முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் விவகாரம் ஜெனிவாவில் நேற்று எதிரொலித்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் பொது விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்படட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
“வியான்ன பிரகடனமும் அதன் செயல்முறைகளும் தொடர்பாக 27ஆவது பத்தி கூறுகின்றது, “நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும், மேலும் சர்வதேச சமூகத்தால் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளின் அதிகரித்த அளவு வழங்கப்பட வேண்டும்.”
எவ்வாறாயினும், கடந்த வாரம் இலங்கையில் தமிழ் நீதிபதி ரி. சரவணராஜா, “எனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக எனது அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளையும் பணிகளையும் இராஜிநாமா செய்கின்றேன்” என்று கூறிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.” – எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
” சிங்களப் பெரும்பான்மையினருக்குள் உள்ள பௌத்த தீவிர போக்குக் கொண்ட மதவாத, இனவாத சக்திகளை எரிச்சலூட்டுவதாகக் கூறி அவர் பிறப்பித்த உத்தரவை மாற்றுமாறு நாட்டின் சட்டமா அதிபரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தமும் இதில் அடங்கும்.
போர்க்குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் இலங்கை அரச எம்.பி. ஒருவர், உயரிய சபையில் அடிக்கடி
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழ் நீதிபதி தனது இடத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து, நாடாளுமன்றத்தில் மேற்படி நீதிபதியை வெளிப்படையாகவே மிரட்டினார்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரச ஆதரவு குண்டர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
இது நடைபெற்றபோது பொலிஸார் அங்கு பார்த்துக் கொண்டிருந்தனர். பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், பின்னர் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இறுதியில் 6 பேரைக் கைது செய்து, அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றத்துக்குச் சென்று “இனக் கலவரங்களை”த் தடுப்பதற்கு சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று காரணம் காட்டி விடுவித்திருந்தனர்.
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டுக்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதாகவே அமையும் – எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தமதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவிடம் அறிக்கை கையளிப்பு
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரும் பரிந்துரைப்பு மனு ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
இலங்கைத் தீவில் நீதித்துறை மீது அரச நிர்வாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ஸிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!