” தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும்.” – என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

புத்தாண்டு மலர்ந்துள்ள கையோடு இலங்கையில் அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பே இதற்கு காரணம்.

அறிவிப்பு வெளியானாலும், வெளியாகாவிட்டாலும் இலங்கை அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்குள் ஜனாதிபதியொருவர் பதவியேற்றிருக்க வேண்டும்.

அப்படியானால் ஜுலை மாத இறுதியாகும்போது ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை தற்போதைய ஜனாதிபதி விடுக்க வேண்டும்.

எனவே, ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பமான நிலையில், இன்று இவ்வாண்டுக்கான முதலாவது கட்சி தாவலும் இடம்பெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான ஷான் விஜயலால் தி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பிலும் ஊடகங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் பொது வேட்பாளர் குறித்த யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிள்ளையார் சுழியை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் போட்டுள்ளார்.

இந்த தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள சிரேஷ்ட இடதுசாரி தலைவரான சிறிதுங்க ஜயசூரிய கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

” அரசியல் களத்தில் நாடிபிடித்து பார்ப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் ஏற்பாடுகள் இடம்பெறும். அந்தவகையிலேயே தமிழ் பொதுவேட்பாளர் விடயமும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது நடைமுறை சாத்தியமற்ற விடயம். அதைப்பற்றி பேசி பயன் இல்லை.

ஏனெனில் இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலானது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியாகவே அமையவுள்ளது.

கடைசியாக மாலைதீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்நிலைமையே காணப்பட்டது. அந்தவகையில் மொட்டு கட்சி தரப்புக்கு சீனாவும், சஜித் தரப்புக்கு இந்தியாவும் பின்புலமாக இருக்கும்.

தற்போது பொதுவேட்பாளர் பற்றி பேசுபவர்கள் இந்திய கோரிக்கையை ஏற்று, அந்நாடு சார்பு வேட்பாளரையே ஆதரிப்பார்கள்.” – என்பதே சிறிதுங்கவின் கருத்து.

அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு ‘சுயநிர்ணய’ உரிமையை அடிப்படையாகக்கொண்ட அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள கட்சி எமது கட்சியாகும். இங்குள்ள கட்சிகளிடம் இந்த கொள்கை இல்லை. எனவே, சுயநிர்ணய உரிமையை மையப்படுத்தியதாக எமது கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கலாம். அதற்கான சுதந்திரம் உள்ளது. பொதுவேட்பாளரும் வரலாம். ஆனால் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலை உள்ளதா என்பது பற்றி ஆராய வேண்டும். பிரதான வேட்பாளர்களில் தமது பிரச்சினைகளை தீர்க்ககூடியவருடன் பேச்சு நடத்தி அவரை ஆதரித்து, இலக்குகளை அடைவதே ஏற்புடைய நடவடிக்கையாகும்.