இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் ஆட்சி நெருக்கடிகள் என்பது வெறும் அரசியல் தோல்வியோ, பொருளாதார தவறோ அல்ல் அது ஆழமாக வேரூன்றிய அரசியலமைப்புச் சிக்கலின் வெளிப்பாடு என்பதே 'வன்டெக்ஸ்ட் இன்னிஷேட்டியவ்' ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடலின் மையக் கருத்கடந்தவாரமி; நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஒன்று கூடி, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளின் மூலக்காரணங்களை விவாதித்தனர்.
இந்த நிகழ்வைத் தொடங்கிய வன்டெக்ஸ்ட் இன்னிஷேட்டியவ்' இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் ஹரீந்திர தாசநாயக்க, இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கப் பணியில் தீர்க்கப்படாத பல அடிப்படை விடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார். அதனாலேயே தற்போது புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சாத்தியங்களை திட்டமிட்டு ஆராய்வது அவசியம் என்றார்.
'வன்டெக்ஸ்ட் இன்னிஷேட்டியவ்' இன் நிறைவேற்று பணிப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஷிரால் லக்திலக்கே உரையாற்றுகையில், இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளின் 'மூலப் பிரச்சினை' அரசியலமைப்பிலேயே உள்ளது என்று குறிப்பிட்டார்.
கடன் நெருக்கடி, ஊழல், அரசியல் நிலையற்ற தன்மை, நிர்வாகத் திறனின்மை ஆகியவை அனைத்தும் பரிந்துரை–ஆதரவு அரசியலமைப்பு கட்டமைப்பின் விளைவுகளெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'வன்டெக்ஸ்ட் இன்னிஷேட்டியவ்' முன்வைக்கும் தீர்வானது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை ஒட்டுவதல்ல மாறாக, ஒரு 'மாதிரி அரசியலமைப்பு' மூலம் முழு அமைப்பையும் மறுகட்டமைப்பதே அவசியமானதாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியில் அரசின் அமைப்பு, அதிகாரப்பகிர்வு, மனித உரிமைகள், நிதி–பணவியல் ஒழுங்குகள், பாலின சமத்துவம் போன்ற பல துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து இந்தக் கலந்துரையாடலின்போது பங்கேற்பாளர்கள் அனைவரும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு முயற்சிகளை நினைவூட்டினர்.
குறிப்பாக, ரவி கருணாநாயக்க, 2000 அரசியலமைப்பு வரைவு, மங்கல முனசிங்க செயன்முறை மற்றும் 2016 அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னேற வேண்டுமென வலியுறுத்தினார்.
அவர், 'எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டிய அவசியமில்லை; ஏற்கனவே உள்ள ஒற்றுமை புள்ளிகளைப் பயன்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
அவரையடுத்து இலங்கைத் தமிழரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், 2016 இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் செயல்முறையில் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பல விடயங்களில் ஒருமித்த கருத்து இருந்தபோதும், அரசியல் மனப்பான்மை இல்லாததால் அது தோல்வியடைந்தது எனக்குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு தொடர்பான நிபுணரும் ஜனாதிபதி சட்டதரணியுமான கலாநிதி.ஜயம்பதி விக்கிரமரத்ன, 2016 அரசியலமைப்பு செயன்முறையில் பெரும்பாலான உபக்குழு அறிக்கைகள் ஒருமனதாக இருந்தன என்பதை நினைவூட்டினார். ஆனால் அரசு நியமித்தகுழு என்ற காரணத்தால் பின்னர் சில அரசியல் சக்திகள் அதை நிராகரித்தன என்றார்.
கலந்துரையாடலின் மையக்கேள்வியாக ஆட்சியில் உள்ள அரசின் பங்கேற்பு குறித்ததாக இருந்தது. அநுரயாப்பா, தற்போதைய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், அவர்களைச் சேர்க்காமல் எந்த அரசியலமைப்பு முயற்சியும் நடைமுறையில் பயன்களைத்தராது எனக்கூறினார்.
இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசு பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தைச் செய்ய முடியாவிட்டால், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும், அதனால் எதிரணிகளின் முயற்சிககள் முழுமையாக தகர்த்தெறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்; அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.
இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரை முக்கியமானதாக அமைந்தது. இலங்கை சுதந்திரத்திற்குப் பின் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கருத்தை அவர் மறுத்தார். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சாதனைகள் உள்ளன என்றாலும், அத்துறைகளில் மேலும் சாதித்திருக்க முடிந்ததுள்ளது என்பதே உண்மை என்பதை அவர் சுட்டினார்.
அரசியலமைப்பு என்பது உச்ச சட்டம் மட்டுமல்ல, அது மக்களின் விருப்பங்களையும் ஆசைகளையும் பிரதிபலிக்கும் சமூக ஒப்பந்தம் என்றார். சமத்துவமின்மை, அரசியல் மற்றும் ஏழைகளின் குரல் ஒடுக்கப்படுவது போன்ற விடயங்களை அரசியலமைப்புச் சீர்திருத்தம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார பரிமாணத்தை கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆழமாக விளக்கினார். அரசியலமைப்பு எவ்வாறு பொருளாதார நெருக்கடியைத் தடுக்க முடியும் என்ற கேள்விக்கு, அவர் நிதி விதிமுறைகள், கடன் முகாமை, அரச நிறுவனங்களில் நிதி ஒழுங்கமைப்பு, சுயாதீன மத்திய வங்கி ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தார். பணவீக்கம் மக்களின் வாழ்நாள் சேமிப்புகளை அழிப்பதோடு அது மனித மரியாதைக்கே எதிரானது என்றும் அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித், மனித உரிமைகள் குறித்து கருத்துக்களை வெளியிடுகையில், சஜித் பிரேமதாச அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அரசியலமைப்பு பிரிவு 29இன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் விடயங்களை நீதிமன்றத்தால் அமுல்படுத்த முடியாதவையாக இருப்பதைச் சுட்டிக்காட்டியவர், 'அப்படியானால் அவை அரசியலமைப்பில் இருப்பதன் பயன் என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
தென் ஆபிரிக்க அரசியலமைப்பைப் போல சமூக, பொருளாதார உரிமைகளையும் நடைமுறைப்படுத்தக்கூடியவையாக மாற்றம் இலங்கையின் புதிய அரசியமைப்பில் வேண்டும் என்றார்.
அத்துடன் இக் கலந்துரையாடலின் மற்றொரு முக்கிய அம்சமாக, 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளால் ஏற்பட்ட சமூக ஒப்பந்த முறிவு குறித்து விரிவாக பேசப்பட்டது.
எம்.ஏ.சுமந்திரன், 1972 அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது முக்கியமான சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அந்த செயல்முறையிலிருந்து விலகியதை நினைவூட்டினார்.
அதுவே பின்னர் நீண்டகால மோதலுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் வழிவகுத்ததாக அவர் சுட்டினார். 'எண்ணிக்கை முக்கியமல்ல ஒப்புதல் தான் முக்கியம். அனைவரின் சம்மதமும் இல்லையெனில் அது அரசியலமைப்பு அல்ல' என்ற அவரது கூற்று, சமூக ஒப்பந்தத்தின் மையத்தைக் குறிப்பதாக அமைந்தது.
அதேநேரம் வைத்தியர் சிறிநாத் எம்.பி.யும் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதோடு அரசியலமைப்பில் சமத்துவம் உறுதிப்படுத்துவதுதான் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தும் என்பதால் அந்தச் செயற்பாடு அவசியமானது என்று குறிப்பிட்டார்.
அதேபோல், தற்போதைய அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைச் சுட்டிக்காட்டிய பல பேச்சாளர்கள், ஜனநாயக இடைவெளி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்ற கவலையையும் வெளிப்படுத்தினர்.
பாராளுமன்றத்திற்குள் மற்றும் வெளியிலும் விவாத, எதிர்ப்புச் சுதந்திரம் குறுகுவது, எதிர்கால அரசியலமைப்புச் செயல்முறையின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் முன்வைக்கப்பட்டது.
எனவே, இந்த முயற்சி ஒரு 'ஆவணமாக' மட்டும் முடிவடையாமல், பொதுமக்கள் நம்பிக்கையையும் பங்கேற்பையும் உருவாக்கும் சமூக இயக்கமாக மாற வேண்டியது காலத்தின் அவசியம் என்பது கலந்துரையாடலின் முக்கிய கருப்பொருளாக அமைந்திருந்தது.
இறுதியாக, லசந்த அலகியவன்ன எழுப்பிய கேள்வி முழுக்கலந்துiராயடலின் சாரம்சத்துக்கு வழிவகுத்தது. அரசு எதிர்க்கட்சிகள்ளிட்ட கூட்டிணைந்த அரசியலமைப்புச் செயன்முறையை ஏற்கவில்லை என்றால் நாம் என்ன செய்வது? என்பதே அவருடைய பிரதான கேள்வியாகும்.
அத்துடன், நல்ல அரசியலமைப்பை உருவாக்குவது மட்டுமல்ல, அது ஏற்கப்படாவிட்டால் கல்வி, விழிப்புணர்வு, பொதுமக்கள் இயக்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் அழுத்தம் உருவாக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஒட்டுமொத்தமாக, இந்த கலந்துரையாடலில் சமூக ஒப்பந்தமான அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவை என்பதும் அது மீண்டும் புதிதாக உருவாக்காமல், இலங்கையின் ஆட்சி நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு இல்லை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!