மத்திய கிழக்கில் திடீரென வெடித்துள்ள போர்ச் சூழலும், அதன் விளைவாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ள நடவடிக்கையும் உலக நாடுகளை ஒரு பாரிய பொருளாதாரப் பள்ளத்தை நோக்கித் தள்ளியுள்ளது.
குறிப்பாக, ஏற்கனவே பலவீனமான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இது ஒரு சாதாரண சவாலல்ல, மாறாக ஒரு 'பொருளாதாரப் பேரிடர்' என்றுதான் கூறவேண்டும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் ஈரானின் மிக முக்கிய உள்கட்டமைப்புகளைச் சிதைத்துள்ள நிலையில், ஈரான் தனது கையில் உள்ள மிக வலிமையான பொருளாதார ஆயுதமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது.
உலக வரைபடத்தில் ஒரு சிறிய கோடு போலத் தெரியும் இந்த நீரிணைதான் உலகின் மொத்த எரிபொருள் விநியோகத்தில் சுமார் முப்பது சதவீதத்தைத் தீர்மானிக்கிறது. இந்த நீர்வழிப் பாதை அடைக்கப்பட்டிருப்பது என்பது உலகப் பொருளாதாரத்தின் சுவாசப்பையை யாரோ ஒருவன் இறுக்கிப் பிடித்திருப்பதைப் போன்றது.
இலங்கையைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டு அனுபவித்த கசப்பான நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன. எரிபொருள் வரிசைகள், மருந்துத் தட்டுப்பாடு, மின்துண்டிப்பு என்பன ஒரு நாட்டை எவ்வாறு நிலைகுலையச் செய்யும் என்பதை நேரில் கண முடிந்தது.
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றம் அந்த இருண்ட நாட்களை மீண்டும் கொண்டு வரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தனது எரிபொருளை நேரடியாக ஈரானிடமிருந்து பெறாவிட்டாலும், நாம் நம்பியிருக்கும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஹோர்முஸ் நீரிணையையே சார்ந்துள்ளன. அங்கு ஏற்படும் விநியோகத் தடை அல்லது விலை உயர்வு தானாகவே இலங்கையின் சந்தையிலும் எதிரொலிக்கும்.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் நூறு டொலர்களைத் தாண்டும்போது, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிக வேகமாக உருகத் தொடங்கும். இது மீண்டும் எரிபொருள் விலையேற்றத்திற்கும், அதன் தொடர்ச்சியாக மின்சாரக் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.
அடுத்ததாக, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் அந்நியச் செலாவணி வருவாய் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்கள் அனுப்பும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்குத் தாங்கிப் பிடிக்கிறது. போர்ச் சூழலால் அந்த நாடுகளின் பொருளாதாரம் மந்தமடைந்தால் அல்லது அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ஆண்டுக்குக் கிடைக்கும் ஏழு பில்லியன் டொலர் வருவாய் பாரிய அளவில் வீழ்ச்சியடையும்.
அதுமட்டுமன்றி, அந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய சுமை இலங்கையின் தலைமேல் விழும். இது இலங்கையின் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், அந்நியச் செலாவணித் தேவையையும் ஒரே நேரத்தில் அதிகரிக்கும் ஒரு பாரிய நெருக்கடியாகும்.
இலங்கையின் ஏற்றுமதித் துறையும் இந்த யுத்தத்தால் பெரும் அடிவாங்கும். குறிப்பாக 'சிலோன் டீ' எனப்படும் இலங்கைத் தேயிலையின் மிகப்பெரிய சந்தையாக ஈரான், ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் உள்ளன.
போர் தீவிரமடையும் போது, அந்த நாடுகளின் கொள்முதல் திறன் குறையும். மேலும், கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிச் செலவுகள் இருமடங்காக அதிகரிக்கும்.
இது இலங்கையின் ஆடைக் கைத்தொழில் மற்றும் தேயிலை ஏற்றுமதியை உலகச் சந்தையில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளும். ஏற்கனவே இறக்குமதிச் செலவுகளைக் கட்டுப்படுத்தத் திணறும் இலங்கைக்கு, இது வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்தும்.
உணவுப் பாதுகாப்பும் இங்கு கேள்விக்குறியாகிறது. எரிபொருள் விலை உயர்வு என்பது வெறும் போக்குவரத்துச் செலவு மட்டுமல்ல, அது விவசாயத்திற்கான உரம் மற்றும் இயந்திரங்களின் செலவையும் உயர்த்தும். இது உள்நாட்டு உணவுப் பொருட்களின் விலையை விண்ணைத் தொடச் செய்யும்.
இறக்குமதி செய்யப்படும் பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வரத்து குறையும் போது, நாட்டில் மீண்டும் ஒரு செயற்கையான தட்டுப்பாடு மற்றும் கறுப்புச் சந்தை உருவாகும் சூழல் ஏற்படும்.
சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை, விமானக் கட்டண உயர்வு மற்றும் சர்வதேசப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை நோக்கிய பயணிகளின் வருகை குறையக்கூடும். குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களைத் தள்ளிப்போட வாய்ப்புள்ளது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1980களில் நிகழ்ந்த ஈரான்-ஈராக் போரின் போது உலகம் இத்தகைய நெருக்கடியைச் சந்தித்தது. ஆனால் அன்று இலங்கையின் பொருளாதாரம் இன்று இருப்பதைப் போலக் கடன் சுமையால் பிணைக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போதைய சூழலில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் மீண்டு வரும் வேளையில் இப்போரானது அந்த மீட்சிப் பாதையில் ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இந்தப் போர் நீண்ட காலத்திற்குத் தொடருமானால், அது உலகளாவிய ஒரு பொருளாதாரப் பெருமந்தத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை போன்ற நாடுகள் இத்தகைய பூகோள அரசியல் நெருக்கடிகளை முன்கூட்டியே கணித்து, எரிபொருள் கையிருப்பை அதிகரிப்பதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு விரைவாக மாறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அமைதி திரும்புவது மட்டுமே உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும். அதுவரை இலங்கை போன்ற வளரும் நாடுகள் ஒரு மிகக்கடினமான பொருளாதாரக் காலத்தைக் கடக்க வேண்டியிருக்கும் என்பது கசப்பான உண்மையாகும்.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!