முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெரோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் மேற்படித் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மிகப் பெருமெடுப்பில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடத்திலிருந்து யாழ். நகர் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
அதன்பின்னர் முல்லைத்தீவை முடக்கிப் போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எம்.கே.சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரும், சி.வி.கே.சிவஞானம் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), தியாகராஜா நிரோஷ் (ரெலோ), பா.கஜதீபன் (புளொட்), க.சர்வேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எஸ்.கலையமுதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நடந்தது என்ன?
முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
உயிர் அச்சுறுத்தல் காரணமாகவும் அதிக அழுத்தம் காரணமாகவும் தான் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி T. சரவணராஜா நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் கடந்த 23 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பதவி துறந்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய நீதவான், கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அண்மைக்காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள் நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.குருந்தூர் மலை விவகாரத்துடன் தொடர்புடைய வழக்கு, கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் என்பன இதில் பிரதானமானவை.
நீதி அமைச்சரின் கருத்து
” நீதிபதி சரவணராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 5 வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.இந்த வழக்குகளின் பிரதிவாதி என்பதனாலேயே இதற்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக நீதிபதி தனது விருப்பத்தின் பெயரில் சட்டமா அதிபரை சந்திப்பதற்கு அவர் சென்றுள்ளார்.
அவருக்கு உயிர் அச்சுற்றுத்தல் இருந்திருந்தால், நீதிபதி என்ற வகையில் அதற்காக பிடியாணை பிறப்பிப்பதற்கான இயலுமை அதிகாரம் அவருக்கு இருந்தது.
நீதிபதி T.சரவணராஜா ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பிற்கு வந்து தனது காரை விற்றுள்ளதாகவும் அவர் மேலைத்தேய நாடுகளின் இரண்டு தூதுவர்களை சந்தித்துள்ளார்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சட்டமா அதிபர் தரப்பில் இருந்துகூட நீதவானுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நீதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உத்தரவு
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜா தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!