இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் தங்களுக்கு அரசியலில் இன்னமும் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருப்பது கொழும்பின் தற்போதைய அரசியல் நிலைவரத்தின் விசித்திரமானதொரு அம்சமாகும்.

ஒருபுறம், தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அண்மையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையளிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மறுபுறம், ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டத்தின் மூலம் கொழும்பில் உள்ள அரச மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அரசாங்கம் ‘அரசியல் பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாகவும் கூறி மக்கள் மத்தியில் மீண்டும் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

விக்கிரமசிங்கவின் கைது, எதிர்க்கட்சிகள் மத்தியில் குறுகியகால உத்வேகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகப் பல கட்சிகள் குரலெழுப்பியதுடன், அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டின. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டலைச் செய்யலாம் என்று விக்கிரமசிங்கவும், அவரது ஐக்கிய தேசியக் கட்சியினரும் வெகுவாகவே நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அதன் நீட்சியாக, கடந்த வாரம் (செப்டெம்பர் 20ஆம் திகதி) நடைபெற்ற கட்சியின் 79ஆவது வருடாந்த மாநாட்டை எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கானதொரு சந்தர்ப்பமாக அவர் பயன்படுத்தினார். ஆளும் தேசிய மக்கள் சக்தியைத் தவிர சுமார் 40 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த இந்த மாநாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய விக்கிரமசிங்க, தனது கட்சியின் முன்னாள் தலைவர்களுக்குப் புறம்பாக, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, எஸ்.ஜே.வி. செல்வநாயகம் உட்படப் பல முக்கியமான தேசியத் தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான தனது நோக்கத்தை வெளிப்படையாகக் கோடிட்டுக் காட்டினார். அவர், நாட்டில் உருவாகி வருகின்ற அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தைத் தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டியதே அவசியம் என்று வலியுறுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்குப்பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தமது அரசியல் எதிர்காலத்தினை வடிவமைத்துக் கொள்வற்காக இரு முனைகளில் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது. முதலாவதாக, ஐக்கி மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதாகும்.

இரண்டாவது, மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து பரந்தளவிலான அரசாங்க எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைப்பதாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த வலையில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பதுடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தக் கலக்கமும், அவற்றின் ஒன்றிணைவுக்கான தேவையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘ஒரு கட்சி ஆட்சி’ இலக்கு என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டே உருவாகியுள்ளது.

கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் போன்றவற்றில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைச் சிறைக்கு அனுப்புவதற்கான தீவிரமான நடவடிக்கைளை தேசிய மக்கள் கையிலெடுத்துள்ளது.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் கைது, பல்வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட (வலதுசாரி, இடதுசாரி, கடும்போக்குவாத) கட்சிகளை ஒன்றிணைக்க வைத்திருக்கிறது. ஊழல்வாதிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒன்றிணைகிறார்கள் என்ற அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு இடம் கொடுக்காமல், ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரான ‘ஒரு கட்சி ஆட்சி முறைக்கு’ நாட்டை இட்டுச்செல்லும் முயற்சியைத் தடுப்பது என்ற கொள்கை ரீதியான ஒரு புதிய முழக்கத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன.

சஜித் பிரேமதாசவும், அரசாங்கம் சமூகமட்ட அமைப்புகள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதாகவும், இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறியிருக்கிறார். இத்தகையதொரு சர்வாதிகாரப் பாணியிலான ஆட்சி முறையை மேற்குலகமும், ஜனநாயகப் பண்புகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட நாட்டு மக்களும் இலகுவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே எதிர்க்கட்சிகளுக்கு உள்ள மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அதன் தலைமைக்கட்சியாக இருப்பது ஜே.வி.பி. அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஜனவரிமாத சீன விஜயத்தின்போது சீன கம்னியூஸக் கட்சியுடன் உடன்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

குறித்த உடன்பாட்டில் ஜே.வி.பி. மற்றும் கம்னியூஸக் கட்சி ஆகியவற்றின் இடையே பரஸ்பரம் உறவுகளையும் அவற்றின் செயற்றின்களையும் கூட்டிணைந்து மேம்படுத்துவது தான் பிரதான இலக்காக உள்ளது. ஆகவே, சீனாவின் ஆதிக்கம் ஜே.வி.பிக்குள் அதிகரிப்பதால் ‘ஒருகட்சி ஆட்சி முறைக்குள்’ ஜே.வி.பி. செல்ல முனைவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறான நிலையில், அரச மாளிகையை விட்டு வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் நடவடிக்கை தமக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கூறி, தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் சிங்கள மக்கள் தமக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர் இன்னமும் இருந்து வருவதாகத் தோன்றுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று அவர் நம்பினாலும், அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டமை நாட்டு மக்களால் பெரிதாகப் பாதிப்பாகக் கருதப்படவில்லை.

இந்தச் சூழலில்தான், முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் 28-09-2025அன்று ஒரு சந்திப்பை நடத்தியுள்ளனர். அரசியல் ரீதியாகத் துருவப்படுத்தப்பட்ட இந்தக் கட்சிகளும் அதன் தலைவர்களும் தேசிய மக்கள் சக்தியின் அல்லது ஜே.வி.பியின்  அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருப்பதையே இந்தச் சந்திப்பு உணர்த்துகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அணிதிரளுவதற்கு மற்றைய கட்சிகள் தயங்கினாலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜனபெரமுனவின் பொதுச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் மீட்சியும், எதிரணிக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியும் பலவீனமான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் சாத்தியமா என்பது கேள்வியாக இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ‘ஒரு கட்சி ஆட்சி’ முயற்சி என்ற பொதுவான கோசத்தால் எழும் அச்சுறுத்தல், இந்த முரண்பாடான அரசியல் தலைவர்களைக் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் தற்காலிகமாக ஒன்றிணைக்கக்கூடிய ஒரு வலுவான புள்ளியை உருவாக்கியுள்ளது.

இந்த இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் ‘மீட்சி’ முயற்சி,  தேசிய மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் வியூகத்தை வகுப்பதில் எந்தளவு வெற்றியடையும் என்பது காலத்தின் கையில் உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த முயற்சியின் வெற்றியில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலமும், நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்கால இலக்கும் தங்கியுள்ளது.