போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்களை கைது செய்யும் நோக்கிலும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை ‘வெற்றி’ இலக்கை அடையும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2024 ஜுன் மாத இறுதிக்குள் நாட்டில் மாற்றமொன்று தென்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார். எனவே, 2025 ஜுன் இறுதிவரை இந்த நடவடிக்கை தொடரும் என்பதை ஊகிக்க முடிகின்றது.
நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில், கடத்தலில் ஈடுபடும் மாபியாக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேபோல பாதாள குழுக்களும் ஒடுக்கப்பட வேண்டும். எனினும், யுக்திய என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நகர்வுகள்தான் சர்ச்சைக்குரிய காரணியாக உள்ளது.
யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இற்றைவரை பெண்கள் உட்பட 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றிவளைப்புகள் – தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கைதானவர்களில் ஆயிரத்து 300 இற்கு மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் சொத்து சேகரித்த விதம் பற்றியும் விசாரணைகள் தொடர்கின்றன.
சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கையின்போது ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட ஆட்கொல்லி போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்துகளில் இருந்து இதை அறியமுடிகின்றது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் தரப்பினர், யுக்திய என்பது ஊடகத்துக்கான கண்காட்சி நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்க முடியாத வகையிலேயே உள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்படுவதாக தெரியவில்லை. கொக்கெய்ன் போதைப்பொருளை இலக்கு வைத்து தேடுதல் நடத்தப்படுவதாகவும் தெரியவில்லை.இலங்கையில் கொக்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதில்லையா என்ற கேள்வி எழுகின்றது.
கோடிஷ்வரர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் நட்டத்திர ஹோட்டல்களுக்கு சென்று (அனைவரும் அல்ல) கொக்கெய்ன் பாவிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகும் சூழ்நிலையில், யுக்திய நடவடிக்கையின்போது கொக்கெய்னை இலக்கு வைத்து தேடுதல் நடத்தப்படவில்லையா? இது பற்றி பொறுப்பானர்கள் பதிலளிக்க வேண்டும்.
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டைக்கு எதற்காக பொலிஸார் ஊடகக் குழுக்களை அழைத்துச்செல்கின்றனர்? போதைப்பொருள் பாவிப்பவர்களின் பெற்றோர், மனைவி ஆகியோரையும் ஊடகவியலாளர்கள் வீடியோ எடுக்கின்றனர். ஊடக நெறிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டு, சாதாரண மக்களும் பலவந்தமாக குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும்வரை அவர் சந்தேக நபர்தான். ஆனால் ஊடகங்கள் தன்னிச்சையாக தண்டனை, வழங்கி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்றன.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!