2026ஆம் ஆண்டின் ஆரம்பமே அமர்க்களமாகத்தான் உள்ளது. தென்னமெரிக்கக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றிப்போட்ட அமெரிக்க பாரிய இராணுவ நடவடிக்கை, உலக வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவிற்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்துவந்த பனிப்போர், இமைமூடித் திறப்பதற்குள் மின்னல் வேகத்தாக்குதலின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதம் ஒரு ஹொலிவுட் திரைப்படக் காட்சியைப் போலவே அரங்கேறியது.
வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்தும், அந்நாட்டில் ரஷ்யா மற்றும் சீனாவின் பிடிமானத்தை உடைக்கும் நோக்கிலும் திட்டமிடப்பட்ட இந்த 'ஒபரேஷன் லிபர்டாட்' நடவடிக்கை, ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தின் அதிகாரம் எவ்வாறு சில மணி நேரங்களில் சரிந்து விழும் என்பதற்குச் சாட்சியாக அண்மித்த வெனிசுவேலா சம்பவம் உள்ளது.
அதிகாலை வேளை, காரகாஸ் நகரின் வான்பரப்பு ஒருவித மயான அமைதியில் இருந்தது. ஆனால், கரீபியன் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் 'யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட்' விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து எப்-35 போர் விமானங்கள் சீறிப்பாய்ந்தபோது அந்த அமைதி கலைந்தது.
தாக்குதல் தொடங்குவதற்குச் சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, அமெரிக்காவின் அதிநவீன சைபர் பிரிவினர் வெனிசுவேலாவின் முழுமையான தகவல் தொடர்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்பை முடக்கினர்.
இதனால் வெனிசுவேலா இராணுவத்தால் ரேடார் சமிக்ஞைகளைக்கூடக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வானிலிருந்து ஏவப்பட்ட துல்லியமான ஏவுகணைகள், காரகாஸ் நகரைச் சுற்றியிருந்த மதுரோவின் தற்காப்பு அரண்களையும் ஏவுகணைத் தளங்களையும் நிலைகுலையச் செய்தன.
தரைமார்க்கமாக அல்லாமல், வான்வழியாக நேரடியாக இலக்கைத் தாக்கும் உத்தியை அமெரிக்கப் படைகள் கையாண்டன. 'பிளாக் ஹாக்' ஹெலிகொப்டர்களில் வந்திறங்கிய அமெரிக்காவின் எலைட் 'நேவி சீல்ஸ்' மற்றும் 'டெல்டா போர்ஸ்' குழுக்கள், ஜனாதிபதி மாளிகையான 'மிராப்ளோரஸ்' பகுதியைச் சூழ்ந்துகொண்டன. மாளிகையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரோவின் விசுவாசப் படைகளுக்கு சற்றும் எதிர்பாராத விதமாக இந்தத் தாக்குதல் அமைந்தது.
புகைக்குண்டுகள் மற்றும் அதிர்வு வெடிகுண்டுகள் முழங்க, அமெரிக்கப் படையினர் மாளிகையின் ஒவ்வொரு தளத்தையும் மிக வேகமாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஜனாதிபதி மதுரோ அந்தச் சமயம் மாளிகையின் நிலத்தடிப் பதுங்கு குழியில் தஞ்சம் புக முயன்றுகொண்டிருந்தார். ஆனால், வெப்ப உணரிக் கருவிகள் (Thermal Sensors)) மூலம் அவர் இருக்கும் இடத்தை அமெரிக்கச் சிறப்புப் படையினர் மிகத் துல்லியமாகக் கண்டறிந்தனர்.
நிலத்தடி அறையின் கனரக இரும்புக்கதவுகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட அந்த நொடி, மதுரோவின் 'அதிகாரம்' உத்தியோகபூர்வமாகச் சரிந்தது. பதுங்கு குழியின் மூலைக்குள் திகைத்துப் போய் நின்ற மதுரோவை, அமெரிக்க வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
அவர் எவ்விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. 'நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்' என்ற ஒற்றை வாசகத்துடன் அவருக்குக் கைவிலங்கிடப்பட்டது. உலகையே மிரட்டிக்கொண்டிருந்த ஒரு நாட்டின் தலைவரை, சாதாரணக் கைதியைப் போல அமெரிக்க வீரர்கள் ஹெலிகொப்டரில் ஏற்றிச் சென்ற காட்சி, அங்கிருந்த பாதுகாப்பு கமராக்களில் நேரலையாக வொஷிங்டனுக்கு ஒளிபரப்பப்பட்டது.
இந்தத் தாக்குதல் நடவடிக்கையானது டொனால்ட் ட்ரம்பின் 'அமெரிக்கா முதலிடம்' என்ற கொள்கையின் அதிரடி வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. வெனிசுவெலாவின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்ட இராணுவ நடவடிக்கையை அவர் துணிச்சலுடன் முன்னெடுத்தார்.
மதுரோ கைது செய்யப்பட்டு சில நிமிடங்களிலேயே, ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் 'வெனிசுவேலா விடுதலை பெற்றுவிட்டது' என்று பதிவிட்டார். இந்தக் கைது நடவடிக்கை என்பது வெறும் நபர் ஒருவரைச் சிறையில் அடைப்பதல்ல, மாறாகத் தென்னமெரிக்காவில் நிலவிய ஒரு அரசியல் சித்தாந்தத்தையே வேரோடு பிடுங்கியெறியும் செயலாகும்.
மேலும், இந்த இராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்கா பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் மாளிகையின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கண்காணித்து, எந்தவொரு பொதுமக்களுக்கும் சேதம் ஏற்படாத வகையில் தாக்குதலை நடத்தியமையானது அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்தைப் பறைசாற்றியது.
மதுரோவைச் சுற்றி நின்ற பாதுகாவலர்களில் சிலர் நிலைகுலைந்து ஓடியதும், சிலர் எவ்விதப் போராட்டமும் இன்றி ஆயுதங்களைக் கீழே போட்டதும் வெனிசுவேலா இராணுவத்துக்குள் நிலவிய பிளவை வெளிப்படுத்தியது. மதுரோ கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த காரகாஸ் மக்கள், வீதிகளில் இறங்கி அமெரிக்கப் படைகளை வரவேற்றதோடு, நீண்டகாலப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தங்களுக்குக் கிடைத்த விடுதலையாக இதனைக் கொண்டாடினர்.
இருப்பினும், இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதியை வேறொரு நாட்டுப் படைகள் அத்துமீறி நுழைந்து கைது செய்வது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு முரணானது என்று ரஷ்யாவும் சீனாவும் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், வெனிசுவேலாவின் வீதிகளில் மக்கள் திரண்டு வந்து இந்த மாற்றத்தைக் கொண்டாடுவதை அமெரிக்கா தனது வெற்றிக்கான சான்றாக முன்வைக்கிறது. அத்தோடு, மதுரோவின் ஆட்சியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா வாதிடுகிறது.
வெனிசுவேலாவின் ஆட்சியை புதிய இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக எரிசக்திச் சந்தையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, மதுரோ அமெரிக்காவுக்;கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள பெடரல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை சர்வதேச நீதித்துறையில் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் படைகள் மதுரோவை ஒரு 'போதைப்பொருள் மன்னன்' என்ற சட்டரீதியான முத்திரையுடன் கைது செய்திருப்பதன் மூலம், அவரை சர்வதேசக் குற்றவாளியாக முன்னிறுத்த வொஷிங்டன் முயல்கிறது.
2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடந்துள்ள இந்தத் தாக்குதல், உலக அரசியலில் 'வலிமையானவனே சட்டம்' என்ற யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது. மதுரோவின் வீழ்ச்சி, லத்தீன் அமெரிக்காவிலுள்ள பிற சர்வாதிகாரப் போக்குள்ள நாடுகளுக்கும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
இந்த மின்னல் வேக இராணுவ நடவடிக்கை, ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையில் மைல்கல்லாகப் பார்க்கப்படுவதோடு, பிராந்திய சக்திகளின் ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவின் கரத்தை மீண்டும் ஓங்கச்செய்துள்ளது.
காரகாஸ் நகரில் தற்போது அமெரிக்க இராணுவத்தின் தற்காலிக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் திரும்புமா அல்லது புதியதொரு அதிகாரப் போட்டி மூளுமா என்பதை இனிவரும் நாட்களே தீர்மானிக்கப்போகிறது.

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!