இலங்கை அரசியலில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருந்த 'இந்திய எதிர்ப்புவாதம்' என்ற கோஷத்திற்குப் பின்னால் இருந்த மிக வலிமையான சக்தி ஜேவிபி. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய-இலங்கை ஒப்பந்தம், 13ஆவது திருத்தம், இந்தியத் தயாரிப்புகள் என அனைத்தையும் முற்றுமுழுதாக நிராகரித்து.

'இந்திய விஸ்தரிப்புவாதம்' என்ற சொல்லாடலைத் தமது அரசியல் வேராகக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். இத்தகையதொரு பின்னணியில், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று புதுடில்லிக்கு மேற்கொண்ட பயணம், தெற்காசிய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தில் எவ்வித உத்தியோகபூர்வ பதவியும் வகிக்காத போதிலும், நாட்டின் 'நிழல் ஜனாதிபதியாக' வர்ணிக்கப்படும் ரில்வின் சில்வாவுக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருப்பது, இரு தரப்பிலுமே ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தைக் காட்டுகிறது.

ரில்வின் சில்வாவின் இந்தப் பயணம் ஆச்சரியமானது மட்டுமல்ல, ஜே.வி.பியின் அடிப்படைக் கொள்கைகளுக்கே சவால் விடுப்பதாக அமைந்துள்ளது. சந்திரிகா குமாரதுங்க முதல் சஜித் பிரேமதாச வரை பல தலைவர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், ரில்வின் சில்வா இவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

ஆயுதப் போராட்ட காலத்திலும் சரி, ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட காலத்திலும் சரி, ஜேவிபி எப்போதும் சீனச் சார்பு நிலையையும் கடும் இந்திய எதிர்ப்பு நிலையையுமே பேணி வந்தது. குறிப்பாக, 1987-1989 காலப்பகுதியில் இந்தியப் படைகளுக்கு எதிரான இவர்களது ஆயுதப் போராட்டம் இலங்கையின் வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களைக் கொண்டது.

இந்தியாவை எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே கணித்து வந்த கட்சியின் முதுகெலும்பாகத் திகழும் ரில்வின் சில்வா, அதே இந்தியாவின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருப்பது, கொள்கை ரீதியான மாற்றமா அல்லது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான இராஜதந்திர நகர்வா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியா பிராந்திய சக்தி என்பதை ஜே.வி.பி. எப்போதும் அச்சுறுத்தலாகவே பார்த்து வந்தது. அந்தப் பாரம்பரிய பகையை மறந்துவிட்டு, டில்லியின் விருந்தினராக ரில்வின் சில்வா பயணித்திருப்பது அவர் மீதான 'நிழல் ஜனாதிபதி' என்ற பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்திய கலாசார உறவுக் குழுவின் ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், இது வெறும் கலாசார விஜயம் அல்ல என்பதை ரில்வின் சில்வா டில்லியில் தரையிறங்கியவுடன் சந்தித்த நபர்களே உறுதிப்படுத்தினர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரைச் சந்தித்ததன் மூலம், இது முழுக்க முழுக்க இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு சார்ந்த பயணமாக மாறியது.

பிரதமர் மோடியைச் சந்திக்கவில்லை என்றாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் நடத்திய உரையாடல் மிக முக்கியமானது.

இந்தப் பயணத்தின் போது 13ஆவது திருத்தம் குறித்துப் பேசப்படவில்லை என்று ரில்வின் சில்வா பின்னர் குறிப்பிட்டிருந்தாலும், இந்தியாவின் பூகோள அரசியல் அபிலாஷைகளை ஜே.வி.பிக்கு உணர்த்துவதே புதுடில்லியின் பிரதான நோக்கமாக இருந்தது.

குறிப்பாக, வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி இளங்குமரனையும், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிட்ணனையும் அவர் அழைத்துச் சென்றது, இந்தியாவின் அக்கறைக்குரிய பகுதிகளைத் தான் கையாள்வதாகக் காட்டுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

இருப்பினும், இதிலொரு முஸ்லிம் பிரதிநிதிகூட இடம்பெறாதது, ஜே.வி.பியின் பல்லினப் பிரதிநிதித்துவத்தில் உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுவதுடன், ஒரு சாராரை மட்டும் திருப்திப்படுத்தும் உத்தியாகவே அவதானிகளால் பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இந்தியாவின் 'ஆதார்' முறையை அடியொற்றிய டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், ரில்வின் சில்வா டில்லியில் உள்ள டிஜிட்டல் ஆவண மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது குறியீட்டு மாற்றமாகும்.

அதேபோல், மில்கோ மற்றும் அமுல் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை இரத்து செய்த தற்போதைய அரசாங்கத்தின் முடிவால் ஏற்பட்ட கசப்புணர்வை நீக்க, குஜராத்தில் உள்ள அமுல் பண்ணைகளை அவர் பார்வையிட்டதும் முக்கிய நகர்வாகும்.

இந்தியாவின் கூட்டுறவுப் பால் உற்பத்தி மாதிரியை நேரில் காண்பதன் மூலம், ஜே.வி.பியின் முந்தைய எதிர்ப்புகளை வலுவிழக்கச் செய்ய இந்தியா திட்டமிட்டிருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கொழும்பு துறைமுகத்திற்குப் போட்டியாகக் கருதப்படும் கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டது, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தையும் பொருளாதார வலிமையையும் அவர் நேரில் உணரச் செய்வதற்கான தந்திரோபாயமாகும்.

அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும் விழிஞ்ஞம் துறைமுகத்தின் வெற்றியை அவருக்குக் காட்டுவதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கையின் துறைமுகங்களை இந்தியா நிர்வகிப்பதற்கான எதிர்ப்புகளைக் குறைப்பதே இந்தியாவின் திட்டமாக இருக்கலாம்.

ஏற்கனவே இந்தியாவின் அதானி குழும முதலீடுகள் குறித்து ஜே.வி.பி. கடும் விமர்சனங்களைக் கொண்டிருந்த நிலையில், இந்த விஜயம் அந்த விமர்சனங்களின் கூர்மையை மழுங்கடிக்கச் செய்துள்ளது.

மேலும், கேரளாவின் இடதுசாரி ஆட்சிக்கும் டில்லிக்கும் இடையிலான உறவைக் கையாள்வதில் கேரள அதிகாரிகள் வகிக்கும் பங்கை ரில்வினுக்குப் புரிய வைப்பதன் மூலம், கம்யூனிசக் கட்சி எவ்வாறு தேசிய சக்தியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற பாடத்தையும் இந்தியா மறைமுகமாகப் புகட்டியுள்ளது.

இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்று பார்த்தால், ரில்வின் சில்வா தனது நீண்டகால 'இந்திய எதிர்ப்பு' நிலைப்பாட்டைச் சுருக்கிக் கொண்ட விதமாகும்.

நாடு திரும்பிய பின்னர் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. 'நாங்கள் இந்திய நாட்டை எதிர்க்கவில்லை, அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையே எதிர்த்தோம்' என்று அவர் கூறியிருப்பது, ஜே.வி.பியின் வரலாற்றுக் கொள்கையை கட்சி அரசியலாகக் குறுக்கிவிடும் முயற்சியாகும்.

இதன் மூலம் இந்தியாவின் இன்றைய பா... அரசாங்கத்துடன் இணங்கிச் செல்வதற்கான தத்துவார்த்த வாசலை அவர் திறந்துள்ளார். இது காலத்தின் கட்டாயம் என்று அவர் நியாயப்படுத்தினாலும், சீனாவின் தீவிர ஆதரவாளராக இருந்த கட்சி, இன்று இந்தியாவின் பக்கம் சாய்வது பீஜிங்கிற்கு எச்சரிக்கை மணியாகவே உள்ளது.

ஜே.வி.பியின் சீன சார்பு என்பது அவர்களது பாரம்பரியமான கொள்கை நிலைப்பாடாகும். ஆனால் ரில்வின் சில்வாவின் இந்தப் பயணத்தின் மூலம், ஜே.வி.பி. இப்போது 'இருதலைக் கொள்கையை' கையாளத் தொடங்கிவிட்டது தெளிவாகிறது.

ஒருபுறம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேரடி உறவைப் பேணிக்கொண்டு, மறுபுறம் இந்தியாவின் பா... அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவது என்பது கடினமான இராஜதந்திர கயிற்று நடைப்பயணமாகும்.

ரில்வின் சில்வா நாடு திரும்பிய பின்னர், 'ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியா-இலங்கை உறவுகள் மாறிவிட்டன' என்று கூறியிருப்பது, இரு தரப்பும் இரகசிய இணக்கப்பாட்டை எட்டியுள்ளதையே காட்டுகிறது.

இறுதியாக, ரில்வின் சில்வா என்ற பிடிவாதமான இடதுசாரித் தலைவரை இந்தியா தனது இராஜதந்திர வலையமைப்புக்குள் வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளது என்பது வெளிப்படை.

இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்படவுள்ள பேரிடர் மீட்புப் படை, டிஜிட்டல் திட்டங்கள் மற்றும் விவசாய இறக்குமதிகள் போன்ற விடயங்களில் ஜேவிபியைத் திருப்திப்படுத்த இந்தியா தனது மென்-அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

அரசாங்கப் பேச்சாளர் விஜித ஹேரத் இதுவொரு 'கட்சி சார்ந்த விஜயம்' என்று கூறித்தட்டிக்கழித்தாலும், இலங்கையின் அதிகார மையத்தைச் செயற்படுத்தும் 'பெலவத்தை' (ஜேவிபி தலைமையகம்) இப்போது டில்லியின் மொழியைப் பேசத் தொடங்கியுள்ளமையானது உள்நாட்டு அரசியலிலும், பிராந்திய பூகோள அரசியலிலும் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.