இலங்கையில் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, பல தசாப்தங்களாக ஜனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதொரு பெரும் கறையாகப் பார்க்கப்பட்டு வரும் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை' (Protection of the State from Terrorism Bill) அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய சட்டமூலம், நாட்டின் தேசிய பாதுகாப்பையும் மக்களையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச்சட்டம் எவ்வித மாற்று ஏற்பாடுகளுமின்றி முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சூழலில், தற்போது அதற்குப் பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய சட்டமூலம் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.

இப்புதிய சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகவும் தெளிவற்றதாகவும் காணப்படுவதே இதன் மீதான பிரதான விமர்சனமாக உருவெடுத்துள்ளது.

அரசியல் அல்லது இலட்சிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பையோ ஒரு காரியத்தைச் செய்யவோ அல்லது செய்யாமல் தவிர்க்கவோ வலுகட்டாயப்படுத்துதல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல் போன்றவை பயங்கரவாதச் செயல்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, பொதுச்சொத்துக்கள், கலாசாரச் சொத்துக்கள், சுற்றாடல், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் அரச டிஜிட்டல் அமைப்புகளுக்குப் பாதகம் விளைவித்தல் போன்ற சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய விடயங்களும் பயங்கரவாதச் செயல்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இது எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் எதிராளிகளை 'பயங்கரவாதிகள்' எனக் முத்திரையிட்டு ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட இப்புதிய சட்டமூலம் எந்த அளவுக்கு அபாயகரமானது என்பதைச் சுட்டிக்காட்டும் மூத்த வழக்கறிஞர்களும் அரசியல் ஆய்வாளர்களும், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள கைது செய்தல், சோதனை செய்தல் மற்றும் தடுத்து வைக்கும் அதிகாரங்கள் அனைத்தும் முப்படையினருக்கும் கரையோரப் பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

சாதாரண சிவில் சமூக நிர்வாகத்திலும் சட்டம் ஒழுங்கைப் பேணுதலிலும் இராணுவத்தினருக்கு இத்தகைய பரந்த அதிகாரங்களை வழங்குவது ஒரு ஜனநாயக நாட்டின் பொலிஸ் கட்டமைப்பின் அவசியத்தையே கேள்விகுறியாக்குகிறது.

மேலும், நியாயமான சந்தேகத்தின் பேரில் எந்தவொரு நபரையும், வாகனத்தையும் அல்லது இடத்தையும் நீதிமன்ற உத்தரவின்றி சோதனையிடவும், கைப்பற்றவும் படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சட்டத்தை விடவும் தீவிரமான ஒடுக்குமுறைக்கே வழிவகுக்கும் எனக் சுட்டிக்காட்டப்படுகிறது.

இப்புதிய சட்டமூலத்தில் சில நேர்மறையான மாற்றங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, கைது செய்யப்படும் சந்தேகநபர் 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதும், தடுப்புக் காவல் உத்தரவை வழங்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து விடுவிக்கப்பட்டு, நீதிவான் நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கவை.

ஒரு தடவையில் 2 மாதங்கள் வீதம் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்றும், சித்திரவதைகள் இடம்பெற்றதாக நீதிவான் சந்தேக ர்யளெநn பட்சத்தில் மருத்துவப் பரிசோதனைக்கும் தடுப்புக்காவல் இடத்தை மாற்றவும் உத்தரவிட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்புக் காவல் உத்தரவுகளை மதிப்பாய்வு செய்ய சுதந்திரமான மறுஆய்வுக் குழுவொன்றை அமைப்பதற்கும், தரவுகளைப் பேண மத்திய தரவுத்தளத்தை நிறுவுவதற்கும் இதில் ஏற்பாடுகள் உள்ளன.

ஆயினும், இத்தகைய சில சீர்திருத்தங்களைத் தாண்டி, இச்சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஏனைய சரத்துக்கள் பெரும் ஜனநாயக விரோதத் தன்மையைக் கொண்டுள்ளன. சந்தேகிக்கப்படும் அமைப்புகளைத் தடைசெய்யும் தன்னிச்சையான அதிகாரம் ஜனாதிபதிக்கே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும், ஏனைய தொடர்புடைய குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை மற்றும் 20 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கடுமையான தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் பொலிஸார் கூட்டுப் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இச்சட்டம் வழிவகுக்கிறது. முன்னைய சட்டத்தில் கைது செய்வதற்கு முன்னர் பெறப்பட வேண்டிய சில அவசியமான அனுமதிகள் இப்புதிய சட்டமூலத்தில் நீக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரமேசந்திரன் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் போன்ற பல தரப்பினர், இப்புதிய சட்டமூலம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நியமங்களுக்கு முற்றிலும் முரணானது எனத்தெரிவித்துள்ளனர்.

முன்னைய அரசாங்கங்கள் கொண்டுவந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக எதிர்த்த தற்போதைய அரசாங்கம், ஆட்சிபீடமேறிய பின்னர் அதேபோன்ற அல்லது அதைவிட மோசமான ஒரு அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பது வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.

அவசரகால நிலைமைகளைக் கையாள ஏற்கெனவே அவசரகாலச் சட்டம் மற்றும் சாதாரண குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் பிரஜைகளின் அடிப்படை பேச்சுரிமை, போராட்ட உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் இத்தகைய சட்டமூலங்கள் ஒரு சர்வாதிகாரப் பாதையையே அமைத்துக் கொடுக்கும்.

சுருக்கமாகக் கூறின், கட்டமைப்பு ரீதியான மாற்றத்தையும் நல்லாட்சியையும் தருவதாகக் கூறி மக்களாணையைப் பெற்ற ஒரு அரசாங்கம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரச அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துவது கவலையளிக்கிறது.

'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' என்பது அதன் பெயருக்கேற்ப அரசாங்கத்தைப் பாதுகாப்பதாக அமையலாமே தவிர, நாட்டின் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது.

எனவே, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றுதிரண்டு இச்சட்டமூலத்தில் உள்ள மனித உரிமை மீறல் சரத்துக்களுக்கு எதிராகக்குரல் கொடுப்பதும், சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு உட்பட்ட வகையில் மாற்றுச் சீர்திருத்தங்களை வலியுறுத்துவதும் தற்போதைய கட்டாய தேவையாகும்.