'பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான பிரத்தியேக சட்டமொன்று இலங்கைக்கு அவசியமா?' எனும் கேள்வியே தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமானது.
இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அத்தகையதொரு சட்டம் அவசியமில்லை என்பதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தின் ஒருமித்த கருத்தாகும்.
1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்வைச் சிதைத்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எவ்வித நிபந்தனையுமின்றி ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்தே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது.
ஆனால், தற்போது அவர்கள் முன்மொழிந்துள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு' , அவர்கள் எதை கடுமையாக எதிர்த்தார்களோ அதையே மீண்டும் புதிய பெயரில் மக்களின் தலைமேல் திணிக்கும் முயற்சியாகவே அமைந்துள்ளது.
இதுவொரு ஆக்கபூர்வமான மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அரசியல் துரோகமாகும். அரசாங்கம் அதனை உணராது தற்போது அதற்கு பல்வேறு கற்பிதங்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்தப் புதிய சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலரும் முன்வைக்கும் விமர்சனங்கள், இலங்கையின் எதிர்கால ஜனநாயகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, முந்தைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் கொண்டுவந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் ஒரு 'காபன் பிரதியாகவே' இந்த புதிய வரைவு காணப்படுகிறது.
ஒரு குற்றவியல் சட்டத்தை வரையறுக்கும்போது அதன் 'நோக்கம்' மற்றும் 'செயல்' துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால், இப்புதிய வரைவில் 'பயங்கரவாத செயல்' என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது.
குறிப்பாக, 'நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறைமையை மீறுவதற்கான நோக்கம்' எனும் வாசகம் சட்டபூர்வமான சிவில் போராட்டங்களை நசுக்கப் பயன்படுத்தப்படலாம்.
உதாரணமாக, வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் சமஷ்டி கோரிக்கைகளை அல்லது தன்னாட்சி உரிமைக் குரல்களை, ஒரு கடும்போக்கு அதிகாரி மிக எளிதாக 'பயங்கரவாதமாக' முத்திரை குத்தி கைது செய்ய இச்சட்டம் வழிவகுக்கிறது.
இச்சட்டத்தின் மற்றுமொரு அபாயகரமான அம்சம் 'சட்டபூர்வ இராணுவமயமாக்கம்' ஆகும். சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடைமுறைகள் குறித்து முறையான பயிற்சியற்ற முப்படையினருக்கு, வெறும் 'நியாயமான சந்தேகத்தின' அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவும், தேடுதல் நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது நாட்டில் நிரந்தரமாக அவசரகால நிலையைத் தோற்றுவிப்பதோடு, இராணுவக் கட்டமைப்பை சிவில் நிர்வாகத்திற்குள் பலவந்தமாகப் புகுத்துகிறது. மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குத் தடுத்துவைப்பு உத்தரவு வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது, நீதித்துறையின் கண்காணிப்பை வலுவிழக்கச் செய்கிறது.
ஒரு நபரை பிணையில் விடுவிக்க நீதிவானுக்கு அதிகாரம் இருந்தாலும், அவர் மீது குற்றச்சாட்டுகள் இல்லை எனத் தெரிந்தும் அவரை முழுமையாக விடுவிக்கும் அதிகாரம் நீதிவானுக்கு மறுக்கப்பட்டிருப்பது, இலங்கையின் நீதித்துறை சுயாதீனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
இச்சட்டத்தின் கீழ் ஒரு நபர் புரிந்த குற்றம் என்னவென்பதை அவரிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வழக்குத் தாக்கல் செய்யாமலேயே ஒரு நபரை ஓராண்டு காலம் வரை தடுத்து வைக்க முடியும் என்ற சரத்து, பழைய பயங்கரவாத தடைச் சட்டத்தைப் போலவே சித்திரவதைகளுக்கும் அநீதிகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதாக உள்ளது.
ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் கடந்த காலங்களில் இத்தகைய ஒடுக்குமுறைச் சட்டங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டவை. அவ்வாறானதொரு பின்னணியில் இருந்து வந்தவொரு அரசாங்கம், இப்போது அதே அடக்குமுறை ஆயுதத்தைத் தனது கைகளில் எடுப்பது பெரும் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது.
அரசாங்கம் இச்சட்டம் குறித்து 'கலந்துரையாடல் காலப்பகுதி' என்று 2026 பெப்ரவரி 28 வரை அவகாசம் வழங்கியிருந்தாலும், அது வெறும் கண் துடைப்பு நாடகமாகவே பார்க்கப்படுகிறது.
உண்மையான ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடமளிக்காமல், கருத்துக்களை மட்டும் மின்னஞ்சல் ஊடாகப் பெற்றுக்கொள்வது என்பது ஜனநாயகப் பண்பாகாது. இலங்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள குண்டுவெடிப்புத் தடுப்புச்சட்டம், நிதியளிப்புத் தடுப்புச்சட்டம், பணயக்கைதிகள் தடுப்புச்சட்டம் போன்ற பல சட்டங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கையாளப் போதுமானவை என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறிருக்கையில், இப்புதிய சட்ட வரைவு என்பது சமூக மாற்றத்தை விரும்பும் சக்திகளையும், உரிமைக் குரல்களையும் ஒடுக்குவதற்காக அரசாங்கம் பயன்படுத்தத் துடிக்கும் தற்காப்பு அரணே தவிர வேறொன்றுமில்லை.
தமிழ் மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால், இச்சட்டம் மீண்டும் ஒருமுறை வடக்கு-கிழக்கை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள், நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகள் போன்றவற்றை 'இறைமைக்கு எதிரானவை' என வியாக்கியானம் செய்து, இளையோர் சமூகத்தை மீண்டும் சிறைக்குள் தள்ள இச்சட்டம் வழிவகுக்கும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'முறைமை மாற்றத்தைப்' பற்றிப் பேசியது, சட்டங்களை மாற்றவா அல்லது அதே அடக்குமுறைச் சட்டங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டவா என்ற சந்தேகம் இப்போது வலுவாக எழுந்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை என்பது வெறும் சட்டமாற்றம் மட்டுமல்ல் அது இலங்கையில் நிலவும் இனவாத அடக்குமுறைக்கும், ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு குறியீடாகும்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, சர்வதேச மனித உரிமை நியமங்களுக்குப் புறம்பான சரத்துக்களை உள்ளடக்கிய இந்த 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை' உடனடியாக மீளப் பெற வேண்டும்.
அநியாயமான கைதுகளும், நீண்டகாலத் தடுத்துவைப்புகளும் மீண்டும் ஒருமுறை இலங்கையின் ஜனநாயகப் பண்புகளைச் சிதைக்க அனுமதிக்க முடியாது. மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், காலப்போக்கில் அதே மக்களால் நிராகரிக்கப்படும் என்பதே உலக வரலாறு உணர்த்தும் கசப்பான பாடமாகும்.
இத்தகைய புதிய சட்ட வரைவுகள் மூலம் அரசைப் பாதுகாக்க முயலும் ஆட்சியாளர்கள், உண்மையில் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை உணர வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய நிலையில் அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற நிலையில் தனது அதிகாரத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்தச் சட்டத்தினை தாராளமாக பயன்படுத்தும் முனைப்பையே கொண்டிருப்பதாக வெளிப்படுகின்றது.
ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் அரசாங்கங்களால் பதிலீட்டுச் சட்டமூலங்களாக முன்வைக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவை தொடர்பான கலந்துரையாடல்களை நிராகரித்த அநுரகுமார தலைமையிலான தோழர்கள் இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கு சட்டமியற்ற முற்படுகினறார்கள் என்பது அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறியதும் கண்டிருக்கின்ற மாற்றத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
தற்போது அவர்களுக்கு பாராளுமன்றப் பலம் இருக்கின்றது என்பதற்காக இத்தகைய சட்டங்களை நிறைவேற்றுவதானது, அடுத்துவரும் காலத்தில் அதிகாரத்தை இழப்பதற்கு மட்டுமல்ல மக்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும் இழப்பதற்கே வழிசமைக்கும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!