ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அரசியல் அதிகார படிநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஈரானின் அதிகார மையத்தில் நிழல் மனிதராகச் செயற்பட்டு வந்த அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி, தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நியமனம் ஈரானிய புரட்சிக்குப் பிந்தைய வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகும் என்பதோடு சர்ச்சைக்குரிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது.

1969இல் பிறந்த மொஜ்தபா, தனது தந்தையின் நிழலிலேயே வளர்ந்தவர் என்றாலும், ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ மற்றும் உளவு அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் அவர் கொண்டுள்ள ஆழ்ந்த பிணைப்பு அவரை மிக வலிமையான தலைவராக உருவகப்படுத்துகிறது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானின் உள்நாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் மொஜ்தபா முக்கிய முடிவுகளை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 2009ஆம் ஆண்டு ஈரானில் வெடித்த 'பச்சை புரட்சி' போராட்டங்களை மிகக்கொடூரமான முறையில் ஒடுக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

இந்த பின்னணியில் அவர் ஒரு கடும்போக்குவாதியாக இருப்பார் என்பதையும், உள்நாட்டு எதிர்ப்புகளை சகித்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.

மொஜ்தபா கமேனியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயும்போது, அவர் தனது தந்தையின் கொள்கைகளை இன்னும் தீவிரமான முறையில் முன்னெடுப்பார் என்றே தெரிகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை வலுப்படுத்துவது மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவையில் அவர் சமரசமற்ற போக்கைக் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, இஸ்ரேலுடனான நேரடி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிக்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதக் குழுக்கள் உள்ளடங்கிய 'எதிர்ப்பு அச்சு' அமைப்புகளுக்கு அவர் வழங்கும் ஆதரவு பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது மத்திய கிழக்கில் பெரும் போருக்கான சூழலைத் தீவிரப்படுத்தலாம். மேலும், ஈரானின் பொருளாதாரக் கட்டமைப்பில் புரட்சிகர காவல்படையின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதன் மூலம், நாட்டின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவர் முயல்வார் என்றும் கணிக்கப்படுகிறது.

ஈரானிய புரட்சியானது வாரிசு அரசியலை ஒழிப்பதற்காகவே உருவானது என்ற போதிலும், தற்போது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரம் கைமாறியுள்ளமையானது மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிக்க அவர் மத ரீதியான சட்டபூர்வத் தன்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சர்வதேச அளவில் மொஜ்தபா கமேனியின் வருகை மிகுந்த அச்சத்துடன் நோக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவரை ஒரு ஜனநாயக விரோத மற்றும் பயங்கரவாத ஆதரவுத் தலைவராகவே பார்க்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஏற்கனவே மொஜ்தபா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், அவரது நியமனத்தை சட்டவிரோதமானதென அறிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இனி முடங்க வாய்ப்புள்ளதால், ஈரான் மீதான சர்வதேசத் தனிமைப்படுத்தல் இன்னும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

மறுபுறம், இஸ்ரேல் இந்த மாற்றத்தை ஒரு நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மொஜ்தபாவின் தலைமையிலான ஈரான் ஒருவேளை அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சித்தால் அது உலகளாவிய மோதலாக மாறும் அபாயமுள்ளது.

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ஈரானின் இந்த புதிய தலைமையால் பிராந்திய பாதுகாப்பு சமநிலை பாதிக்கப்படும் என்ற அச்சம் உயர்வடைந்துள்ளது.

உள்நாட்டைப் பொறுத்தவரை, ஈரானிய இளைஞர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் மத்தியில் மொஜ்தபாவுக்குப் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. 'மொஜ்தபா, நீ செத்துப் போ, தலைவராகாதே' என்ற முழக்கங்கள் கடந்த காலப் போராட்டங்களில் ஈரானியத் தெருக்களில் எதிரொலித்த வரலாறை மறக்க முடியாது.

முறையான தேர்தலின்றி, ஒரு இரகசியக் குழுவின் மூலம் அவர் நியமிக்கப்பட்டது ஈரானிய இறையாண்மைக்கு எதிரானது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டம், கடுமையான பணவீக்கம் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் சோர்ந்து போயிருக்கும் ஈரானிய மக்கள், மொஜ்தபாவின் கடும்போக்கு ஆட்சியால் தங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா அல்லது இன்னும் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவோமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இறுதியில், மொஜ்தபா கமேனியின் எதிர்காலம் என்பது அவர் தனது தந்தையைப் போல ஒரு சர்வாதிகாரப் பிடியை நிலைநிறுத்துவாரா அல்லது சர்வதேச அழுத்தம் மற்றும் உள்நாட்டுப் புரட்சியால் அவரது அதிகாரம் வீழ்த்தப்படுமா என்பதைப் பொறுத்தே அமையும்.

மத்திய கிழக்கின் அமைதி மற்றும் உலக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக மொஜ்தபாவின் இந்த புதிய அதிகார சகாப்தம் மாறியுள்ளது.

இந்த அதிகார மாற்றம் வெறும் தலைவருக்கான மாற்றமாக மட்டும் பார்க்கப்படாமல், மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றியமைக்கக்கூடியதொரு காரணியாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முழுமையான ஆதரவுடன் அவர் அரியணை ஏறியிருப்பது, ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் இனி 'ராஜதந்திரத்திற்கு' இடமில்லை என்பதையும் 'இராணுவ வலிமைக்கே' முன்னுரிமை அளிக்கப்படும் என்பதையும் உலகிற்கு உணர்த்துகிறது.

கடந்த காலங்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டபோது ஈரான் காட்டிய நிதானத்தை விட, மொஜ்தபாவின் தலைமையில் ஈரான் காட்டப்போகும் எதிர்வினை மிகவும் ஆக்ரோஷமானதாக இருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நேரடி மோதல் போக்கைத் தவிர்த்து வந்த பழைய தந்திரோபாயங்களை விடுத்து, 'தற்காப்புத் தாக்குதல்' என்ற புதிய கொள்கையை அவர் கையில் எடுக்கக்கூடும். இது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நகரங்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும்.

மேலும், மொஜ்தபாவின் உள்நாட்டுத் திட்டங்கள் என்பது ஈரானின் மதக் கோட்பாடுகளை இராணுவக் கட்டமைப்போடு இணைப்பதாகவே அமையும். ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே சர்வதேசத் தடைகளால் நலிவடைந்துள்ள நிலையில், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தைச் சமாளிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக, ரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சீனாவிற்கான எண்ணெய் ஏற்றுமதி ஆகியவற்றை அவர் தனது ஆட்சியின் பிடிமானமாகப் பயன்படுத்துவார். அதேநேரம், ஈரானின் 'பாசிஜ்' அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு அதிருப்தியாளர்களையும் போராட்டக்காரர்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அவர் தயங்கமாட்டார்.

இது ஈரானியச் சமூகத்தில் ஒருவித அச்ச உணர்வையும் அதேசமயம் அடியில் கனதியாகவிருக்கும் புரட்சித் தீயையும் ஒருசேர வளர்க்கும் நிலைமைகள் தோன்றும்.

உலக நாடுகளின் பார்வையில், மொஜ்தபா மர்மமான மற்றும் கணிக்க முடியாத தலைவராகவே நீடிக்கிறார். அவர் பொதுவெளியில் உரையாற்றுவதைத் தவிர்ப்பதும், இரகசியத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் வல்லவர் என்பதும் சர்வதேச உளவு அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக காணப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற போதிலும், மொஜ்தபாவின் வருகைக்குப் பிறகு அந்த வாய்ப்புகள் முழுமையாக மழுங்கிவிட்டன.

வளைகுடா நாடுகள், குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஈரானின் இந்த புதிய தலைமையால் ஈராக், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஈரானின் தலையீடு அதிகரிக்குமென அஞ்சுகின்றன.

இத்தகைய சூழலில், மொஜ்தபா கமேனியின் ஒவ்வொரு நகர்வும் உலக எரிசக்திச் சந்தை மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.

அவரது தலைமை என்பது ஈரானைப் பாதுகாப்பதற்கானவொரு கவசமாக இருக்குமா அல்லது அந்த நாட்டை பெரும் போரின் அழிவிற்குள் தள்ளுமா என்பது அடுத்துவரும் சொற்ப காலத்தில் அவர் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகளிலேயே தங்கியுள்ளது.