ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மட்டும் அல்ல ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டமும் சூடுபிடிக்கின்றது. தேர்தல் தொடர்பான கருத்தாடல் இடம்பெறுவதே அரசியல் களம் இவ்வாறு சூடுபிடிப்பதற்கு பிரதான காரணமாகும். அதேபோல மொட்டு கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையும், அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் தமக்கு என்ன நடக்கும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் கவலையில் இருப்பதும் இதற்கு மற்றுமொரு காரணமாகும்.
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் விருந்துபசாரங்களின்போதுகூட கொந்தளிப்பு நிலை ஏற்படுகின்றது. அண்மையில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றின்போது இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கிடையிலான மோதல் இதற்கு சான்றாகும்.
இந்நிலையிலேயே கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளுங்கட்சி குழு கூட்டத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தின்போது ஜனாதிபதி முன்னிலையிலேயே சரமாரியாக விமர்சனக் கணைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ச ஆகியோர்
தொடுத்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவை இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியேற்பட்டது. உண்மையில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை அறிய முற்பட்டோம். முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் மகனிடம் இது தொடர்பில் வினவினோம்.
“எனது தந்தைதான் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர். அதேபோல யட்டிநுவர தொகுதி அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் அவரே செயற்படுகின்றார். எனினும், அண்மையில் தந்தையிடமிருந்து அப்பதவி பறிக்கப்பட்டு, அது மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யட்டிநுவர தொகுதி அபிவிருத்தி குழுவின் தலைவராக எனது தந்தை இருந்தபோது வீதிகள் அபிவிருத்திக்கென 55 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அப்பதவிக்கு மஹிந்தானந்த வந்த பின்னர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார். இது தொடர்பிலேயே எனது தந்தை நாடாளுமன்ற குழு கூட்டத்தின்போது கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் அப்பிரச்சினை முடிந்துவிட்டது. ஆனால் கூட்டம் முடிந்த பிறகு எனது தந்தையை மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் எனது தந்தை கீழே விழுந்துள்ளார்.
இத்தாக்குதலால் எனது தந்தையின் கால் பகுதி முறிந்துள்ளது . இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 4 ஆம் திகதி சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
இச்சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்த ஆளுத்கமகேவை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை . எனினும், கூட்டம் முடிந்த பின்னர் குணதிலக எம்.பியின் “கொலரை” பிடித்து நீ என்ன கூறினாய் என வினவினேன் என ஊடகமொன்றுக்கு மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். இதன்போது பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்கிரம, தாக்க வேண்டாம் எனக் கூறி குணதிலக்கவை பின்நோக்கி இழுத்தபோது இருவரும் விழுந்துவிட்டனர் எனவும் மஹிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சி குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் எழுப்பட்ட கேள்விகளுக்காக கூட்டம் முடிந்த பின்னர் தாக்குதல் நடத்துவதுதான் ஜனநாயகமா? சிரேஷ்டத்துவத்தின் தன்னைவிட மூத்த உறுப்பினர் ஒருவரை அதுவும் தனது மாவட்ட சகாவை மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தாக்குவாரெனில்; தனக்கு வாக்களித்த மக்கள் முன்னிலையில் அவர் எவ்வாறு செயற்படக்கூடும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
இச்சம்பவத்தின் பின்னர் கடந்த ஜுன் 5 ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்கான நாடாளுமன்ற மற்றும் அவரின் மகன் ஆகியோர் அது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர். இராணுவ வைத்திய சாலையில் உள்ள பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைiயை ஆரம்பித்திருக்க வேண்டும். இவ்வாறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று சாதாரண பிரஜையொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸார் பின்பற்றும் சாதாரண நடைமுறை இருக்கின்றது. அந்த நடைமுறை அனைவருக்கும் பொதுவானதெனில் இது பற்றி விசாரணை ஆரம்பமாகி இருக்க வேண்டும்.
தாக்குதலுக்கு இலக்கானார் எனக் கூறப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணியில் அவருக்கு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தினார் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது பொலிஸாரின் கடமையாகும். எனினும், இது விடயத்தில் சாதாரண நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது தெரிகின்றது. மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி ரணிலின் நெருங்கிய சகா என்பதா இதற்கு காரணம்?
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!