ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு, தமிழ் மக்களின் நீண்டகால நீதிக் கோரிக்கைகள் மற்றும் அரசியல் அபிலாசைகளை சர்வதேச அரங்கில் முழுமையாக நீர்த்துப் போகச் செய்துள்ளன என்ற கவலையளிக்கும் உண்மையைத் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் உறுதிப்படுத்துகின்றன.

முதலாவது வரைவில் இருந்த பல முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டிருப்பது, இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு சர்வதேச சமூகம் அடிபணிந்ததா என்ற கேள்வியை எழுப்புவதுடன், ‘ஜெனிவா’ பொறிமுறையின் நம்பகத்தன்மை குறித்தும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

குறித்த திருத்தப் பிரேரணையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு திடமான உத்தரவாதமோ, நீதிக்கான பொறிமுறையோ இல்லை அது வெறுமனே பெயரளவிலான கடதாசி ஆவணமாகவே காணப்படுகின்றது.  இதனை நிறைவேற்றுவதாலே அல்லது நிறைவேற்றாமல் விடுவதாலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு பலனும் இல்லை என்ற கருத்து வலுப்பெறுகிறது.

விசேடமாக இதுகால வரையிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாகப் பொறுப்புக்கூறல் செய்வதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்பது வெளிப்படையானது.

இருப்பினும், இலங்கை சம்பந்தமான பிரேரணைகளால் ‘பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேச அரங்கில் உயிர்ப்புடன் இருக்கும்’ என்ற ஆகக்குறைந்த நம்பிக்கையாவது இருந்தது. ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளமைக்க காரணம், இணை அனுசரணை நாடுகளின் திருத்தப்பட்ட வரைவின் மிக ஆபத்தான அம்சம் உள்ளடகப்பட்டுள்ளமை தான்.

இலங்கையில் ஏழு தசாப்தங்களாக நிலவும் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையை மூடிமறைக்கும் வகையில் செய்யப்பட்டிருக்கும் சொற்பத மாற்றம் தான். அதாவது, முதலாவது வரைவில், ‘பல தசாப்தகாலமாகத் தொடர்ந்த இனவாத மற்றும் பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளினாலும், இனப்பிரச்சினையினாலும் மிகையான பாதிப்புக்களும், துன்பங்களும் ஏற்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய திருத்தத்தின் மூலம் ‘இனப்பிரச்சினை’ என்ற சொல் முற்றாக நீக்கப்பட்டு, வெறுமனே ‘மோதல்’ என்ற வார்த்தை பிரதியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்தது வெறுமனே இரண்டு தரப்பினருக்கிடையேயான ஒரு ‘மோதல்’ அல்ல அது இனரீதியான திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அழிப்புக்களும், ஆக்கிரமிப்புக்களுமாகும். அரசாங்கத்தின் பாகுபாடுகள் மற்றும் அரச இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளின் விளைவாக எழுந்தவொரு தேசிய இனப் பிரச்சினையாகும்.

இப்பிரச்சினையின் மூல காரணிகளைத் தொடர்ச்சியாக ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங்கள் மறுதலித்து வரும் நிலையில், சர்வதேச ஆவணத்தில் இருந்தும் இந்தப் பதத்தை நீக்குவது, இலங்கையின் ‘பௌத்த மையவாத சிங்கள தேசியவாத’ அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

சர்வதேச அரங்கொன்றில் தீர்மானமாக நிறைவேற்றப்படவள்ள பிரேரணையில் தேசிய இனப்பிரச்சினை என்பது நீக்கப்படுகின்றது என்றால், அதற்குப் பின்னர் உள்நாட்டில் காணப்படும் ஆட்சியாளர்கள் பிரச்சினைகளின் ஆழமான வேர்களை ஒப்புக்கொள்ள மறுக்கும் சூழலில் தீர்வு எவ்வாறு கிடைக்கும் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இதேபோன்றுதான், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுதலை உறுதிசெய்வதற்குச் சர்வதேச நீதிப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் அந்த வலியுறுத்தல்கள் எல்லாம் பொருட்டாகக் கொள்ளப்படாது வரைவில் ஆரம்பத்தில் உள்நாட்டு பொறிமுறையை அங்கீகரிக்கும் வகையில் ‘சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சுயாதீன சிறப்பு வழக்குத் தொடுநர் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வலியுறுத்தலானது, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக் கோரிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக இருந்த நிலையிலும், ஆகக் குறைந்தது நீதிப்பொறிமுறை பற்றிய உரையாடலாவது நீடிக்கின்றது என்றவொரு நிலைமை காணப்பட்டது.

ஆனால், தற்போது உள் கட்டமைப்புப் பொறிமுறையாக முன்மொழியப்பட்ட அப்பகுதியை நீக்கியதன் மூலம், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான திடமான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எள்ளளவிலான வாய்ப்புக்களும் இல்லையென்பது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, ஐ.நா.வை நோக்கிய நீதிக்கான தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தைப் முழுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது, இதற்குமேல் ஐ.நாவை நோக்கிய செயற்பாடுகளும், எதிர்பார்ப்புக்களும் வீணானது என்ற கருத்துருவாக்கம் மேலெழுந்துள்ளது.

அதேநேரம், பிரேரணையின் முதலாவது வரைவில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலிய காரணிகளில் ஒன்றாக ‘இராணுவமயமாக்கம்’ என்ற சொல் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட வரைவில் இந்தச் சொல் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நிலவும் அதிகப்படியான இராணுவப் பிரசன்னம், நில அபகரிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் குறித்துச் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு இந்தப் பதம் மிக முக்கியமானதாக இருக்கின்றது.

அப்பதம் நீக்கப்பட்டமை, தாயகத்தில் இராணுவமயமாக்கலின் தாக்கத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாகும். அதேபோன்று, பொறுப்புக்கூறல் தொடர்பான பந்தியில், முன்னர் ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளடங்கலாகச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க பொறுப்புக்கூறல் செயன்முறை உறுதிப்படுத்தப்படவேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெறுமனே ‘பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும்’ என்று மாற்றியுள்ளனர். ‘செயற்திறன்மிக்க’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதன் மூலம், பொறுப்புக்கூறுதலின் தரம் மற்றும் வீரியம் குறித்த அழுத்தம் வெகுவாகவே குறைக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஐ.நா.பிரேரணையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தங்கள், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிய நீதியையோ அல்லது நிலையான அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்காது என்ற அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூட, யுத்தத்தின் வலிகளை உணர்ந்திருப்பதாகக் கூறினார். காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றார். பலஸ்தீனத்தை அங்கீகரிக்கின்றோம் என்றார்.

ஆனால் தனது நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினை பற்றி கிஞ்சித்தும் ஒரு வார்த்தையைக்கூடப் பிரதிபலித்திருக்கவில்லை. வறுமையும், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகளையும் முடக்குவதுதான் முதல் பணியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

தேசிய இனப்பிரச்சினை, பொறுப்புக்கூறல் உள்ளிட்டவற்றை மறுதலித்திருக்கின்றார். அவ்விதமான நிலைப்பாட்டில் உள்ள ஆட்சியில் உள்ள அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு இந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது.

ஆக மொத்தத்தில் திருத்தப்பட்டுள்ள இந்த வரைவு, தமிழ் மக்களின் வரலாற்றுத் துயரத்தையும், அவர்களின் தற்போதைய அவலத்தையும் முழுமையாக மறைத்து நீதிக்கான உறுதியான பொறிமுறைகள் இல்லாத நிலையில், அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கான கால அவகாசம் கொடுக்கும் வெற்று ஆவணமாகவே இருக்கப்போகிறது.