மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தற்போது உருவாகியுள்ள பதற்றமான போர்ச் சூழல், உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிப் பாதையிலும் புதிய சவால்களைத் தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கைக்கு, இந்தப் புவிசார் அரசியல் நெருக்கடி என்பது இறக்குமதிச் செலவு அதிகரிப்பு, ஏற்றுமதிப் பாதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எனப் பல வழிகளில் அழுத்தங்களைக் வழங்க ஆரம்பித்துள்ளது. 

இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர் சுட்டிக்காட்டியுள்ளது போல, சர்வதேச கப்பல் நிறுவனங்கள் காப்பீட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேலதிகக் கட்டணங்களை விதிக்கத் திட்டமிட்டுள்ளமை, நாட்டின் இறக்குமதிச் செலவீனங்களை பாரியளவில் உயர்த்தும் காரணியாக மாறியுள்ளது.

குறிப்பாக, காப்பீட்டுக் கட்டணங்கள் உயரும்போது, அந்தச் சுமை இறுதியில் நுகர்வோர் மீதே சுமத்தப்படுகிறது. இது சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரக் காரணமாக அமைவதோடு, ரமலான் மற்றும் சித்திரை புத்தாண்டு போன்ற முக்கியமான பண்டிகைக் காலங்களில் நுகர்வோருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடல்வழிப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, போர்ச் சூழலால் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக 4 நாட்களில் இலங்கையை வந்தடைய வேண்டிய கப்பல்கள், தற்போது 6 முதல் 10 நாட்கள் வரை எடுத்துக்கொள்கின்றன.

இந்தத் தாமதமானது விநியோகச் சங்கிலியில் பாரிய இடைவெளியை உருவாக்கி, சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தும். இலங்கையின் தேயிலைத் துறைக்கு மத்திய கிழக்கு நாடுகள் மிக முக்கியமான சந்தையாகும்.

குறிப்பாக ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் இலங்கையின் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்கின்றன. போர் காரணமாக ஏற்றுமதிப் பாதைகள் முடங்கியுள்ளதால், தேயிலை உற்பத்திகளை துறைமுகங்களுக்குக் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு ஏற்றுமதியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளையும் விசேட சலுகைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகும்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் ஓரளவு நிம்மதியான தகவல்களை வழங்கியுள்ளது. இலங்கைக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருவதால், அவை ஹார்முஸ் நீரிணையை நேரடியாகப் பயன்படுத்துவதில்லை.

இதனால் எரிபொருள் விநியோகத்தில் உடனடித் தட்டுப்பாடு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜானக ராஜகருணா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், போர் நீடித்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழலில், இலங்கையின் எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு விலைகளும் அதிகரிக்கக்கூடும். இது போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகளை மேலும் உயர்த்தும்.

மசகு எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் நைஜீரியா அல்லது அமெரிக்கா போன்ற மாற்று நாடுகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும், இது மேலதிக போக்குவரத்துச் செலவுகளைக் இயல்பாகவே தோற்றுவிக்கும்.

விமானப் போக்குவரத்துத் துறையும் இந்தப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டதால் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் தற்போது மாற்றுப் பாதைகள் ஊடாக இயக்கப்படுவதால், பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது.

இது சுற்றுலாத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கைக்கு வரவிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தாமதப்படுத்தியுள்ளது. இச்சூழ்நிலையைக் கையாள, நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை இரு வாரங்களுக்கு நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க விசேட அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தூதரகங்கள் 24 மணிநேரமும் செயற்படப் பணிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த நெருக்கடியின் மத்தியிலும் இலங்கைக்கான சில சாதகமான வாய்ப்புகள் தென்படுகின்றன. வளைகுடா நாடுகளின் துறைமுகங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், சர்வதேசக் கப்பல்கள் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை மாற்று மையங்களாகப் பயன்படுத்த முனையலாம்.

இதனைச் சரியாகப் பயன்படுத்தினால், கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை மேலதிக வருமானத்தைப் பெற முடியும். அதற்கான அதிகளவான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

புள்ளிவிவரங்களின்படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், நடப்புக் கணக்கு வருமானமும் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. வாகன இறக்குமதி கட்டுப்பாடு மற்றும் உற்பத்தித் துறை வளர்ச்சி இதற்கு வலுசேர்த்துள்ளன.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் என்பது இலங்கைக்கு ஒரு சவாலான அதேவேளை நுணுக்கமாகக் கையாள வேண்டிய காலப்பகுதியாகும். அரசாங்கம் துரிதமான திட்டமிடல்களை முன்னெடுத்து, சந்தையில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதன் மூலம் இந்தப் பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

சர்வதேச ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளை ஒரு வாய்ப்பாக மாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர நகர்வுகளை இலங்கை தற்போது முன்னெடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக அணிசேராக்கொள்கையை பின்பற்றுவதாக கூறும் தற்போதைய ஆட்சியாளர்களும் அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் மோதல்கள் குறித்து கொள்கை ரீதியான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்காமை சங்கடமான நிலைமையை தோற்றுவித்துள்ளது.