2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் வடுக்கள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், தற்போதைய நாட்டின் பொருளாதாரச் சூழல் மீண்டும் தற்காலிகத் தடுமாற்றத்தையும் கொள்கை ரீதியான குழப்பங்களையும் சந்தித்து வருகிறது.

மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற வெளியக அழுத்தங்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் 2022 விடப் பன்மடங்கு முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்ந்து உறுதிபடக்கூறி வருகிறார்.

எனினும், அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிதி மோசடிகள், அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையிலான புள்ளிவிவர முரண்பாடுகள் மற்றும் பாரிய அந்நியச் செலாவணி வெளிப்பாய்ச்சல்கள் ஆகியவை நாட்டின் உண்மையான பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

கொள்கை வீத உயர்வும் பணவீக்க அழுத்தமும் அண்மைய உள்நாட்டு மற்றும் உலகளாவிய நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, பொருளாதாரச் சமநிலையைப் பேணவும், சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலைக் கட்டுப்படுத்தவும் இலங்கை மத்திய வங்கி தனது ஓரிரவுக் கொள்கை வீதத்தை 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தி, 8.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் திடீரென 5.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது இதற்கு முக்கிய தூண்டுகோலாகும்.

மத்திய கிழக்கு மோதல்களினால் உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை அதிகரிப்பும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வுமே இந்த பணவீக்கப் பாய்ச்சலுக்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இருப்பினும், இந்த வட்டிவீத உயர்வானது உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கநிலையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, வாகன இறக்குமதிக்கான கடன் தொகை உச்ச வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதங்கள் உயரும்.

இது வாகன இறக்குமதியாளர்கள் மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சிகளையும் கடுமையாகப் பாதிக்கும்.

அநாவசியக் கடன்பெறுவனவுகளைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என்று மத்திய வங்கி நியாயப்படுத்தினாலும், உற்பத்தி மற்றும் வணிகத் துறைகளின் முடக்கம் பொருளாதார வளர்ச்சியை மேலும் மந்தமடையச் செய்யக்கூடும்.

ரூபாவின் வீழ்ச்சியும் சந்தை ஊகங்களும்அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் திடீரெனச் சடுதியான வீழ்ச்சியைக் கண்டிருந்தது.

இது பொருளாதாரத்தின் அடிப்படை மாற்றங்களால் ஏற்பட்டதொன்றல்ல என்றும், சந்தையில் நிலவிய அநாவசிய அச்சம் மற்றும் இறக்குமதியாளர்களின் ஊகங்களினால் ஏற்பட்ட 'மிகைக் கேள்வி' என்றும் மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.

பதற்றமடைந்த இறக்குமதியாளர்கள் தமக்குத் தேவையான டொலர்களைக் கிடைத்த விலைக்குக் கொள்வனவு செய்ததே இந்தத் தளம்பலுக்குக் காரணம் என்று ஆளுநர் குறிப்பிட்டாலும், சந்தையை முன்கூட்டியே ஒழுங்குபடுத்தும் உத்திகளில் மத்திய வங்கிக்கு இருந்த பலவீனத்தையே இது காட்டுகிறது.

பின்னர் திறைசேரியுடன் இணைந்து மேற்கொண்ட தலையீடுகள் மூலம் ரூபா வழமைக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டாலும், இத்தகைய திடீர் அதிர்ச்சிகள் முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் மீதான நம்பிக்கையைக் குலைக்கின்றன.

அரசாங்க நிறுவனங்களின் தொடர் நிதி மோசடிகள்நாட்டின் பொருளாதாரம் சீரான பாதையில் பயணிக்கிறது என்ற பிம்பத்திற்குப் பின்னால், அரச நிறுவனங்களில் நீடித்து வரும் முறைகேடுகளும் நிதி இழப்புகளும் பெரும் நிழலாகப் படிந்துள்ளன.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்;டம், அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மில்லியன் கணக்கான டொலர் முறைகேடுகள், மக்கள் வங்கியில் வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் போது மிகையாக வரவு வைக்கப்பட்ட 656 மில்லியன் ரூபா,'அஸ்வெசும' நலன்புரித் திட்டக் கணக்கில் 500 மில்லியன் ரூபா மேலதிகமாக வரவு வைக்கப்பட்டமை போன்ற தொடர்ச்சியான நிதி இழப்புகள் அம்பலமாகியுள்ளன.

இவை கடந்த கால ஆட்சிகளில் மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் அரச நிர்வாகக் கட்டமைப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும், முறைகேடுகளுக்கான வழிகள் தாராளமாகத் திறந்துள்ளன என்பதையும் நிரூபிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரின் முரண்பட்ட தரவுகள் பொருளாதாரத் தடுமாற்றத்தின் மிக முக்கியமான புள்ளியாக அமைகிறது. நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தரவுகளுக்கும், மத்திய வங்கி ஆளுநரின் புள்ளிவிவரங்களுக்கும் இடையே காணப்படும் அப்பட்டமான முரண்பாடாகும்.

நுவரெலியாவில் உரையாற்றிய ஜனாதிபதி, பெப்ரவரி மாதம் எரிபொருள் கொள்வனவுக்கு 98 மில்லியன் டொலர் செலவிடப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் அது 368 மில்லியன் டொலராக (ஆறு மடங்கு) அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது கணக்கின்படி பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான 3 மாதங்களுக்கு 682 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளன. ஆனால், பாராளுமன்றக் குழுவில் விளக்கமளித்த மத்திய வங்கி ஆளுநரோ, கடந்த ஆண்டின் மொத்த எரிபொருள் செலவான 1.5 பில்லியன் டொலரில், மூன்றில் இரண்டு பங்கு (அதாவது 1 பில்லியன் டொலர்) இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே செலவாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இரு தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சுமார் 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி விபரம் முரண்படுகிறது. மத்திய கிழக்குப் போர் பெப்ரவரி இறுதியில் ஆரம்பமான நிலையில், ஜனவரி மாதத்தில் பாரிய அளவில் விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த ஆண்டின் சராசரி மாதாந்த செலவு 125 மில்லியன் டொலராக இருக்கும்போது, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 1 பில்லியன் டொலர் வெளியேறியிருப்பது பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த அந்நியச் செலாவணி வெளிப்பாய்ச்சல் முறையானதுதானா அல்லது அரசாங்கத்தின் தரவுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 71 முதல் 113 டொலர்களுக்குள் காணப்பட்ட காலகட்டத்தில், இலங்கை ஒரு பீப்பாய் டீசலை 300 டொலருக்கும் அதிகமாகவும், பெட்ரோலை 150 டொலருக்கும் அதிகமாகவும் சுத்திகரிக்கப்பட்ட நிலையில் அவசர அவசரமாகக் கொள்வனவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கம் முறையான கையிருப்பைத் (சுநளநசஎநள) பேணத் தவறியதே இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் குறைந்ததால், ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக விலைக்கு எரிபொருளைப் பெற்று மின்சாரம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இங்கு உற்றுநோக்கத்தக்கது.

2022 போன்றதொரு மக்கள் போராட்டச் சூழல் மீண்டும் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, அரசாங்கம் எந்த விலை கொடுத்தாவது எரிபொருளை வாங்க முற்பட்டதே இந்த அதீத செலவீனத்திற்குப் பின்னணியாகும். இந்த நெருக்கடியின் போது இந்தியாவின் 'அண்டை நாட்டுக்கு முன்னுரிமை' உதவியும், சீனாவின் 'தனித்துவமான நண்பன்' என்ற பங்களிப்பும் நியாயமான சந்தை விலையில்தான் அமைந்ததா, அல்லது இலங்கையின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எரிபொருள் விற்கப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவுகளில் இடம்பெறும் மிகச்சிறிய பேரங்களும், இடைத்தரகர்களின் தலையீடுகளும் பாரிய நிதி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்துகின்றன.

இதேநேரம், சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட (1,379 மில்லியன் டொலரிலிருந்து 1,111 மில்லியன் டொலராக) வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் 3.1 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதும், நிகர வெளிநாட்டுக் கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உள்ளதும் ஓரளவிற்குப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கொடுக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட நிதி வசதிகளுக்கான ஒப்புதல்கள் கிடைக்கவுள்ள போதிலும், முறையான வெளிப்படைத்தன்மை இல்லாதவரை பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையாது.அரசாங்கத் தரப்பிலிருந்து வெளிவரும் குழப்பமான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட புள்ளிவிவரங்களே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தீனி போடுவதுடன் பொதுமக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

நிதி நிர்வாகத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையைப் பேணத் தவறினால், தற்போதைய பொருளாதார முன்னேற்றக் கூற்றுகள் அனைத்தும் வெறும் காகித வடிவ பிம்பங்களாகவே சுருங்கி, நாடு மீண்டும் பொருளாதாரத் தடுமாற்றத்தை நோக்கித் தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்.