அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அரசியலமைப்புகள் எழுதப்படுவதில்லை, மாறாக அதிகாரத்திற்கு எல்லைகள் தேவை என்பதாலேயே எழுதப்படுகின்றன.
அவை சட்டவாக்கத்துறை, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான உறவை நிறுவி, ஒவ்வொரு துறைக்கும் அதன் சொந்தப் பொறுப்புப் பகுதியை ஒதுக்கும் அதேவேளையில், எந்தவொரு துறையும் மற்றவற்றை விட மேலாதிக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.
பெரும்பான்மையான அரசியலமைப்பு விவாதங்கள் இந்த நிறுவனங்களில் ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும். அரிதாக சில விவாதங்கள் இரண்டு நிறுவனங்களை உள்ளடக்கியிருக்கலாம்.
ஆனால், ஒரு ஒற்றை அரசியலமைப்பு முன்மொழிவு இந்த மூன்று நிறுவனங்களையும் கேள்விக்குள் கொண்டுவருவது மிகவும் அரிதான ஒன்றாகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான தற்போதைய அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவு அதையே செய்கிறது.
இந்த அரசியலமைப்பு ஏற்பாடு கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்; ஏனெனில் எந்தவொரு நிறுவனத்தாலும் தவறு இழைக்கப்பட்டதாக அவசியமாகக் கருதப்பட வேண்டும் என்பதால் அல்ல,
மாறாக அரசியலமைப்பு வடிவமைப்பு குறித்தே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது என்பதனாலாகும். அரசியலமைப்பு ஜனநாயகம் என்பது பதவியில் இருப்பவர்களின் நேர்மையை மட்டும் சார்ந்திருக்கவில்லை.
அரசியலமைப்பு அதிகாரம் எந்த நிறுவனங்களின் மூலம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த நிறுவனங்கள் மீது பொதுமக்கள் வைக்கும் நம்பிக்கையையும் அது சமமாகச் சார்ந்துள்ளது.
நூற்றாண்டுகளாக, சட்ட அமைப்புகள் எளிமையான ஆனால் ஆழமான கொள்கையை அங்கீகரித்துள்ளன. நீதி வழங்கப்படுவதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது நீதி வழங்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும்.
இக்கொள்கை பெரும்பாலும் தவறாகப்புரிந்து கொள்ளப்படுகிறது. இது நீதிபதிகளின் மீதுள்ள சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை என்பது தனிப்பட்ட நேர்மையை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்ற மிகவும் மதிப்புமிக்க காரணமும் உள்ளது.
ஒரு நீதிபதி முழுமையான நேர்மையுடனும் சரியான நடுநிலைமையுடனும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடும். இருப்பினும், சூழ்நிலைகள் இயல்பாகவே ஒரு நிறுவன நலன் உள்ளதோ என்று பொதுமக்கள் யோசிக்கும்படி அமைந்தால், அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையே பாதிக்கப்படலாம்.
எனவே, பிரச்சினை என்பது தனிப்பட்ட நீதிபதிகளின் குணநலன் பற்றியது அல்ல. அது அரசியலமைப்பு நிறுவனங்களின் வடிவமைப்பு பற்றியதாகும். இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது.
அரசியலமைப்பு நிறுவனங்கள் தேவையின்றி பொதுமக்களின் சந்தேகத்திற்கு உள்ளாகும் சூழ்நிலைகளை உருவாக்குவதைத் தவிர்க்குமாறு அரசியலமைப்பு அறநெறி அரசாங்கங்களைக் கேட்டுக்கொள்கிறது.
நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு என்பது நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, அவற்றின் சுதந்திரமான தன்மையின் தோற்றத்தையும் சேர்த்துப் பாதுகாக்கிறது.
தற்போதைய விவாதம் இந்த வேறுபாடு ஏன் முக்கியமானது என்பதை விளக்குகிறது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்பது பொதுக்கொள்கை மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் சார்ந்த விடயம் என்று இம்முன்மொழிவின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால், இந்த முன்மொழிவு அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை இறுதியாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடியவர்களையே நேரடியாகப் பாதிக்கிறது என்ற கவலையை எதிர்ப்பாளர்கள் எழுப்புகின்றனர்.
யாராவது ஒரு தரப்பின் கருத்தை ஏற்பதா இல்லையா என்பது முதன்மையான பிரச்சினை அல்ல. அரசியலமைப்பு ஏற்பாடுகள் எந்தவொரு நிறுவனத்தையும் முதலிலேயே இத்தகையதொரு சங்கடமான நிலையில் வைக்க வேண்டுமா என்பதே ஆழமான அரசியலமைப்பு கேள்வியாகும்.
இக்கேள்வி நீதித்துறைக்கு அப்பாலும் நீடிக்கிறது. அரசியலமைப்பு ஒழுங்குமுறை குறித்து தேவையற்ற சந்தேகங்களை உருவாக்காமல் நிர்வாகத்துறை ஆட்சி செய்ய வேண்டும்.
சட்டவாக்கத்துறையானது பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக வலுப்படுத்தும் வழிகளில் தனது அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பு வடிவமைப்பே தடுத்திருக்க வேண்டிய கேள்விகளுக்கு நீதித்துறை ஆளாகும் சூழ்நிலைகளில் இருந்து அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது, தற்போதைய சர்ச்சை என்பது வெறும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது பற்றியது மட்டுமல்ல. அது அரசியலமைப்பு அரசாங்கத்தின் மூன்று மாபெரும் நிறுவனங்களுக்கு இடையேயான உறவுகள் குறித்த ஒரு பிரதிபலிப்பாக மாறுகிறது.
அரசியலமைப்புகள் என்பவை தேவையற்ற அரசியலமைப்பு பதற்றங்களை உருவாக்குவதற்காக அல்ல, மாறாக அவற்றைக் குறைப்பதற்காகவே உருவாக்கப்படுகின்றன.
எனவே, இந்தச் சர்ச்சை இலங்கைக்கு தற்போதைய முன்மொழிவுக்கு அப்பாற்பட்ட ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும். எமது அரசியலமைப்பு ஏற்பாடுகள் நிறுவனங்களின் அதிகாரங்களை மட்டுமின்றி, குடிமக்கள் அவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையையும் போதுமான அளவு பாதுகாக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.
தற்போதைய விவாதம் இறுதியில் எவ்வாறு தீர்க்கப்பட்டாலும், அந்த கேள்வி ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியதாகும். அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஆரோக்கியம் என்பது அதன் நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளில் மட்டும் சார்ந்திருக்கவில்லை.
மாறாக பொதுமக்களின் நம்பிக்கையே சர்ச்சைக்குரியதாக மாறும் சூழ்நிலைகளில் அந்த நிறுவனங்கள் தள்ளப்படுவதைத் தடுக்கும் அரசியலமைப்பு ஞானத்தையும் சார்ந்துள்ளது.
தற்போதைய விவாதத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் அதுவென்றால், இந்த அரசியலமைப்புத் தருணமானது இலங்கையின் ஜனநாயகப் பாரம்பரியத்தை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக இறுதியில் வலுப்படுத்தக்கூடும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான முன்மொழியப்பட்ட திருத்தம் அரசாங்கத்தின் மூன்று முக்கிய நிறுவனங்களையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தும் ஒரு விசித்திரமான அரசியலமைப்புச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகத்துறை மாற்றத்தை முன்மொழிகிறது, சட்டமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது, மேலும் நீதித்துறை அதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை பரிசீலிக்க அழைக்கப்படலாம்.
இந்த சூழ்நிலை நிறுவன சுதந்திரம் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை குறித்து ஒரு உடனடி கேள்வியை எழுப்புகிறது. ஆனால், இதுவொரு பெரிய கேள்வியையும் எழுப்புகிறது. இது வெறும் மற்றொரு அரசியலமைப்பு திருத்தம்தானா, அல்லது நீண்டகால அரசியலமைப்பு அனுபவத்தின் பகுதியாக இதை நாம் பார்க்க வேண்டுமா? என்பதாகும்.
அந்தக் கேள்விக்கு பதிலளிக்க, தற்போதைய சர்ச்சையிலிருந்து சற்றே விலகி நின்று பார்க்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை பல அரசியலமைப்பு அமைப்புகளின் கீழ் வாழ்ந்துள்ளது. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அதற்கு முந்தைய சோல்பரி அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்றி ஒரு புதிய குடியரசு முறையை நிறுவியது.
பின்னர் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை உருவாக்கி, நிர்வாகத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான உறவை அடிப்படையிலேயே மறுசீரமைத்தது. இவை நிலவிய அரசியலமைப்பு ஏற்பாட்டில் செய்யப்பட்ட வெறும் திருத்தங்கள் மட்டுமல்ல. அவை நாட்டின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களாகும்.
1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் பெற்ற அனுபவம் குறிப்பாகக் கற்பிக்கக்கூடியது. அது மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. சில திருத்தங்கள் நிர்வாகத்துறையின் அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளன. மற்றவை அதைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளன.
சில தேர்தல் ஏற்பாடுகளை மாற்றியமைத்துள்ளன. வேறு சில மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான உறவை மாற்றியுள்ளன அல்லது அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதித்துள்ளன. சில உதாரணங்களை மட்டும் பரிசீலிக்கையில் அவை வெளிப்படுகின்றன.
1982 ஆம் ஆண்டின் 3ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் முதல் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே புதிய ஆணையைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகளை மாற்றியது.
4ஆவது திருத்தம் முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்தது. இவை அரசியல் அதிகாரம், தேர்தல் ஆணைகள் மற்றும் அரசியலமைப்பு காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.
1987 ஆம் ஆண்டின் 13ஆவது திருத்தம் மாகாண சபைகளை அறிமுகப்படுத்தியதுடன் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே அரச அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவந்தது.
இது மொழி தொடர்பான முக்கியமான மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியது. 13ஆவது திருத்தம் பற்றிய ஒருவரின் அரசியல் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதன் அரசியலமைப்பு முக்கியத்துவத்தை மறுக்க முடியாது.
2001 ஆம் ஆண்டின் 17ஆவது திருத்தம் மற்றொரு திசையில் நகர்ந்தது. அது அரசியலமைப்புச் சபையை நிறுவியதுடன் தேர்தல், பொதுச் சேவை, பொலிஸ் மற்றும் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகள் உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தியது. இது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் நிறுவனக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
2010 ஆம் ஆண்டின் 18ஆவது திருத்தம் அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து, ஜனாதிபதி முறை தொடர்பான அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்றியமைத்து, ஜனாதிபதி பதவிக்காலங்களின் எண்ணிக்கை மீதான முந்தைய வரம்பை நீக்கியது.
2015 ஆம் ஆண்டின் 19ஆவது திருத்தம் மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் நிறுவன பரிசோதனைகளை வலுப்படுத்தும் திசையில் நகர்ந்தது.
2020 ஆம் ஆண்டின் 20ஆவது திருத்தம் அந்த மாற்றங்கள் பலவற்றைத் தலைகீழாக மாற்றி, நிர்வாகத்துறைக்கு மீண்டும் அதிக அதிகாரத்தை வழங்கியது. 2022 ஆம் ஆண்டின் 21ஆவது திருத்தம் பின்னர் மீண்டும் ஒருமுறை கட்டுப்பாடுகள், சமநிலைகள் மற்றும் சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்த முயன்றது.
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட திருத்தம் சரியா தவறா என்பதை இங்கே தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. அது இதன் நோக்கமும் அல்ல. இங்கு கவனிக்கத்தக்கது என்னவென்றால் திருத்தங்களின் போக்குகளைத்தான்.
அதிகாரம் வலுப்படுத்தப்படுகிறது. பின்னர் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. பின்னர், அந்தக்கட்டுப்பாடுகளில் சில நீக்கப்படுகின்றன. பின்னர், அவற்றில் சில மீண்டும் மீட்டெடுக்கப்படுகின்றன. அரசியலமைப்பு ஊசல் ஆடுகிறது. இது மீண்டும் மீண்டும் நடக்கும்போது, தனிப்பட்ட திருத்தங்களின் வார்த்தைகளை விட ஒரு அரசியலமைப்பு கலாசாரம் உருவாகத் தொடங்குகிறது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அரசியலமைப்பு கலாசாரத்திற்கும் இடையிலான வேறுபாடு இங்குதான் முக்கியமாகிறது. அரசியலமைப்பை எவ்வாறு திருத்தலாம் என்று அரசியலமைப்புச்சட்டம் எமக்குச் சொல்கிறது. அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் கொண்டவர்கள் அந்த அதிகாரத்தைப் பற்றி எவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அரசியலமைப்பு கலாசாரம் எமக்குச் சொல்கிறது.
முதலாவது சட்ட நடைமுறை சார்ந்த விடயம். இரண்டாவதாக இருப்பது அரசியல் அறநெறி சார்ந்த விடயம். அரசியலமைப்பைத் திருத்துவது என்பது சிறப்புமிக்க அரசியலமைப்பு நடைமுறை என்பதை இலங்கையின் அரசியலமைப்பே அங்கீகரிக்கிறது.
உறுப்புரை 82 ஆனது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் முழு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உட்பட குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனக்கோருகிறது.
சில சூழ்நிலைகளில், பொதுசன வாக்கெடுப்பில் மக்களின் ஒப்புதலையும் அரசியலமைப்பு கோருகிறது. ஆனால், அரசியலமைப்புச் சட்டப்பூர்வத் தன்மை என்பது கேள்வியின் தொடக்கம் மட்டுமே. ஒரு அரசாங்கம் தேவையான பெரும்பான்மையைக் கொண்டிருக்கலாம். ஒரு சட்டமூலம் தேவையான நடைமுறையை பூர்த்தி செய்யக்கூடும்.
அந்தவகையில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படுமொரு திருத்தம் முற்றிலும் சட்டப்பூர்வமானதாக இருக்கலாம். இருப்பினும், மற்றொரு கேள்வி எஞ்சியுள்ளது. அரசியலமைப்பை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள், அந்த அதிகாரத்தை அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சாதாரண கருவியாகக் கருதத்தொடங்கும்போது அரசியலமைப்புக்கு என்ன நடக்கும்? என்பதாகும்.
இலங்கைக்கான பாடம் அரசியலமைப்பு திருத்தம் விரும்பத்தகாதது என்பதல்ல. அரசியலமைப்பு மாற்றமடைய முடியாததாக மாற வேண்டும் என்பதும் அல்ல. அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் தானே அரசியலமைப்பு ரீதியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
அது வெளிப்படையாகத் தோன்றும் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அதில் ஆழமான கொள்கை உள்ளது. அரசியலமைப்பு அதிகாரத்தை அரசியலமைப்பு ரீதியாகப் பயன்படுத்துவது என்பது அரசியலமைப்பின் முறையான தேவைகளைப் பூர்த்தி செய்வதை விட மேலானது.
அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு அரசாங்கம் எதற்காக நிலவுகிறதோ அந்த நோக்கத்திற்கு இசைவாக இருக்கிறதா என்று கேட்பதை அது குறிக்கிறது. இது நம்மை தற்போதைய சர்ச்சைக்கு மீண்டும் கொண்டு வருகிறது. நாட்டின் முன் உள்ள கேள்வி உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்ற வேண்டுமா என்பது மட்டுமல்ல. மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான பாராளுமன்ற பலம் தற்போதைய அரசிடம் உள்ளதா என்பது மட்டுமே கேள்வி அல்ல. இந்தத் தருணம் என்ன அரசியலமைப்பு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது என்பதே பெரிய கேள்வியாகும்.
அதேவேளை, இலங்கையின் ஆட்சியாளர்களும், எதிர்கலத்தில் ஆட்சியைப் பொறுப்பேர்க்க போராடுபவர்களும் இப்போது தம்மைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, இந்தத் திருத்தமா அல்லது அந்தத் திருத்தமா அரசியல் ரீதியாக விரும்பத்தக்கது என்பது பற்றியது அல்ல.
மாறாக மிகவும் அடிப்படையான விடயம் என்னவென்றால் தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்யப்போபவர்களுக்காக எத்தகைய அரசியலமைப்பு கலாசாரத்தை உருவாக்குகிறோம்? என்பதாகும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!