நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியிருக்கும் பெறுபேற்று ரீதியான தாக்கம் தமிழர் அரசியலின் எதிர்காலம் பற்றிய கேள்வியை வெகுவாகத் தோற்றுவித்திருக்கின்றது என்பதை மறுதலிக்க இயலாது.
எண்கணித ரீதியாக தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியத்திற்குள் தான் இருக்கின்றது என்றும், இலங்கைத் தமிழரசுக்கட்சியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னரும் வடக்கு,கிழக்கில் அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள கட்சியாக இருக்கின்றதென்றும் மார்பு தட்டிக் கொள்ள முடியும்.
ஆனால் நடைமுறையில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை கையாள்வதற்கும், நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாகவும் ஆட்சியில் உள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினை கையாள்வதற்கான எவ்விதமான மூலோபாயங்களும் இல்லாத நிலையிலேயே தமிழர் அரசியல் தற்போது இருக்கின்றது என்பது கசப்பான யதார்த்தமாகின்றது.
போரின் பின்னரான இனக்குழுமமொன்று தன்னை தகவமைத்துக்கொள்கின்றபோது இவ்விதமான பின்னடைவுகளையெல்லாம் சந்திக்க வேண்டியேற்படும் என்பது பொதுப்படையாக புத்திஜீவிகளின் கருத்தியல் ரீதியான நிலைப்பாடுகளாக இருந்தாலும், போர் நிறைவுக்கு வந்து 15 ஆண்டுகளாகின்றபோதும் இன்னமும் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான திட்டங்களில்லாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த நிலைமைகளுக்கு தமிழ் மக்கள் ஆணைவழங்கிய அரசியல்வாதிகள் தான் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறான நிரந்தரமான தீர்வினை தமது இறுதி இலக்காக கொண்டு பயணித்து வருகின்ற தமிழினத் தலைவர்கள் அதற்காக கையில் வைத்திருக்கின்ற பாதைவழிபடம் என்ன? பொறிமுறைகள் என்ன? உத்திகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கத் தலைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, அனைத்து தமிழ் மக்களின் தலைவர்களும் பூகோள ரீதியாகவும், கலாசார, பண்பாட்டு ரீதியாகவும் தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியாவின் வகிபாகம் தொடர்பில் அதிகமான கரிசனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
அவ்வாறிருக்கின்றபோதும், அவர்கள் கடந்த காலத்தில் காணப்பட்ட சில படிப்பினைகளின் அடிப்படையில் தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்னமும் திட்டமிட்டு தீர்க்கமாக நகரமுடியாத அளவிற்கு மந்த நிலையில் காணப்படுவதானது, தமிழ் மக்களுக்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துக்களை உருவாக்குவதாகவே அமைகின்றது.
அந்த வகையில் அரசியல் ஆய்வாளரும், இராஜதந்திரியுமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க தமிழ்த் தேசிய அரசியல்வதிகள் தொடர்பில் தனது பார்வையொன்றை செலுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே வடக்கு,கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டபோது அதில் அமைச்சுப்பதவியை ஏற்றுச் செயற்பட்ட ஒருவராக இருக்கின்றார்.
அதுமட்டுமன்றி, நீண்டகாலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்;திப் போராடிய சில இயக்கங்கள் பற்றிய புரிதலையும், இந்தியாவுடன் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் இயக்க தலைவர்கள் கொண்டிருந்த உறவுகள் சம்பந்தமாகவும் ஆழமான அனுபவத்தைக் கொண்டிருக்கின்றார்.
அத்தகையவர், சில விடயங்களை தற்போது பகிரங்கமான வெளியில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பாக, அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் தமிழ் அரசியல்வாதிகள் எவ்விதமாக நகரமுடியும் என்பதற்கான ஒரு மீளாய்வாகவும் இதனைக் கொள்ள முடியும்.
அந்தவகையில், ‘தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னணியில் உருவான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அடுத்து இரண்டு சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
அச்சமயத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் 13ஆவது திருத்தச்சட்டத்தினை கடுமையாக எதிர்த்தார்கள். சிலர் 13ஆவது திருத்தச்சட்டத்தினை உடன் அமுலாக்குவதற்கு முயற்சித்தார்கள்.
ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் எவரும் அதனை முறைப்படியாக நடைமுறைப்படுத்தி பரிநாமரீதியான வளர்ச்சியை அடைந்து அதிகாரப்பகிர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கவில்லை.
இதன்காரணமாக, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பத்து பாவச் செயல்களை இழைத்துள்ளார்கள் என்பது எனது நிலைப்பாடாகிறது. அவர்கள் செய்துள்ள அந்தப் பத்து பாவச்செயல்களை நான் பட்டியலிடுகின்றேன்’ என்று அவர் முதலில் குறிப்பிடுகின்றார்.
அவருடைய பட்டியலில் முதலாவதாக, தமிழ்நாடு வழியாக டில்லிக்கு ஆணையிட முடியும் என்று கருதியமையாகும். இரண்டாவதாக, புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு காணப்படும் மேற்கத்தேய ஆதரவானது டில்லியை விடவும் முக்கியமானது என்று கருதியமையாகும்.
மூன்றாவதாக, தெற்கில் இந்திய எதிர்ப்பு மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றுடன் ஜே.வி.பி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில், மாநில அதிகாரத்துக்கான அதிகாரப்பகிர்வு நூலில் தொங்கிக்கொண்டிருந்த தருணத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண அரசு உடனடியாக அமுலாக்குவதற்கு முனைந்தமையாகும்.
நான்காவதாக, இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக தனிநாடு கோரிப்போரிட்டு வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதன் ஊடாக 13ஆவது திருத்தத்தைக் கடந்து அப்பால் செல்லதற்கு முயன்றமையாகும்.
ஐந்தாவதாக, தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு சாதகமான மனோநிலையில் இருந்த இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அந்த ஆதரவைப் பெறுவதற்கு முயன்றமையாகும்.
ஆறாவதாக, பிரபாகரன் மரணிக்கப்பட்டு விடுதலைப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாகவோ, அல்லது தொடக்கப்புள்ளியாகவோ 13ஆவது திருத்தச்சட்டத்தினை நிராகரித்தமையாகும்.
ஏழாவதாக, உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இணைத்தலைவர்களாக நேர்வே மற்றும் தென்னாபிரிக்கா செயற்பட்ட காலத்தில் சந்திரிகா, ரணில் போன்றவர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை விடுத்துச் செயற்படுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தமையாகும்.
எட்டாவதாக, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக சீனாவுக்கு எதிரானதொரு அரணாக அதனை காண்பித்துக் கொண்டிருக்கின்றமையாகும்.
ஒன்பதாகவதாக, டில்லியானது தனது பொருளாதார மற்றும் மூலோபயங்களை பாதுகாப்பதற்காக நகர்ந்தபோது 13ஆவது திருத்தச்சட்டத்தினை செயற்படுத்துவதில் தாமதமாக இந்தியாவின் உதவியை நாடும் போக்காகும்.
பத்தாவதாக, சமஷ்டி முறைமையைக் கோரிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் டில்லியுடனான இணைப்பினை துண்டிக்கும் போக்கானது அதிகாரப்பகிர்வு மறைந்து போவதற்கு காரணமாகின்றது’ ஆகிய விடயங்கள் அவரின் பட்டியலில் பிரதான இடத்தினைப் பிடித்திருக்கின்றன.
தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் அல்லது மாகாண ரீதியான அதிகாரப்பகிர்வுக்கு வாய்மொழி ரீதியான உறுதிமொழியைக் கூட வழங்காத தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.
அதுமட்டுமன்றி குறித்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கு தமிழர்கள் இல்லை, அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது. அரசுக்கு தமிழ்தேசியம் சார்ந்த நாடுகளிடத்தில் நட்பற்ற நிலைமையும் காணப்படுகின்றது. இத்தகைய அரசாங்கமொன்றை கையாள வேண்டிய நிலைமையானது தற்போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியவாதத்தின் சுயாட்சி, அதியுச்ச அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட வலியுறுத்தல்களுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில்கள் மட்டுமல்ல அங்கீகாரம் கூட இல்லை. மேலும் 1983ஆம் ஆண்டில் தோற்றம்பெற்ற இந்திய இலங்கை படைகளுக்கு எதிரான தமிழ் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியால் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எதனையும் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை.
ஒற்றையாட்சியை நிராகரித்ததன் காரணமாக, 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு சமஷ்டி நோக்கி செல்ல முடியாத நிலைமைகளும் ஏற்பட்டுள்ளதோடு தற்போது ஒற்றையாட்சிக்குள் 13ஐயும் இழந்துவிடும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒற்றையாட்சிக்கு வெளியில் அதிகாரப்பகிர்வினைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகளும் காணப்படவில்லை.
சிரியாவின் அசாத்தும், சுயாட்சியைப் பெற்றுக்கொண்ட குர்து இனத்தவரும் வொஷிங்டன் அல்லது மொஸ்கோவை விடவும் தமது அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அண்டைநாடான துருக்கி மிகவும் பொருத்தமானது என்பதையே புரிந்துகொண்டனர்.
வடக்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் ஒத்துழையாமையானது இந்திய, இலங்கை உறவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து தமிழர்கள், அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் ஆகிய விடயங்கள் நீக்கப்படுவதற்கு காரணமாகின்றது.
தற்போது தமிழ்த் தேசிய அரசியல்வதிகள் வரலாற்று ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதும், டில்லியின் இணைப்பை துண்டிப்பதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப்பகிர்வுக்கான வெளிப்புற செல்வாக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தமது அடுத்தகட்ட நகர்வினை முறையாக தகவமைக்காது, வெளிப்புற அழுத்தங்களைக் கோருவதாலோ, தமிழ்நாடு ஊடாக டில்லியை வழிக்குக் கொண்டு வரமுடியும் என்று கருதுவதோ ஒரு முறையான வெற்றியைப் பெற்றுத்தராத இராஜதந்திர நகர்வாகவே இருக்கும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!