மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சமாகத் திகழ்ந்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் துல்லியமான கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பல தசாப்தங்களாக உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர்களில் ஒருவராகக் கருதப்பட்ட காமேனியின் வீழ்ச்சி, நவீன உளவுத்துறையின் வெற்றியையும் ஈரானிய பாதுகாப்பு கட்டமைப்பின் மறைமுகப் பலவீனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.
காமேனியின் பாதுகாப்பு என்பது வெறும் ஆயுதங்களைக் கொண்டது மட்டுமல்ல, அது 'இரகசியம் மற்றும் கணிக்க முடியாத தன்மை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் அந்த அடிப்படைத் தூண்களே தகர்க்கப்பட்டன.
மேற்கத்திய உளவு அமைப்புகளால் கூட கமேனியை ஒரு தருணத்தில் பிடிக்க முயலவில்லை. மாறாக, பல ஆண்டுகளாக அவரது 'வாழ்க்கை முறை தாளத்தை' அவர்கள் அவதானித்து வந்தனர். அவர் எப்போது தனது நிலத்தடி பதுங்கு குழிக்குள் செல்வார், எப்போது முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பார் என்பது போன்ற தரவுகள் திரட்டப்பட்டன.'
'நாங்கள் ஒருவரைப் பிடிக்கப் பார்ப்பதில்லை, அவரைச் சுற்றியுள்ள அமைப்பைப் புரிந்துகொள்ளப் பார்க்கின்றோம்;' என்ற உளவுத்துறை அதிகாரி ஒருவரின் கூற்று, இத்தாக்குதலின் ஆழத்தை உணர்த்துகிறது.
அடுத்து உளவுத்துறையின் சமிக்ஞை நுணுக்கம் மிக முக்கியமானது. காமேனியின் தகவல் தொடர்புகள் அனைத்தும் மிக உயர்தரக் குறியீடாக்கம் செய்யப்பட்டவை. அவ்வாறான நிலையில்
ஆனால், நவீன உளவுத்துறை செய்தியின் உள்ளடக்கத்தை விட, செய்திகள் பரிமாறப்படும் 'சூழலை' அதிகம் நம்பியது. கமேனியின் அலுவலகத்தில் இருந்து திடீரென தகவல் பரிமாற்றம் அதிகரிப்பதும், முக்கியமான இராணுவத் தளபதிகளின் இருப்பிடங்களில் இருந்து சமிக்ஞைகள் ஒரு புள்ளியில் குவிவதும் ஒரு பாரிய கூட்டம் நடைபெறப்போவதை உறுதிப்படுத்தின. இந்த 'சமிக்ஞைகளின் அடர்த்தி' கமேனியின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காண்பித்துள்ளது.
மனித உளவுத்துறையின் ஊடுருவலும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தொழில்நுட்பத்தின் பங்களிப்பு ஒருபக்கம் இருக்க, ஈரானின் மிக உயர்மட்டப் பாதுகாப்புப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உள்ளே இருந்தே தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக காணப்படுகின்றது.
கமேனி தனது பதுங்கு குழிக்குள் இருக்கும் நேரத்தைத் துல்லியமாகக் கணித்து, ஏவுகணைகள் பாயும் நேரத்தை நிர்ணயித்தது தக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றால் உள்வீட்டுத் தகவலின்றி அது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது ஈரானிய பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவியுள்ள அமெரிக்க, இஸ்ரேல் உளவுத்துறை வலைப்பின்னலை வெளிப்படுத்துகிறது.
இதேநேரம், 2025இல் நடைபெற்ற போரின் படிப்பினைகள் மிக முக்கியமானவை. 2025 ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிகழ்ந்த குறுகிய கால மோதல், ஒரு 'நிஜ உலகத்தில் நடைமுறை ரீதியான அழுத்தச் சோதனையாக' அமைந்தது.
அந்த நெருக்கடியான நேரத்தில் ஈரான் தனது தலைவர்களை எப்படி இடமாற்றம் செய்கிறது, அவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான பாதைகள் எவை என்பதை இஸ்ரேலிய உளவுத்துறை கவனமாகப் பதிவு செய்து கொண்டது. அந்தத் தரவுகளே பெப்ரவரி 28 தாக்குதலுக்கு வரைபடமாக அமைந்திருக்கின்றன.
பெப்ரவரி 28 காலை 9:40 மணியளவில், இஸ்ரேலிய வான்படை மற்றும் அமெரிக்காவின் ஏவுகணைப் பிரிவுகள் ஒருங்கிணைந்து தாக்குதலைத் தொடுத்தன. தெஹ்ரானின் மையப்பகுதியிலுள்ள 'பெயிட் ரக்பாரி' வளாகம் பல திசைகளில் இருந்து தாக்கப்பட்டன.
ஈரானின் எஸ்-300 மற்றும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுவதற்கு முன்னரே, ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகள் இலக்கை எட்டின.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் நிலத்தடியில் பல மீட்டர்கள் ஆழத்தில் உள்ள பதுங்கு குழிகளைத் துளைத்துச் செல்லும் திறன் கொண்டவையாக இருந்தன.
கமேனி தனது அலுவலகத்தில் இருந்த அதேதருணத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர் தப்பிச் செல்ல எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.
ஒரு நாட்டின் அதியுயர் தலைவராகக் கமேனி எதிர்கொண்ட மிகப்பெரிய சவால், பாதுகாப்பிற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான சமநிலையாகும். அவர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் நாட்டை ஆள முடியாது. அதிகாரிகளுடன் அவர் நடத்திய நேரடிச் சந்திப்புகள், பாதுகாப்பில் தவிர்க்க முடியாத அளவுக்கு ஓட்டைகளை உருவாக்கின.
நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் ஆளில்லா விமானங்களின் வளர்ச்சியால், ஒரு மனிதன் நீண்ட காலத்திற்குத் தன்னை மறைத்துக் கொள்வது சாத்தியமற்றதாகிவிட்டது.
அதாவது, நிர்வாகத் தேவைகளுக்காகத் தலைவர்கள் ஓரிடத்தில் குவியும்போது, அதுவே அவர்களின் மிகப்பெரிய பலவீனமாக மாறுகிறது. ஈரானின் பாதுகாப்பு அமைப்பானது கமேனியின் உடலைக் காப்பதில் காட்டிய தீவிரத்தை, அவரது இருப்பிடம் குறித்த தகவலைக் காப்பதில் காட்டத் தவறிவிட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இத்தாக்குதலை உறுதிப்படுத்தியதோடு, 'ஈரானிய மக்களின் விடுதலையும், அணு ஆயுத அச்சுறுத்தலின் முடிவும் தொடங்கிவிட்டது' என்று அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு, பிராந்தியத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய தரப்பில், காமேனியின் மரணம் 'தீமையின் அச்சினை உடைப்பதற்கான முதல்படி' எனக் குறிப்பிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.
தற்போது, அலிரேசா அராஃபி, இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது கடமையை பொறுப்பேற்று 24 மணிநேரம் நிறைவடைவதற்கு முன்னரே கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் ஈரானிய தரப்பில் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும் தலைமைத்துவ வெற்றிடத்தால் ஈரான் நிலைதடுமாறினாலும், அந்நாட்டு இராணுவம் இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் ஊடுருவ முயற்சி செய்து வருகிறது.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைத்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் முழு அளவிலான போர்க்களமாக மாறியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை, காமேனியின் படுகொலைக்கு 'வரலாறு காணாத பதிலடி' கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது. அதற்கமைய அது மத்திய கிழக்கில் உள்ள தளங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த மோதலால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டொலர்கள் அதிகரித்துள்ளது.
இது இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. விமான போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்பட்டுள்ளதால், சர்வதேசப் பயணங்கள் மற்றும் சரக்குக் கையாளல் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
மத்திய கிழக்கில் உள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் இப்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
கமேனியின் படுகொலை என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அதுவொரு சித்தாந்தத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு அமைப்பின் பலவீனம் என்பது அதன் 'நிர்வாகத்தேவை' மற்றும் 'அதிகாரப் பகிர்வு' ஆகியவற்றில் அடங்கியுள்ளது. நாட்டை ஆள வேண்டிய கட்டாயம் ஒரு தலைவரைத் தனிமைப்படுத்துவதைத் தடுக்கிறது. அந்தத் தருணங்களே அவருக்குப் பலவீனமாக மாறுகின்றன.
இந்தப் போர் எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை என்றாலும், மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கம் ஒரு பாரிய சரிவைச் சந்தித்துள்ளது என்பது மட்டும் உறுதி.
உளவுத்துறையும் தொழில்நுட்பமும் இணைந்து ஒரு பேரரசின் தூணையே வீழ்த்திவிட்டன. 2026ஆம் ஆண்டின் இச்சம்பவம், எதிர்காலப் போர்கள் இரத்தத்தால் மட்டுமல்ல, தகவல்களாலும் தீர்மானிக்கப்படும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!