துமிந்த சில்வாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழாம் ஜனவரி 17 ஆம் ஏகமனதாக தீர்மானித்து, தீர்ப்பளித்தது.
ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாய் மற்றும் சட்டத்தரணி கசாலி உசைன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது உயர் நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்தும்மிக்க தீர்ப்பை வழங்கியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை ஆராய்ந்த உயர் நீதின்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதிபடுத்தியிருந்தது.
ஜனாதிபதி தேர்தலினால் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஸவினால் 5 பிரதிவாதிகளில் ஒருவராக இருந்த துமிந்த சில்வாவிற்கு மாத்திரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.அதன்பின்னர் அதனை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்சுன ஒபேசேகர ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கிய செயற்பாடு சட்டபூர்வமானதல்ல என அந்த நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர், அத்துடன் அவருக்கான தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை – வைத்தியசாலை நிலைவரம்
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனக் கூறப்படும் துமிந்த சில்வாவை எப்போது சிறைச்சாலைக்கு அனுப்புவீர்கள் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளரிடம் வினவியபோது, உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, அவரை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்காக காத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
மேற்படி கோரிக்கையை இதற்கு முன்னரும் பல தடவைகள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும், துமிந்த சில்வாவை சிறைச்சாலைக்கு விடுவிப்பதா இல்லையா என்பது அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணரின் கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும், அது வரையில் துமிந்த சில்வா சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வைத்தியசாலையின் நிர்வாக தரத்திலான அதிகாரியொருவரிடம் வினவப்பட்டது,
“ சிறைச்சாலை திணைக்களத்தின் கோரிக்கையின் பிரகாரம் செயற்படுமாறு வார்டுக்கு பொறுப்பான வைத்தியரிடம், வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர் விரைவில் முடிவொன்றை எடுப்பார்.” – என அந்த அதிகாரி பதிலளித்தார்.
சிறைச்சாலைக்கு செல்லும்போது, நீதிமன்றம் செல்லும்போது நோய் எனக் கூறுபவர்கள் வீட்டில் இருக்கும்போது ஆரோக்கியமாக இருப்பதும், விடுதலையான பின்னர் வீடமைப்பு அதிகார சபையின் தலைமைப்பதவியை வகிப்பதும் எப்படி? துமிந்த சில்வா மீண்டும் எப்போது சிறைக்கு செல்வார் என்பது சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கருதும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த வழக்கு தீர்ப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
2016 டிசம்பர் 8 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் 2:1 என்ற அடிப்படையில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக துமிந்த சில்வா மேன்முறையீடு செய்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.
எனினும், கோட்டாபய ராஜபகச ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 JUNE 24 ஆம் திகதி துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் சவாலுக்குட்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. சட்டமா அதிபரும் இது பற்றி வினவி இருந்தார். எனினும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது என அறிவித்து இந்த மூன்று அடிப்படை உரிமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது.
ஜனாதிபதியால் வழங்கப்படும் பொதுமன்னிப்பு குறித்து நீதிமன்றத்தால் கேள்வி எழுப்ப முடியும் என்பதை இதன்மூலம் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தது, ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசமைப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி எவ்வாறு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும், அதற்கான நடைமுறைகள் என்ன என்பது பற்றி அரசமைப்பின் 34 (1) ஆம் பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரொருவருக்கு குடியரசுத் தலைவர பொது மன்னிப்பு வழங்க வேண்டுமானால், அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம், குடியரசுத் தலைவர் முதலில் அறிக்கையைப் பெற வேண்டும்.
இரண்டாவதாக, அறிக்கை கிடைத்த பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அந்த அறிவுறுத்தல்களின் பின்னர், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுடன் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும். பின்னர் அமைச்சர் தனது பரிந்துரைகளுடன் அறிக்கையை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். எனினும், இந்த நடைமுறைகளை கோட்டாபய ராஜபக்ச பின்பற்றவில்லை, எனவேதான் அரசமைப்புக்கு மாறாக மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
மேற்படி வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், துமிந்த சில்வாவுக்கு மாத்திரம் எவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட? சிறைச்சாலைகளில் 9 ஆயிரம்வரையான மரண தண்டனை கைதிகள் இருக்கும் நிலையில் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க எந்த அடிப்படையில் தேர்வு இடம்பெற்றது என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு நடைமுறையை ஆராய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசமைப்பின் ஏற்பாடுகளை பின்பற்றாமல், ஜனாதிபதி தனது தனிப்பட்ட அபிலாசைகளின் பிரகாரம் மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது புலனாகின்றது.
இலங்கைபோன்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நிலவும் நாட்டில் இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க தீர்ப்பாகும். என்னதான் அதிகாரம் இருந்தாலும் அரசமைப்பின் பிரகாரம் செயற்பட தவறின், எதுவாக இருந்தாலும் அது தவறுதான் என்பதை இந்த தீர்ப்பு வெளிச்சம் போட்டுகாட்டுகின்றது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!