நாட்டின் அரசியலில் 'அதிகாரப் பகிர்வின் முதற்படி' என்றும், 'முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வின் அடித்தளம்' என்றும் வர்ணிக்கப்படும் மாகாண சபை முறைமை, கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கிக் கிடக்கிறது.
ஒன்பது மாகாணங்களும் ஆளுநர்களின் தனி வழி ஆட்சியின் கீழ் ஜனநாயகக் கட்டுப்பாடின்றி இயங்கி வரும் சூழலில், புதிய அரசாங்கமாவது தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் என்று நாட்டு மக்கள், குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தன.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் அரியாலையில் மக்கள் விடுதலை முன்னணியின யாழ்;.மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு அதன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து, இலங்கை அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளையும் பலத்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
'இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது; அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி 'தித்வா' சூறாவளி நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவிட்டது' என்ற ரில்வின் சில்வாவின் தன்னிச்சையான பிரகடனம், 'நாட்டை ஆளுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியா அல்லது ஒரு கட்சியின் செயலாளரா?' என்ற விவாதத்தை பிரதான அரசியல் கட்சிகளிடையே தோற்றுவித்துள்ளது.
ரில்வின் சில்வா, 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தல்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், 'தித்வா' புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவுகளிலிருந்து நாட்டை மீட்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் 50 ஆயிரம் கோடி ரூபா நிதி தேவைப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடி காரணமாகத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் நிவாரணப் பணிகளுக்காகவே செலவிடப்பட்டுவிட்டதால், இந்த ஆண்டு தேர்தலை நடத்த நிதி இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திய சட்டச் சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தல் முறைமையில் குழப்பம் நீடிப்பதாகவும், அது குறித்து ஆராய பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அச்செயற்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு (2027) எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாவிடின் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் இந்தியாவிடமிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கமாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்புக்கு எதிராகத் தென்னிலங்கையில் முதன்முதலில் கடுமையான கண்டனக் குரல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிடமிருந்து எழுந்துள்ளது. பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ரில்வின் சில்வாவின் கருத்தின் சட்டபூர்வத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தினார்.
'தேர்தல் ஒன்றுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டியது நாட்டின் ஜனாதிபதி அல்லது சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவாகும். அவ்வாறு இருக்கையில், ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு நாட்டின் தேர்தல் நடக்குமா இல்லையா என்று அறிவிப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது?' என்று நாமல் ராஜபக்ஷ காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
ஆரம்பத்திலிருந்தே மாகாண சபை முறைமைக்கு எதிரான கொள்கையைக் கொண்ட ஜே.வி.பி. இந்தத் தேர்தலை நடத்துமா என்பதே சந்தேகத்திற்குரியது எனக் குறிப்பிட்ட நாமல், தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும் இந்த அரசாங்கம், உண்மையில் முரண்பாடுகளைத் தவிர்க்க விரும்பினால், சகல மாகாணங்களுக்கும் தேர்தலை நடாத்தாவிடினும் பரவாயில்லை, கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் தேர்தல் உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு மாத்திரமேனும் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டட்டும் என்று பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், ரில்வின் சில்வாவின் கூற்றானது ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பையும், பாராளுமன்றத்தையும் கேலிக்குள்ளாக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்துப் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் ஊடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தொடர் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன.
எல்லை நிர்ணயச் சிக்கல்கள் மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் மூன்று அவதானிப்புக்களை முன்வைத்துள்ள சூழலில், மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு இச்செயற்குழுவுக்கு உள்ளது.
இவ்வாறானதொரு உத்தியோகபூர்வ நகர்வுகள் பாராளுமன்றிற்குள் நடக்கும்போது, அதற்கு வெளியேயுள்ள ரில்வின் சில்வா 'இந்த ஆண்டு தேர்தல் இல்லை' என்று எங்ஙனம் கூற முடியும் என்று சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். 'நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவா அல்லது ரில்வின் சில்வாவா என்ற பலத்த சந்தேகம் இப்போது எமக்கு எழுந்துள்ளது. ரில்வின் சில்வாவின் இக்கருத்து, நாட்டின் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும்' என்று சுட்டிக்காட்டிய சாணக்கியன், தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்திற்குள் மீறியுள்ளதை ரில்வின் சில்வாவின் கூற்று உறுதிப்படுத்துவதாகக் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார, பின்னர் அதனை 2026க்கு ஒத்திவைத்தார். தற்போது 2026 இலும் தேர்தல் இல்லை என்று ஜே.வி.பியின் செயலாளர் கூறுகிறார்.
மாகாண சபைத் தேர்தல் விவகாரங்களை ஆராயும் பாராளுமன்றக் குழுவில் தானும் ஒரு அங்கத்தவர் என்று குறிப்பிட்ட மனோ கணேசன், அக்குழுவிற்குள்ளே தேர்தலை நடத்துவதற்கான எவ்வித அறிகுறியும் அரசாங்கத் தரப்பால் காண்பிக்கப்படவில்லை என்று அம்பலப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நிதி முகாமை மற்றும் தற்போதைய போக்கு குறித்து எச்சரித்த அவர், '2022 ஆம் ஆண்டு டாலர் நெருக்கடியோ, ரூபா நெருக்கடியோ இல்லை என்று கோட்டாபய ராஜபக்ஷவும் கப்ரால் போன்றோரும் கூறினார்கள், அதன் விளைவை நாடு அனுபவித்தது.
தற்போதைய நெருக்கடி நிலையிலும் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படாமல், எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய மட்டத்தில் நாட்டைப் பாதுகாக்க முன்னுரிமையளிக்க வேண்டும்; 2022 போன்றதொரு இருண்ட காலம் மீண்டும் தோற்றம் பெற அரசாங்கம் வழிவகுக்கக் கூடாது' என்று எச்சரித்துள்ளார்.
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.சந்திரகுமார், ரில்வின் சில்வாவின் அறிவிப்பானது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் 'மக்கள் விரோத நடவடிக்கை' என்று சாடியுள்ளார்.
இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் உருவான மாகாண சபை முறைமையைத் தற்போதைய அரசாங்கம் தந்திரோபாயமாக இழுத்தடித்து, ஒன்பது மாகாணங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத 'ஆளுநர் ஆட்சியை' நீடிக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
'அரசாங்கத்தில் நேரடிப் பதவிகள் இல்லாதபோதும், ரில்வின் சில்வாவே அரசாங்கத்தின் பின்னாலிருந்து எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது' என்று சந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
அதிகாரப் பகிர்வுக்காக இதுவரையில் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அடிப்படைத் தேர்தலையே நடத்தத் தயங்கும் ஒரு அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு இதற்கு மேலானதொரு நியாயமான அரசியல் தீர்வை அல்லது அதிகாரப் பகிர்வை வழங்கும் என்ற நியாயமான சந்தேகத்தையும் சந்திரகுமார் முன்வைத்துள்ளார்.
இலங்கை போன்றதொரு ஜனநாயகக் குடியரசில், கொள்கை ரீதியான மற்றும் நிதி ரீதியான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஜனாதிபதி, அமைச்சரவை அல்லது தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்கள் மூலமாகவே வெளிவர வேண்டும்.
ஆனால், அரசாங்கத்தில் எந்தவொரு உத்தியோகபூர்வப் பொறுப்பிலும் இல்லாத, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசியல் கட்சியின் செயலாளர், நாட்டின் மிக முக்கிய தேர்தலொன்றின் தலைவிதியைத் தீர்மானிப்பதும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசுவதும் அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
'தித்வா' சூறாவளி நிவாரணம் என்பது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அதனைக் காரணமாகக் காட்டி, மாகாண சபை என்ற அரசியல் தீர்வு உள்கட்டமைப்பையே காலவரையறையின்றி முடக்கி வைப்பது ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பல்ல.
அரசாங்கம் தனது பங்காளிக் கட்சியின் நிழல் அதிகாரத்திற்குப் பின்னால் ஒழியாமல், தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதித்துவ உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான உத்தியோகபூர்வ நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!