும் புதிய குழு ஒன்றை அமைத்து தேர்தலை இழுத்தடிக்கவே முயற்சிக்கிறது என்பதையும் தெளிவாகக் கூறினார்.
அவர், 'வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் இல்லாமல் போய்விட்டது' என்று அவர் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்ற அச்சமே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
ஒரு வருடத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று வழங்கிய வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டே வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அநுரகுமாரவுக்கு ஆணையை வழங்கினர். அந்த ஆணையை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளது எனவும், 'மாகாண சபைத் தேர்தலை தாமதிப்பதற்கு காரணங்கள் இருக்குமாக இருந்தால் அதனை கூறுங்கள். அவ்வாறு இல்லாமல் சட்டத்தின் மீது சுமத்தி, வேறு குழுக்களை அமைத்து இதில் இருந்து நழுவிச் செல்ல முயற்சிக்க வேண்டாம்,' எனவும் வலியுறுத்தினார்.
அந்த புத்தர் சிலை அந்த இடத்தில் இருக்கும் வரையில் இந்த இனவாதமான செயற்பாடு தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதுள்ள அவநம்பிக்கையை ஞாபகமூட்டும் விடயமாகவே அமையும் எனவும் சாணக்கியன் மேலும் சுட்டிக்காட்டினார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து அதற்கு பதிலேதும் வழங்கப்படவில்லை.
முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா, கடந்த கால ஜனாதிபதிகள் (மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க) எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவை நியமிக்காமல் தேர்தலை நடத்தாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவை நியமித்து, இரத்துச் செய்யப்பட்ட எல்லை நிர்ணயத்தை மீளத் தயாரித்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, பின்னோக்கிச் செல்லக் கூடாது என வலியுறுத்தினார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாததற்குக் காரணம் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் சட்டச் சிக்கல்கள் ஆகும். இந்த முறைமை ஊழல்மிக்க விருப்பு வாக்கு முறைமையை இரத்துச் செய்து, கிராமத்துக்குப் பொறுப்புக்கூறும் பிரதிநிதித்துவ முறையையும், 25சதவீத பெண் பிரதிநிதித்துவத்தையும் உருவாக்கியது. மேலும், சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரின் அவதானிப்புகளைக் கருத்திற்கொண்டு, தற்போதைய சிக்கலைத் தீர்க்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்திற்கிணங்க தேவையான எல்லை நிர்ணயத்துடன் கலப்பு முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டங்கள் வரைவு செய்யப்படும் வரை, விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு முடியுமான பிரகாரம் பொருத்தமான சட்டங்களை விதிப்பதற்கு குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசாங்கம் தற்போதைய சட்டமூலத்தை ஏற்க மறுத்து, மீண்டும் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து காலத்தை வீணடிக்கவே முயற்சிக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இந்த அதிகாரங்களை வழங்கவில்லை. பைஸர் முஸ்தபா குறிப்பிட்டதுபோல, 'அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைச் செயற்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை அவமதிப்பதாகக் கருதப்படும்' மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் 11 வருடங்களாக இழுபறி நிலையில் இருப்பது, நாட்டின் ஜனநாயக மரபையும், அரசியலமைப்பு உரிமைகளையும் கேலிக்கூத்தாக்குகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த ஆரம்பத்தின் அடியே இந்தத் தேர்தல் தான் என்பதால், அரசாங்கம் உடனடியாகத் தெரிவுக்குழு அமைத்து இழுத்தடிக்காமல், காலதாமதத்தைத் தவிர்த்து தேர்தலை நடத்துவதற்குரிய உறுதியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!