இலங்கையில், வாழ்விட மோதல்கள் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்று வன உயிரிகள் திணைக்களம் அறிக்கையிட்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு 488 யானைகள் வாழ்விட மோதல்களால் கொல்லப்பட்ட நிலையில், இந்த வருடமும் அந்தத் துயர்கதை நீண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.
துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெங்காய வெடிவைத்தும் கொல்லப்படுதல், மின்வேலிகள் மற்றும் புதைகுழிகளில் அகப்பட்டு இறத்தல், ரயில் மோதல்களில் பலியாதல் எனப் பலவகையான துர் மரணங்களை இந்த யானைகள் சந்தித்திருக்கின்றன.
இலங்கையில் விவசாயிகளுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான வாழிட மோதல் இன்று நேற்று நடப்பதல்ல. நீண்டதும் நெடியதுமான தொடர்கதை இது. .
கடந்த பலவருடங்களாகவே வன விலங்குகளால் குறிப்பாக யானைகள் மற்றும் குரங்குகளால் ஏற்படும் பயிரழிவுகள் மற்றும் விவசாய அழிவுகள் தொடர்பில் விவசாயிகள் தொடர்ச்சியாக முறையிட்டுக் கொண்டுதான் உள்ளனர்.
உச்சப் பாதிப்பாக, விவசாயத்தைக்கைவிட்ட விவசாயிகளும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களும் இலங்கையில் ஏராளம். ஆனால், இந்த ‘மனித – விலங்கு’ வாழ்விட மோதல் ஏன் ஏற்படுகின்றது? எதற்காக யானைகளும், குரங்கு களும் இதர வன விலங்குகளும் மனித வாழ்விடங் களுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் ஊடுருவுகின்றன என்ற கேள்விகளை நியாயமான அடிப்படையில் பரிசீலனை செய்வதற்கோ அதற்கொரு தீர்வை வழங்குவதற்கோ அரசாங்கம் தயாரில்லை.
உண்மையில் விலங்குகள் மனிதர்களுடைய வாழ்விடங்களுக்கு வரவில்லை. மனிதர்களாகிய நாம் தான் விலங்குகளின் வாழ்விடங்களுக்குள் எதேச்சதி காரமாக அத்துமீறியிருக்கின்றோம். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பிருந்த வனாந்தரங்கள் இன்றில்லை.
தமிழர் தாயகமாக இருந்தாலும் சரி அல்லது ‘ஒரு நாடு என்ற ரீதியில்’ இலங்கையாக இருந்தாலும் சரி எங்கும் கட்டடக் கானகங்கள்தான் இப்போது எஞ்சி நிற்கின்றன.
காலாகாலமாக விவசாயப் பகுதிகளாக இருந்த நிலங்களை இப்போது கட்டடங்கள் ஆக்கிரமித்திருக்க, விவசாய நிலங்கள் வனாந்தரங் களில் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
காடுகளை ஊடறுத்து ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட் டுள்ளன. மனிதர்களின் இந்தச் செயற்பாட்டால் உணவுப்போட்டியும் உறைவிடப்போட்டியும் விலங்குகளிடத்தில் வலிந்து ஏற்படுத்தப்படுகின்றது.
தமக்கான உணவு மூலங்கள் அழிக்கப்பட்டநிலையில், உறைவிடங்கள் இழக்கப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியாகத்தான் உணவைத் தேடியும்,உறை விடங்களைத் தேடியும் விலங்குகள் மனித வாழ் விடங்களுக்குள்ளும் -விவசாய நிலங்களுக்குள்ளும் ஊடுருவுகின்றனவே அன்றி இதில் யானைகளின் தவறென்று என்னதான் உள்ளது?
இலங்கையில் அதியுச்ச வேகம்பெற்றுவரும் ‘மனித விலங்கு வாழிட மோதல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் அல்லது தவிர்க்கவேண்டுமாயின் வனாந்தரங்களின் இருப்புமுதலில் உறுதி செய்யப்பட வேண்டும். காடுகளின் இருப்பும் அளவும் குறுகக் குறுக விலங்குகள் காடுகளைவிட்டு வெளியில் செல்லும் என்பது இயற்கை நியதி, யதார்த்தமும் அதுவே. அவற்றின் உலகை நாள்தோறும் நாம் ஆக்கிரமித்துக் கொண்டால், அவையும் பாவம் எங்குதான் செல்லும்…?
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!